IPL 2024: வழக்கத்தை விடவும் அதிகமாக நடப்பு ஐபிஎல் தொடரில் பேட்ஸ்மேன்கள் அதிகம் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர்.
ஐபிஎல் 2024:
நடப்பாண்டிற்கான ஐபிஎல் தொடர் தொடங்கி கோலாகலமாக, நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வருகிறது. தொடரின் பாதி போட்டிகள் கூட முடியாத நிலையில், ஏற்கனவே பல அதிக ஸ்கோரிங் போட்டிகள் நடந்துள்ளன. பேட்ஸ்மேன்கள் பந்துவீச்சாளர்களை நையப்புடைத்து வருகின்றனர். சிக்சர்கள் மற்றும் பவுண்டரிகள் மூலம் மைதானங்களில் ரன் மழை பொழிகிறது.
நடப்பு சீசனில் மட்டும் ஐதராபாத் அணி இரண்டு முறை, 250-க்கும் அதிகமான ரன்களை சேர்த்து, ஐபிஎல் வரலாற்றின் அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்துள்ளது. இதனால் ஐபிஎல் போட்டிகள் முழுவதும் பேட்ஸ்மேன்களுக்கு மட்டுமே சாதகமாக இருப்பதாக கருதப்படுகிறது. இந்நிலையில், பேட்ஸ்மேன்கள் மற்றும் பந்துவீச்சாளர்கள் இடையே சமநிலையை மீட்டெடுக்க, கொல்கத்தா அணியின் ஆலோசகரும், முன்னாள் கிரிக்கெட் வீரருமான கம்பீர் ஒரு ஆலோசனையை முன்வைத்துள்ளார்.
பந்து உற்பத்தியாளரை மாற்றுங்கள்:
ஒருநாள் மற்றும் டி-20 கிரிக்கெட் போட்டிகளுக்கு பயன்படுத்தப்படும், வெள்ளை பந்தின் உற்பத்தியாளரை மாற்ற வேண்டும் என்று கம்பீர் பரிந்துரைத்துள்ளார். தற்போதைய பந்தை மாற்றுவது என்பது, பந்து வீச்சாளர்கள் ஸ்விங் செய்வதற்கு சாதகமான சில வாய்ப்புகளை வழங்கும் என வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக நேர்காணல் ஒன்றில் பேசிய கம்பீர் "ஒரு தயாரிப்பாளரால் 50 ஓவர்கள் வரை நீடிக்கும் ஒரு பந்தைத் தயாரிக்க முடியாவிட்டால், உற்பத்தியாளரையும் மாற்றலாம். தயாரிப்பாளரை மாற்றுவதில் தவறில்லை. கூகபுரா நிறுவன பந்தை மட்டும் பயன்படுத்த வேண்டிய கட்டாயம் என்ன?" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
ஹர்ஷா போக்லே ஆதரவு:
பிரபல கிரிக்கெட் வர்ணனையாளரான ஹர்ஷா போக்லேவும், பந்து உற்பத்தியாளரை மாற்ற வேண்டும் என்ற கம்பீரின் கருத்தை பிரதிபலித்துள்ளார். டியூக் பந்துகளை பயன்படுத்துவது என்பது பேட்ஸ்மேன்கள் மற்றும் பந்துவீச்சாளர்களுக்கு ஒரு சமமான வாய்ப்பை வழங்கும் என தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பேசியபோது, “ஆடுகளங்கள் பந்துவீச்சாளர்களுக்கு சாதகமாக இல்லாத சூழலில், அவர்கள் காற்றில் தான் பந்தை நகர்த்த வேண்டும். அதற்கு சீமிற்கு ஆதரவாகவும், ஸ்விங் செய்ய அதிகம் உதவும் டியூக் பந்தை அனுமதித்தால் பேட்ஸ்மேன்களுக்கு பந்துவீச்சாளர்களால் நெருக்கடி கொடுக்க முடியும். நிபுணர்கள் இதுதொடர்பான கருத்துகளை பகிர வேண்டும்” என ஹர்ஷா போக்லே தெரிவித்துள்ளார்.
அண்மையில் கொல்கத்தா - ராஜஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்றது. அதில் முதலில் விளையாடிய கொல்கத்தா அணி 223 ரன்களை குவித்தது. இலக்கை நோக்கி களமிறங்கிய ராஜஸ்தான் அணி கடைசி பந்தில் இலக்கை எட்டி அபார வெற்றி பெற்றது. 200+ ரன்கள் நடப்பு தொடரில் சர்வ சாதாரணமாக விளாசப்படுகிறது.