Siren Review in Tamil: அறிமுக இயக்குநர் அந்தோணி பாக்யராஜ் இயக்கத்தில் ஜெயம் ரவி,கீர்த்தி சுரேஷ், யோகிபாபு, அனுபமா பரமேஸ்வரன், சமுத்திரகனி உள்ளிட்ட நடிகர்கள் நடிப்பில் வெளியாகியுள்ள சைரன் (Siren) படத்தின் விமர்சனம் குறித்து இங்கு காணலாம். இந்த படத்துக்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார். இப்படம் இன்று தியேட்டரில் வெளியாகிறது. 


படத்தின் கதை


செய்யாத குற்றத்திற்காக ஆம்புலன்ஸ் டிரைவராக இருந்து ஆயுள் தண்டனைக் கைதியான ஜெயம் ரவி 14 ஆண்டுகளுக்குப் பின்னர் 14 நாட்கள் பரோலில் வீட்டிற்கு வருகின்றார். வீட்டில் இருக்கும் அனைவரும் அவரைப் பார்க்க ஆசையாக இருக்கும்போது, ஜெயம் ரவியின் மகள், “கொலைகார அப்பாவைப் பார்க்க மாட்டேன்” எனக் கூறி வீட்டில் இருந்து வெளியே போகிறார். தனக்கு கிடைத்த பரோலில் தனது குடும்பத்தை பார்ப்பது மட்டும் இல்லாமல், தான் 14 ஆண்டுகள் சிறையில் இருக்க காரணமானவர்களை பழி(லி)வாங்கவும் முயற்சி செய்கின்றார். அந்த முயற்சியில் வெற்றி பெற்றாரா இல்லையா என்பது மீதிக்கதையாக உள்ளது. 




நடுத்தர வயது கதாப்பாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்திப் போகின்றார் ஜெயம் ரவி. அவரது நடிப்பும் வசன உச்சரிப்பின் மூலம் ஏற்றுக்கொண்ட திலகன் கதாப்பாத்திரத்தை ஆடியன்ஸ் மனதில் பதிய வைக்கின்றார். ஜெயம் ரவி கதாப்பாத்திரம் அறிமுகப்படுத்தப்பட்ட முதல் 10 நிமிடங்கள் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்ட பேரறிவாளனை நினைவு படுத்தியது.  கொலைகார அப்பாவை பார்க்க மாட்டேன் என ஜெயம் ரவியின் மகளான யுவினா பர்வதியின் நடிப்பு ஓ.கே. ஆனால் மகளை பிரிந்த அப்பாவுக்குள் இருக்கும் ஏக்கத்தை ஜெயம் ரவி சிறப்பாகவே வெளிக்காட்டியுள்ளார். காவல்துறை அதிகாரியாக வரும் கீர்த்தி சுரேஷ் ஆக்ரோசமான போலீஸாக நடிக்க முயற்சி செய்தது சில இடங்களில் கை கொடுத்ததால் தப்பித்தார். சீரியஸான போலீஸ் அதிகாரி எனக் காட்டுவதற்காகவே கீர்த்தி சுரேஷ் சிரிக்காமல் நடித்துள்ளார்.


ஜெயம் ரவியுடன் ஷேடோ போலீஸாக பயணிக்கும் காவல் அதிகாரியான யோகிபாபு பல இடங்களில் சிரிக்க வைக்கின்றார். ஆனால் யோகிபாபுவின் கதாப்பாத்திரத்தினால் திரைக்கதையில் பெரிய ஓட்டை. ஃப்ளாஷ் பேக்கில் ஜெயம் ரவியின் ஜோடியாக வரும் அனுபமா. இவர் ஜெயம் ரவியின் ஜோடியா அல்லது மகளா என யோசிக்க வைக்கும் அளவிற்கு ஜோடி ஒத்துப்போகவில்லை. அம்மா கதாப்பத்திரத்தில் வரும் துளசி, கொடுக்கப்பட்ட சில காட்சிகளில் ஸ்கோர் செய்துள்ளார். 




அழகம் பெருமாள், சமுத்திரக்கனி, அஜய் என மொத்தம் மூன்று வில்லன்கள். மூன்று பேரும் மோசமான எண்ணம் கொண்ட வில்லன்கள் என்பது வசனத்தில் இருந்தாலும் அது திரைக்கதைக்கு ஒத்துவரவில்லை. இவர்களை கொல்ல ஜெயம் ரவி முயற்சி எடுப்பதை சிறப்பான திரைக்கதையாக உருவாக்கி படத்தை நகர்த்தி இருக்கலாம். ஆனால், ஷேடோ போலீஸாக வரும் சிரிப்பு போலீஸ் யோகிபாபுவை ஏமாற்ற பலமான திரைக்கதை தேவைப்படவில்லை. ஆக்ரோஷமான போலீஸாக வரும் கீர்த்தி சுரேஷின் போர்ஷன் மட்டுமே திரைக்கதையில் கொஞ்சம் சுவாரஸ்யத்தை கூட்டுகின்றது. 




ஜி.வி. பிரகாஷின் பாடல்களும் பின்னனி இசையும் ஒத்துப்போகின்றது. செல்வகுமாரின் ஒளிப்பதிவு அருமை. படத்தொகுப்பில் படத்திற்கு கூடுமானவரை பலம் சேர்க்க முயற்சித்துள்ளார் ரூபன். கிடைத்த இடத்தில் எல்லாம் கைவண்ணத்தை காட்டியுள்ளார் ஆர்ட் டைரக்டர் சக்தி வெங்கடராஜ். அழுத்தமான வசனங்களாலும், சமீபகாலமாக தமிழ் சினிமா தொடாத கதையை நேர்த்தியாக கையாள முயற்சி செய்துள்ளார் அறிமுக இயக்குநர் அந்தோனி பாக்கியராஜ். திரைக்கதையில் மட்டும் கூடுதல் கவனம் செலுத்தியிருந்தால் முதல் படத்தில் முத்திரை பதித்திருப்பார் இயக்குநர். 


சென்டிமென்டான காட்சிகள், தரமான வசனங்கள், ஒ.கே.வான இசை, ஒத்துப்போகாத திரைக்கதை என இருந்தாலும் குடும்பத்துடன் சென்று படம் பார்க்கும் ரசிகர்களுக்கு திருப்தியான படமாக சைரன் இருக்கும். ஜெயம் ரவிக்கு வெற்றிப் படங்களின் இந்த படம் இடம் பெறுமா என்பது ரசிகர்கள்தான் முடிவு செய்ய வேண்டும் என்றாலும், தோல்விப்படமாக இருக்க வாய்ப்பில்லை என உறுதியாகச் சொல்லாம்.