Jayam Ravi : காலை என்பதே என் வாழ்க்கையில் இல்லை என நேர்காணல் ஒன்றில் நடிகர் ஜெயம் ரவி தெரிவித்துள்ளார். அதனைப் பற்றி காணலாம். 


ஜெயம் படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானவர் ரவி. அந்த படத்தின் வெற்றியால் “ஜெயம்” ரவி என அனைவராலும் இன்றுவரை அழைக்கப்பட்டு வருகிறார். தொடர்ந்து எம்.குமரன், உனக்கும் எனக்கும், சந்தோஷ் சுப்பிரமணியம், பேராண்மை,நிமிர்ந்து நில், பொன்னியின் செல்வன் என பல படங்களில் நடித்து குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்த நடிகராக உள்ளார். 


கடைசியாக ஜெயம் ரவி நடிப்பில் ‘சைரன்’ படம் வெளியானது. இதனைத் தொடர்ந்து ஜீனி, பிரதர் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். அதேசமயம் விரைவில் இயக்குநராகவும் களம் காண உள்ளார். ஒரு நேர்காணலில் பேசிய அவர், 3 படங்களின் கதை தன்னிடம் இருப்பதாகவும், அதில் ஒரு கதையில் யோகிபாபுவை நடிக்க வைக்க உள்ளதாகவும் கூறினார். இதனிடையே நேர்காணல் ஒன்றில் ஜெயம் ரவி பேசிய வீடியோ வைரலாகியுள்ளது. இது சில மாதங்களுக்கு முன் எடுக்கப்பட்டுள்ளது. 


அதில், “ஷூட்டிங் இல்லையென்றால் ஜெயம் ரவியின் ஒருநாள் என்பது எப்படி இருக்கும்? என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “காலை என்பதே என் வாழ்க்கையில் இல்லை. குறைந்தது மதியம் தான் எழுந்திரிப்பேன். அதன்பிறகு பசங்களுடன் தான் நேரம் செலவிடுவேன். அவர்களுடன் விளையாடிக்கொண்டே இருப்பேன். சின்ன பையனுடன் செஸ், பெரிய பையன் கூட வீட்டில் இருக்கும் ஸ்நூக்கர் விளையாடுவேன். கடற்கரை பகுதியில் வீடு இருப்பதால் அங்கு சென்று கால்பந்து விளையாடுவோம். இந்த மாதிரி விளையாட்டு தொடர்பான விஷயங்கள் தான் பெரும்பாலும் இருக்கும். இதனைத் தவிர பைக் எடுத்துக்கொண்டு ரவுண்ட் போவது, பசங்களை அழைத்துக் கொண்டு செல்வது உள்ளிட்ட விஷயங்களை செய்வேன். 


இதனைத் தொடர்ந்து மனைவி ஆர்த்தியை குறிப்பிட்டு, “அவர்கள் வீட்டில் இருக்கிறார்களே? ஆர்த்தியை கூட்டிக்கொண்டு வெளியே எல்லாம் போகமாட்டீர்களா?” என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, “பசங்களை கூப்பிட்டு வெளியே போனால் ஆர்த்தி நிம்மதியா இருக்கப் போறாங்க. நான் அவங்களுக்கு பண்ற உதவி அது. அதேசமயம் ரொம்ப நாள் லீவு இருக்குன்னா என் ஸ்கூல் நண்பர்களை வீட்டுக்கு கூப்பிட்டு விடுவேன்” என ஜெயம் ரவி பதிலளித்திருப்பார். 


ஜெயம் ரவி - ஆர்த்தி திருமணம் கடந்த 2009 ஆம் ஆண்டு நடைபெற்றது. இவர்களுக்கு இரு மகன்கள் உள்ளனர். இதில் மூத்த மகன் ஆரவ் ரவி, 2018ஆம் ஆண்டு வெளியான டிக் டிக் டிக் படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஜெயம் ரவி - தனது மனைவி ஆர்த்தி குறித்து, தனியார் யூ ட்யூப் சேனல் ஒன்றுக்கு நெகிழ்ச்சியாக பேசி இருந்தது சமீபத்தில் வைரலானது குறிப்பிடத்தக்கது




மேலும் படிக்க: Mansoor Ali Khan: மன்சூர் அலிகானுக்கு கொடுக்கப்பட்ட உணவினால் உடல்நலக்குறைவா? - வெளியான பரபரப்பு அறிக்கை!