2023ஆம் ஆண்டு பல்வேறு புதிய இயக்குநர்கள் தரமான படங்களை வழங்கியிருக்கிறார்கள். சின்ன பட்ஜட்டில் எடுக்கப்பட்ட இந்தப் படங்கள் நேர்த்தியான கதைசொல்லலின் மூலம் மக்களைக் கவர்ந்துள்ளன. அதே நேரத்தில் வசூல் ரீதியாகாவும் குறிப்பிடத் தகுந்த வெற்றியடைந்தன. இந்த ஆண்டு அறிமுக இயக்குநர்கள் இயக்கத்தில் வெளியாகி ரசிகர்களைக் கவர்ந்தப் படங்களைப் பார்க்கலாம்.


போர் தொழில்


அசோக் செல்வன், சரத்குமார், சரத்பாபு உள்ளிட்டவர்கள் நடித்து விக்னேஷ் ராஜா இயக்கத்தில் வெளியான போர் தொழில் திரைப்படம் இந்த ஆண்டு வெளியான முக்கியமான படங்களில் ஒன்று. ராட்சசன் படத்தைத் தொடர்ந்து நீண்ட நாட்களுக்குப் பிறகு தமிழ் சினிமாவில் வெளியான க்ரைம் த்ரில்லர் பாணி படங்களில் குறிப்பிடத்தகுந்த படமாக அமைந்தது போர் தொழில். சின்ன பட்ஜட்டில் எடுக்கப்பட்ட இந்தப் படம் 50 கோடிகள் வரை வசூல் செய்தது.


டாடா


கணேஷ் பாபு இயக்கத்தில் கவின், அபர்ணா தாஸ் நடிப்பில் வெளியான ஒரு சூப்பர் ஹிட் திரைப்படம். பொறுப்பில்லாமல் ஊர் சுற்றும் ஒரு இளைஞன் தனது காதலியுடன் லிவிங் ரிலேஷன்ஷிப் மூலம் கர்ப்பமாகி குழந்தை பெற்றுக்கொள்ள, பொருளாதார நெருக்கடியால் காதலர்கள் பிரிய ஒரு பொறுப்பான அப்பாவாக கவின் எப்படி குழந்தையை வளர்க்கிறார் என்ற கதைக்களத்தை மிகவும் நாசுக்காக மனிதனின் மாற்றத்தை உணர்த்திய ஒரு படம். 


அயோத்தி


சசிகுமார் நடித்து வெளியான அயோத்தி திரைப்படம் இந்த ஆண்டு வெளியான படங்களில் ரசிகர்களிடம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. மந்திர மூர்த்தி இந்தப் படத்தை இயக்கினார்.


குட் நைட்


மணிகண்டன் , ரமேஷ் திலக் , மீதா ரகுநாத், ரெய்ச்சல் ரெபெக்கா உள்ளிட்டவர்கள் நடித்து வெளியான திரைப்படம் 'குட்நைட்'. எந்த விதமான ஆடம்பரமும் இல்லாமல் எளிய குடும்பப் பின்னணியில் உருவான இந்தப் படத்தை விநாயக் சந்திரசேகர் இயக்கினார். ஷான் ரோல்டன் இந்தப் படத்திற்கு இசையமைத்தார்.


ஜோ


அறிமுக இயக்குநர் ஹரிஹரன் ராம் இயக்கத்தில் ரியோ ராஜ், மாளவிகா மனோஜ், பாவ்யா த்ரிகா, அன்புதாசன் நடிப்பில் சுட சுட காதலர்களை டார்கெட் செய்து வெளியாகியுள்ள 'ஜோ' திரைப்படம் சமீபத்தில் வெளியாகி எதிர்பாராத அளவிற்கு மக்களிடம் இருந்து வரவேற்பைப் பெற்றது.  வழக்கமான ரொமாண்டிக் காமெடி வகைமையில் அமைந்திருந்தாலும் கதாபாத்திர அமைப்புகளுக்காக அதிகம் பாராட்டப்பட்டது ஜோ திரைப்படம்.


குய்கோ


டி. அருள் செழியன் இயக்கத்தில் விதார்த், யோகி பாபு, இளவரசு, முத்துக்குமார், பிரியங்கா, துர்கா, வினோதினி வைத்தியநாதன் நடிப்பில் வெளியான இப்படம் நகைச்சுவை கலந்த யதார்த்தமான கதை. கதைக்கு முக்கியத்துவம் கொடுத்த இப்படம் ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றுள்ளது. 


பார்க்கிங்


ஹரிஷ் கல்யாண் , இந்துஜா, எம்.எஸ்.பாஸ்கர் நடித்து சமீபத்தில் வெளியான பார்க்கிங் திரைப்படம் ஒரு சிறிய பார்க்கிங் பிரச்னையை வைத்து சுவாரஸ்யமான ஒரு கதையை சொல்கிறது. ராம்குமார் பாலகிருஷ்ணன் இந்தப் படத்தை இயக்கியுள்ளார்.