அனிமல் 


ரன்பீர் கபூர் நடித்து சந்தீப் ரெட்டி வங்கா இயக்கியுள்ள அனிமல் திரைப்படம் கடந்த டிசம்பர் 1ஆம் தேதி வெளியாகி வெற்றிகரமாக ஓடிவருகிறது. ராஷ்மிகா மந்தனா, பாபி தியோல், அனில் கபூர், ட்ரிப்தி டிம்ரி உள்ளிட்டவர்கள் துணைக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள். அர்ஜூன் ரெட்டி படத்தைப் போலவே சந்தீப் ரெட்டி வங்காவின் அனிமல் படம் கடும் விமர்சனங்களை சந்தித்து வருகிறது,


அனிமல் படத்தை விமர்சிக்கும் பிரபலங்கள்


அனுராக் கஷ்யப், ராம் கோபால் வர்மா போன்ற இயக்குநர்கள் அனிமல் படத்திற்கு தங்களது ஆதரவைத் தெரிவித்துள்ள நிலையில், மறுபக்கம் பல்வேறு பிரபலங்கள் அனிமல் படத்தை விமர்சித்துள்ளார்கள். குறிப்பாக இந்திய கிரிக்கெட் பந்துவீச்சாளர் ஜெயதேவ் உனட்கட் அனிமல் படத்தை கடுமையாக விமர்சித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். 


மேலும், நாடாளுமன்ற வரை சென்றுள்ளது அனிமல் பட சர்ச்சை. மாநிலங்களவையில் பேசிய காங்கிரஸ் எம்பி ரஞ்சீத் ரஞ்சன், "பெண்கள் மீதான வெறுப்பை இந்த படம் நியாயப்படுத்துகிறது.


சினிமா என்பது சமூகத்தின் கண்ணாடி. நாம் சினிமா பார்த்து வளர்ந்தவர்கள். அது இளைஞர்களிடையே தாக்கத்தை ஏற்படுத்தும். முதலில் கபீர் சிங், புஷ்பா போன்ற படங்கள் வந்தது. இப்போது அனிமல் வந்திருக்கிறது. என் மகள் தன் கல்லூரி நண்பர்களுடன் படம் பார்க்கச் சென்றாள். அழுகையை நிறுத்த முடியாமல் படத்தில் இருந்து பாதியிலேயே  வெளியேறினாள்.


படத்தில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் காட்டப்படுகிறது. இது இளைஞர்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தும். கபீர் சிங்கைப் பாருங்கள், அவர் தனது மனைவி, மக்கள் மற்றும் சமூகத்தை எவ்வாறு நடத்துகிறார். மேலும் திரைப்படம் அந்த செயல்களை நியாயப்படுத்துகிறது. இளைஞர்கள், அவரை ஒரு முன்மாதிரியாகக் கருதத் தொடங்குகின்றனர். திரைப்படங்களில் நாம் பார்ப்பதால், சமூகத்திலும் இதுபோன்ற வன்முறைகளைப் பார்க்கிறோம்" எனப் பேசியுள்ளார்.


 விமர்சனங்களைக் கடந்து வசூல்






இப்படி கடுமையான விமர்சனங்கள் அனிமல் படம் எதிர்கொண்டு வரும் நிலையில், பாக்ஸ் ஆஃபிஸை அது எந்த வகையிலும் பாதிக்கவில்லை. இதுவரை வெளியாகி 9  நாட்களைக் கடந்துள்ள நிலையில், ரூ.660. 89 கோடி வசூலித்துள்ளது அனிமல் திரைப்படம்.


படத்தின் இத்தனை பிரமாண்டமான வசூல் எண்ணிக்கை வெகுஜனத்திடம் இந்தப் படத்திற்கு கிடைத்திருக்கும் ஆதரவையே காட்டுகிறது. மேலும் இந்த மாதிரியான படங்களின் வெற்றிகள் மேலும் இதுபோன்ற படங்கள் உருவாவதற்கு ஊக்குவிக்கும் என்று இணையவாசிகள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.