தமிழ் சினிமாவில் அறிமுகமான முதல் படத்திலேயே கவனம் ஈர்த்தவர் இயக்குநர் கோபி நயினார். நடிகை நயன்தாரா நடிப்பில் 2017ம் ஆண்டு வெளியான திரைப்படம் 'அறம்'. அப்படத்தில் அழுத்தமான திரைக்கதை மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் கோபி நயினார், தற்போது நடிகர் ஆண்ட்ரியா ஜெர்மியாவை வைத்து 'மனுசி' என்ற படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தின் ட்ரெயிலர் நேற்று வெளியாகி திரை ரசிகர்களின் கவனம் ஈர்த்துள்ளது. 


 




இயக்குநர் வெற்றிமாறன் க்ராஸ் ரூட் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படம் பார்ப்பதற்கு அவரின் விடுதலை படம் போலவே திரில்லிங்காக நகர்கிறது. அறம் படம் போலவே 'மனுசி' படமும் கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படமாக அமைக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் நாசர், ஹக்கிம் ஷா, தமிழ், பாலாஜி சக்திவேல், விஜி சந்திரசேகர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார். இப்படத்தின் ட்ரைலரை நடிகர் விஜய் சேதுபதி நேற்று தனது சமூக வலைத்தளம் மூலம் வெளியிட்டார். 


நிறைய கிராமங்களுக்கு போய் குழந்தைகளுக்கு இயற்பியல் சொல்லிக் கொடுக்கும் ஒரு ஆசிரியராக ஆண்ட்ரியா நடித்துள்ளார். வீட்டில் இருக்கும் ஆண்ட்ரியா வலுக்கட்டாயமாக தீவிரவாதி என்ற பெயரில் போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து வரப்படுகிறார். ஒரே கண்ணோட்டத்தில் காவல்காரர்கள் கேள்விகளால் மாறி மாறி துளைக்க கடுமையாக சித்திரவதையும் செய்யப்படுகிறார். இருப்பினும் கேட்கப்படும் கேள்விகளுக்கு அழுத்தமாக பதில் கொடுக்கிறார் ஆண்ட்ரியா.    


 



"ஒரு பொண்ண அடிக்கிறது தப்புங்குற குற்றவுணர்வு இல்லாதவன் கூட எப்படி வாழ முடியும்?", "எங்க பெயரை எங்க விருப்படி எழுத விடமாட்டீங்களா?", "ஜாதியா, மதமா, நிறமா, வர்க்கமா, உருவாக்கி இருக்கறதை அறிவியல் மூலம் மாத்த விரும்புறேன்", "ஒரு விளையாட்டுல  வெறும் இந்தியனா யோசிச்சு எப்படி பதில் சொல்ல முடியும்?", "கொஞ்சம் கொஞ்சமா சர்வாதிகாரியா மாறிக்கிட்டு வரீங்க. சர்வாதிகாரத்தின் உச்சமே சொந்த மக்களை சொந்தமா யோசிச்சு சிந்திக்க விடாது", "சாதிய உருவாக்குனவங்க தான் இந்தியாவை உருவாக்குனாங்க" என அனல் தெறிக்கும் வசனங்களை தெறிக்கவிட்டு பார்வையாளர்களின் ஒட்டுமொத்த கவனத்தை ஈர்த்துள்ளது இந்த 'மனுசி' ட்ரைலர்.


இது போன்ற அரசியல் பேசும் படங்களை ஒரு சிலர் தான் விரும்புவார்கள். இருப்பினும் இந்த மனுசி படத்தின் ட்ரைலர் அனைத்து தரப்பினர் மத்தியிலும் படம் குறித்த எதிர்பார்ப்பை பல மடங்கு அதிகரித்துள்ளது. ஆண்ட்ரியாவின் அழுத்தமான நடிப்பு பாராட்டிற்குரியது. 



வசனங்கள் மிகவும் ஆழமானதாக இருப்பதால் இது நிச்சயம் உலகளவில் பேசப்படும் ஒரு திரைப்படமாக அமையும். முற்போக்கு பார்வையுடன் இப்படத்தை இயக்குநரும் தயாரிப்பாளரும் கையாண்டுள்ளது படத்தின் வெற்றியை குறிக்கிறது என வி.சி.க தலைவர் தொல். திருமாவளவன் பாராட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.