ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் நடைபெற்ற ஃபெடரேஷன் கோப்பை தடகளப் போட்டியில் ஒலிம்பிக் பதக்க வீரர் நீரஜ் சோப்ரா ஈட்டி எறிதல் பிரிவில் தங்கப் பதக்கம் வென்றுள்ளார். நீரஜ் சோப்ரா உள்நாட்டு போட்டிகளில் பங்கேற்பது 3 ஆண்டுகளில் இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது. அதிலும், தங்கப் பதக்கத்தை தட்டி தூக்கியுள்ளார்.
தங்கப் பதக்கம்:
புவனேஸ்வரில் நடைபெற்ற தடகள ஃபெடரேஷன் கோப்பை 2024 போட்டியில் நீரஜ் சோப்ராவின் சிறந்த எறிதல் 82.27 மீட்டர் ஆகும். இதற்கு சில நாட்களுக்கு முன், தோஹா டயமண்ட் லீக்கில் வெள்ளிப் பதக்கம் வென்றிருந்தார். அங்கு நீரஜ் சோப்ரா, 88.36 மீட்டரில் எறிந்து ஒலிம்பிக்கிற்காக தனது அடித்தளத்தை வலுப்படுத்தி வருகிறார். ஃபெடரேஷன் கோப்பை 2024ல் நீரஜ் சோப்ரா, சக வீரர் டிபி மனுவை தோற்கடித்து தங்கப் பதக்கத்தை வென்றார். நேற்றைய போட்டியில் டிபி மனுவின் சிறந்த எறிதல் 82.06 மீட்டர் ஆகும்.
மூன்றாவது சுற்று வரை, நீரஜ் சோப்ரா இரண்டாவது இடத்திலேயே நீட்டித்து கொண்டிருந்தார். அதன் பிறகு விஸ்வரூபம் எடுத்த அவர், மூன்றாவது சுற்றுக்குப் பிறகு, 82 மீட்டரை கடந்து வீசினார். ஆனால், அப்போது டிபி மனுவின் சிறந்த எறிதல் 82.06 மீட்டராக அமைந்து முதலிடத்தில் இருந்தார். தொடர்ந்து, நீரஜ் சோப்ரா விட்டுகொடுக்காமல் தனது நான்காவது த்ரோவில் 82.27 மீட்டர் தூரத்தை கடந்தார்.
அந்த இலக்கை டிபி மனுவால் இறுதி வரை கடக்க முடியவில்லை. இதையடுத்து, நீரஜ் சோப்ரா 82.27 மீட்டர் தூரம் எறிந்து தங்கப் பதக்கம் வென்றார். டிபி மனு 82.06 மீட்டருடன் வெள்ளிப் பதக்கமும், உத்தம் பாட்டீல் 78.39 மீட்டர் தூரம் எறிந்து வெண்கலப் பதக்கமும் வென்றனர். இந்தியாவின் புகழ்பெற்ற ஈட்டி எறிதல் விளையாட்டு வீரர்களில் ஒருவரான கிஷோர் ஜெனாவின் சிறந்த எறிதல் 75.49 மீட்டராக மட்டுமே அமைந்தது.
பலமுறை 75 மீட்டரை கடந்த நீரஜ் - டிபி மனு:
நீரஜ் சோப்ராவும், டிபி மனுவும் தங்கள் ஈட்டி எறிதல் வாழ்க்கையில் 75 மீட்டர் ஓட்டத்தை பலமுறை கடந்துள்ளனர். முன்னதாக, 75 மீட்டர் ஓட்டத்தை கடக்கும் வீரர்கள் தகுதிச் சுற்றில் பங்கேற்கத் தேவையில்லை என்று இந்திய தடகளத் தலைவர் ராதாகிருஷ்ணன் நாயர் தெரிவித்திருந்தார். இந்த காரணத்திற்காக நீரஜ் சோப்ரா இறுதி சுற்றில் நேரடியாக களமிறங்கினார். மறுபுறம், ஒலிம்பிக்கிற்கு தகுதி பெற வேண்டுமெனில் டி.பி.மனு 85.5 மீட்டரைக் கடக்க வேண்டியிருந்தது. ஆனால் அவர் அதைச் செய்யத் தவறிவிட்டார்.
நீரஜ் சோப்ராவின் சிறந்த எறிதல் எத்தனை மீட்டர்?
இருப்பினும், ஃபெடரேஷன் கோப்பையின் போது நீரஜ் சோப்ரா, தனது சிறந்த எறிதலை பதிவு செய்யவில்லை என்பதுதான் உண்மை. நீரஜ் சோப்ரா தனது ஈட்டி எறிதல் வாழ்க்கையில் 82.27 மீட்டரை பலமுறை கடந்துள்ளார். கடந்த ஜூன் 2022ம் ஆண்டு ஸ்டாக்ஹோம்மில் நடைபெற்ற டயமண்ட் லீக்கில் 89.94 மீட்டர் தூரத்தை கடந்து தனது தனிப்பட்ட சிறந்த மற்றும் தேசிய சாதனையையும் படைத்தார்.