கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலைத் தழுவி சில மாற்றங்களுடன் மணிரத்னம் இயக்கியுள்ள திரைப்படம் பொன்னியின் செல்வன் பாகம் ஒன்று & இரண்டு.


சென்ற ஆண்டு பொன்னியின் செல்வன்  முதல் பாகம் வெளியான நிலையில், அதன் தொடர்ச்சியாக தற்போது இரண்டாம் பாகம் வெளியாகியுள்ளது. விக்ரம், ஐஸ்வர்யா ராய், கார்த்தி, த்ரிஷா, ஜெயம்  ரவி,  சரத்குமார், பார்த்திபன், ஐஸ்வர்யா லக்‌ஷ்மி, ஷோபிதா,  பிரபு, ரஹ்மான், விக்ரம் பிரபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளார்.


கடந்த ஏப்.28ஆம் தேதி இந்தப் படம் வெளியான நிலையில்,  வெளியான நான்கே நாள்களில் இந்தப் படம் உலகம் முழுவதும் 200 கோடிகளை வசூலித்துள்ளது. இதுகுறித்து லைகா நேற்று அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டிருந்தது.


மற்றொருபுறம் திரைக்கதைக்காக இயக்குநர் மணிரத்னம் கதையில் செய்த சில மாற்றங்கள், நாவல் வாசகர்களை கரும் அதிருப்தியில் ஆழ்த்தி விமர்சனங்களைப் பெற்று வருகிறது. மேலும் முதல் பாகம் அளவுக்கு இரண்டாம் பாகம் இல்லை என்றும், நிறைகள் தாண்டி பல குறைகள் உள்ளதாகவும் பலதரப்பு மக்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.


இந்நிலையில், கருத்து வேறுபாடுகள் தாண்டி பொன்னியின் செல்வன் மக்கள் ஆதரவைப் பெறுவதாக நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். முன்னதாக செய்தியாளர் சந்திப்பில் நடிகர் கமல்ஹாசன் பேசியதாவது:


“பொன்னியின் செல்வனை ஒரு படமாகத் தான் நான் இப்போது பார்க்கிறேன். இரண்டு பாகங்களையும் பார்த்த பின், இதை ஒரு முழு காவியமாக தான் நாம் கொள்ள வேண்டும். கருத்து வித்தியாசங்கள், மாற்றுக் கருத்துகள் எல்லா படங்களுக்கும் இருக்கும்.


அது இந்தப் படத்தில் இருந்தாலும் மக்கள் இந்தப் படத்தை பெரிதாக ஆதரிக்கிறார்கள் என்பதை செய்திகள் மூலமாக அறிகிறேன். எனக்கு அது மெத்த மகிழ்ச்சி. தமிழ் சினிமாவின் பெருமை, தமிழரின் பெருமையைப் போற்றும் இத்தகைய படத்தை எடுக்க வேண்டும் என்பதற்கே தனி துணிச்சல் வேண்டும். 


அதை எடுத்து முடித்திருக்கும் முக்கியமான வீரன் மணிரத்னம். அவருக்கு உறுதுணையாக தோள் கொடுத்து, வாள் கொடுத்து உதவிய நட்சத்திரப் பட்டாளப் படை. அது பார்க்க பிரமிப்பாக இருந்தது” எனப் பாராட்டியுள்ளார். 


நடிகர் கமல்ஹாசன் பொன்னியின் செல்வன் முதல் மற்றும் இரண்டாம் பாகங்களில் பின்னணி குரல் கொடுத்துள்ள நிலையில், இரு பாகங்களின் இசை வெளியீட்டு விழாக்களுக்கும் வருகை தந்தார். கோலிவுட்டில் நடிகர் கமல்ஹாசன் உள்பட பலரும் பொன்னியின் செல்வனை படமாக்க முயற்சித்து கைவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க: Producers Council Election: தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தலில் வெற்றி.. 2வது முறையாக தலைவரானார் ‘தேனாண்டாள்’ முரளி