Ganja Karupu: படம் தயாரிக்க முடிவெடுத்து அதில் இறங்கியதால் அதிக கடன் வாங்கி கஷ்டப்படுவதாக நடிகர் கஞ்சா கருப்பு வருத்தம் தெரிவித்துள்ளார். 

 

2003ம் ஆண்டு பாலா இயக்கத்தில் விக்ரம், சூர்யா நடிப்பில் வெளிவந்த பிதாமகன் படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் கஞ்சா கருப்பு. அந்தப் படத்தில் சிறிய ரோலில் கஞ்சா கருப்பு நடித்து இருப்பார். அடுத்ததாக அமீர் இயக்கத்தில் ஜீவா நடித்த ராம் படத்தில் முக்கிய ரோலில் நடித்த கஞ்சா கருப்பு காமெடி நடிகராக தன்னை உருவாக்கிக் கொண்டார். 

 

தொடர்ந்து விஜய் நடிப்பில் வெளிவந்த சிவகாசி, விஷால் நடித்த சண்டகோழி, அஜித் நடித்த திருப்பதி, கோடம்பாக்கம், நயன்தாரா நடித்த அரண், தாமிரபரணி படங்களில் நடித்த கஞ்சா கருப்புக்கு, கார்த்தி நடித்த பருத்தி வீரன், பிரகாஷ் ராஜ் மற்றும் சந்தானம் நடிப்பில் வெளிவந்த அறை எண் 305ல் கடவுள் போன்ற படங்கள் நல்ல பிரபலத்தை தந்தன. பருத்தி வீரன் படத்தில் டக்ளஸாக நடித்து ஸ்கோர் செய்திருப்பார். இதேபோல் களவாணி படத்தில் நடித்த கஞ்சா கருப்புவின் பால்டாயில் குடித்த காமெடி இன்றும் ரசிகர்களின் பேவரைட். 

 

கிராமத்து கேரக்டரில் காமெடி செய்து அசத்தும் கஞ்சா கருப்புவின் எதார்த்தமாக பேச்சு அவருக்கான பட வாய்ப்புகளை தேடி தந்தன. காமெடி நடிகராகவும், துணை நடிகராகவும் இருந்த கஞ்சா கருப்பு ஒரு கட்டத்துக்கு மேல் திரைப்படம் தயாரிக்க ஆர்வம் செலுத்தியுள்ளார். இது தொடர்பாக பேசியுள்ள கஞ்சா கருப்பு, ”வேல்முருகன் போர்வெல்ஸ் படத்தை தயாரித்து பெரிய தவறு செய்துவிட்டேன்” என்றார். 

 

வேல்முருகன் போர்வெல்ஸ் படத்தை நம்பி அதை ஏன் தயாரிக்க ஒப்புக் கொண்டேன் என வருந்தியதாக கூறியுள்ள கஞ்சா கருப்பு, அந்த படம் எடுக்கப்பட்டபோது தான் பிசியாக படங்களில் நடித்து வந்ததாகவும், அதனால் படத்தின் மீது முழு கவனம் செலுத்த முடியவில்லை என்றும் கூறியுள்ளார்.

இந்த சந்தர்ப்பத்தை இயக்குநர் பயன்படுத்திக் கொண்டு படத்தை அசால்ட்டாக எடுத்து அதிக செலவை இழுத்து விட்டதாக கூறிய கஞ்சா கருப்பு, படத்துக்காக அதிக கடன் வாங்கி அதை இன்று முதல் செலுத்த முடியாமல் திணறிக் கொண்டிருப்பதாக மனம் வருந்தியுள்ளார். மேலும் ”என்னுடைய பசங்களுக்கு ஸ்கூல் ஃபீஸ் கட்டமுடியவில்லை, பள்ளிக்கூடத்தில் இருந்து அனுப்பி விட்டுட்டார்கள்... கடுமையான பணநெருக்கடியில் இருக்கிறேன்” எனவும் கூறி அதிர்ச்சி அளித்துள்ளார். 

 

நான் படம் தயாரிக்க வேண்டும் என்று எடுத்த தவறான முடிவால் தன் வீட்டில் 5 உயிர் போனதாகக் கூறி கண்ணீர் விட்டார்.