இயக்குநர் வெங்கட்பிரபு இயக்கத்தில், சிம்பு நடிப்பில் திரையரங்குகளில் வெளியாகியுள்ள ‘மாநாடு’ திரைப்படம் வெளியாவதில் தொடக்கத்தில் இருந்தே பல்வேறு பிரச்னைகளை சந்தித்து வந்தது. ரஜினியின் ’அண்ணாத்த’ திரைப்படத்திற்கு போட்டியாக தீபாவளி அன்று ‘மாநாடு’ படமும் வெளியிடப்படும் என்று முதலில் அறிவிக்கப்பட்டது. பின்னர், தவிர்க்க முடியாத காராணங்களால் நவம்பர் 25 ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.


ஆனாலும் நேற்றி இரவு படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, மீண்டும் தவிர்க்க முடியாத காரணங்களால் படம் வெளியீடு தள்ளிவைக்கப்படுகிறது என ட்வீட் போட்டதும் மீண்டும் பற்றிக்கொண்டது மாநாடு சர்ச்சை. படம் வெளியாகுமா ? வெளியாகாதா என்ற எதிர்பார்ப்பு எகிறி சிம்பு ரசிகர்களின் இதயங்களை பதம் பார்க்க தொடங்கிய நேரத்தில், படம் திட்டமிட்டபடி வெளியாகும் என்று மீண்டும் நேற்று இரவே அறிவிக்கப்பட்டது.






இதுமட்டுமின்றி, சில நாட்களுக்கு முன் மேடையில் பேசிய சிம்பு, கண்ணீர் விட்டு கதறி அழுதார். எனக்கு நிறைய பிரச்னை கொடுக்குறாங்க. என் பிரச்னைகளை நான் பாத்துக்குறன், என்ன மட்டும் நீங்க பாத்துக்குங்க என கைகுவித்து கும்பிட்டு கேட்டுக்கொண்டார். டி.ஆரும் அவரது மனைவியும் கூட கமிஷனர் அலுவலகம் படிகள் ஏறி வரை புகார் கொடுத்தனர்.



சிம்பு, வெங்கட்பிரபு


இப்படி பல்வேறு சர்ச்சைகளையும் புகார்களையும் எதிர்கொண்ட மாநாடு திரைப்படம், பல தடைகளை கடந்து தியேட்டர்களில் வெளியாகி, பெரிய அளவிலான வரவேற்பை பெற்றுள்ள நிலையில், இந்த படத்தின் இயக்குநரான வெங்கட் பிரபுவிடம் பேசினோம்.



  • மாநாடு திரைப்படம் குறித்து உங்களுக்கு வரும் Feedback எப்படி இருக்கு..?


வெங்கட்பிரபு : இந்த படம் வெளியாகுறத்துக்குல பல பிரச்னைகள், தடைகள். அதையெல்லாம், கடந்து இன்னைக்கு தியேட்டர்ல படம் வந்திருக்கிறது மகிழ்ச்சியா இருக்கு. ரசிகர்கள் என் படத்த இந்த அளவுக்கு ரசிச்சு, பார்த்து பெரிய வரவேற்பு கொடுக்கிறது ரொம்ப சந்தோஷமா இருக்கு. மக்கள் என்ஜாய் பண்றாங்க அதுபோதும் !



  • தடைகளை கடந்து வந்த படம், பெரு நகரங்கள் மட்டுமில்லாமல் சிறு நகரங்களில் வரவேற்பு எப்படி இருக்கிறது.


வெங்கட்பிரபு : இங்கு மட்டுமல்ல, நீங்கள் சொல்வது போல ஊர்களில் இருந்து இந்த மாநாடு படத்திற்கு பெரிய வரவேற்பு கிடைத்திருக்கிறது ; வந்துக்கொண்டு இருக்கிறது. எல்லா தரப்பினரிடமிருந்து பாராட்டு வந்துக்கொண்டு இருக்கிறது. இவ்ளோ நாள் கஷ்டப்பட்டு வொர்க் பண்ணதுக்கு, நல்ல பலன் கிடைச்சுருக்குன்னு நெனக்கிறேன்.


’மங்காத்தா’ திரைப்படத்திற்கு பிறகு பிரியாணி, மாசு என்கிற மாசிலாமணி படங்களை வெங்கட்பிரபு இயக்கினாலும், அந்த படங்கள் எதிர்பார்த்த வெற்றியை கொடுக்கவில்லை. இப்போது மாநாடு திரைப்படத்தின் மூலம் மீண்டும் ஒரு வெற்றி படத்தை கொடுத்து Formக்கு வந்திருக்கிறார் வெங்கட்பிரபு. ‘மாநாடுசிம்புக்கு மட்டுமல்ல, வெங்கட்பிரபுவுக்கும் ஒரு நல்ல கம்பேக் மூவி..!


 


'என் பிரச்னைகளை நான் பாத்துக்குறன் என்ன மட்டும் நீங்க பாத்துக்குங்க' என சிம்பு கண்ணீர் விட்டதற்கு கைமேல் பலன் கிடைத்திருக்கிறது..!