விஜய்யின் லியோ படத்தில் நடித்த மேத்யூ தாமஸின் குடும்பம் விபத்தில் சிக்கியுள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 


2019ம் ஆண்டு வெளியான கும்பலாங்கி நைட்ஸ் படம் மூலம் நடிகராக மலையாள சினிமாவில் அறிமுகமானவர் மேத்யூ தாமஸ். தொடர்ந்து தண்ணீர் மாத்தான் தினங்கள், அஞ்சாம் பத்திரா, ஆபரேஷ் ஜாவா, ஒன், ஜோ அண்ட் ஜோ, பிரகாஷன் பரக்கட்டே, விஷூதா மேஜோ, கிறிஸ்டி , நெய்மர், பேமிலி என ஏகப்பட்ட படங்களில் நடித்து பிரபலமான இளம் நடிகராக வலம் வருகிறார். 


இப்படியான நிலையில் கடந்தாண்டு விஜய் நடிப்பில் வெளியான லியோ படத்தில் அவர் மகனாக நடித்திருந்தார். தொடர்ந்து தனுஷ் இயக்கும் நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படத்தில் நடித்து வருகிறார். இதற்கிடையில் மேத்யூ தாமஸின்  தந்தை பிஜூ, தாய் சூசன், அண்ணன் ஜான், அவரது உறவினர் பீனா டேனியல், அவர் கணவர் சஜூ ஆகியோர் குடும்பத்துடன் உறவினர் ஒருவர் வீட்டுக்கு சென்று விட்டு காரில் வீடு திரும்பியுள்ளனர்.


காரை மேத்யூ தாமஸின் அண்ணன் ஜான் ஓட்டியுள்ளார். இவர்களது கார் நள்ளிரவு 1 மணியளவில் சாஸ்தாமுகல் தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்தபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்து விபத்தில் சிக்கியது. கார் பலத்த சேதமடைந்த நிலையில் அதில் பயணித்த பீனா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 61 வயதான அவர் ஓய்வு பெற்ற ஆசிரியையாவார். 


மற்ற அனைவரும் காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் போலீசார் விபத்துக்கான காரணம் ஜானிடம் விசாரணை நடத்திய பின் தெரிய வரும் என கூறியுள்ளனர். மேலும் ரசிகர்கள், திரையுலக பிரபலங்கள் என பலரும் போனிலும், சமூக வலைத்தளங்கள் வாயிலாகவும் மேத்யூ தாமஸிடம் நலம் விசாரித்து வருகின்றனர். 


அதேசமயம் காயமடைந்தவர்கள் விரைவில் நலம் பெற பிரார்த்தனை செய்வதாகவும் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர். 




மேலும் படிக்க: Siragadikka Aasai: மீனாவின் அம்மாவை அசிங்கப்படுத்திய விஜயா! பாட்டி தந்த சர்ப்ரைஸ்! சிறகடிக்க ஆசை அப்டேட்