தன்னுடைய உடல்நிலை குறித்து மன்சூர் அலிகான் வெளியிட்டுள்ள அறிக்கை திரையுலகினர், அரசியல் கட்சியினர் இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


மக்களவை தேர்தலில் வேலூர் தொகுதியில் சுயேட்சையாக போட்டியிடும் நடிகர் மன்சூர் அலிகான் அத்தொகுதியில் தீவிர பரப்புரை மேற்கொண்டு வந்தார். நேற்று பரப்புரையில் கடைசி நாள் என்பதால் மக்களிடம் வாக்கு சேகரித்து வந்த அவர், திடீரென உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொகுதி மக்களிடம் வித்தியாசமான முறையில் வாக்கு சேகரித்து வந்த அவருக்கு என்ன ஆச்சு? என திரையுலகினர் பதறிப் போயினர். 


இப்படியான நிலையில் தனது உடல் நலம் குறித்து மன்சூர் அலிகான் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நேற்று குடியாத்தம் சந்தையிலிருந்து திரும்பி ஒரு இடத்துல, கட்டாயப்படுத்தி, பழ ஜூஸ் குடுத்தாங்க. அதன் பிறகு மோர் குடுத்தாங்க... குடித்த உடனே வண்டியில் இருந்து விழ இருந்தேன்... மயக்கம், அடி நெஞ்சில் தாங்க முடியாத வலி ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து பாலாறு ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டு போனாங்க, சிகிச்சை கொடுத்தும் வலி நிக்கல.


வலி அதிகமாகவும் சென்னையில் உள்ள K.M. நர்ஸிங் ஹோம்க்கு ஆம்புலன்ஸ்ல கூட்டிட்டு வந்தாங்க. டாக்டர் பாலசுப்ரமண்யன் ஐ.சி.யூ.ல அட்மிட் பண்ணி, இப்ப வலி கொஞ்சம் கம்மியாயிருக்கு. விஷ முறிவு, நுரையீரல் வலி போக சிகிச்சை கொடுத்தார்கள். இன்று மதியம் 2 மணிக்கு சாதாரண வார்டுக்கு மாற்றுவார்கள் என சொல்லப்படுகிறது” என தெரிவிக்கப்பட்டுள்ளது. 


இந்திய ஜனநாயக புலிகள் கட்சி


நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக நடிகர் மன்சூர் அலிகான் இந்திய ஜனநாயக புலிகள் கட்சியை தொடங்கினார். ஏற்கனவே அவர் தமிழ் தேசிய புலிகள் என்ற பெயரில் கட்சி நடத்தி வந்தார். அதுவே இந்திய ஜனநாயக புலிகள் என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. மேலும் முதலில் நாடாளுமன்ற தேர்தலில் ஆரணி தொகுதியில் போட்டியிட போவதாக அறிவித்தார். பின்னர் அதிமுக உள்ளிட்ட கட்சிகளுடன் ஒரு தொகுதி கேட்டு கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் எதுவும் சுமூகமான முடிவை பெறாததால் வேலூர் தொகுதியில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தார். தொடர்ந்து அப்பகுதியில் மிக தீவிரமாக பரப்புரை மேற்கொண்டு வாக்கு சேகரித்தார்.