Maanaadu Review: படம் திட்டமிட்டபடி இன்று திரையில் வெளியிடப்படுமா இல்லையா என்ற பலத்த எதிர்பார்ப்பும் சர்ச்சையும் கடைசி நிமிடம் வரை தொடர்ந்த நிலையில், கடைசி நேர காம்பரமைஸ் நடத்தப்பட்டு தியேட்டர்களில் வெளியாகியிருக்கிறது ‘மாநாடு’.
ஏதோ ஒரு சிறிய சம்பவம் நமக்கு முன்னர் நடந்த மாதிரியே இருக்குமே அந்த, தேஜாவூவை, கொஞ்சம் நீட்டித்து, அதுவே திரும்ப திரும்ப நடந்தால் அதுதான் மாநாடு. என் பிரச்னைகளை நான் பாத்துக்குறன் என்ன மட்டும் நீங்க பாத்துக்குங்க என சிம்பு கண்ணீர் விட்டதற்கு கைமேல் பலன் கிடைத்திருக்கிறது. ஆமாம், சிம்புவுக்கு இது நல்ல கம்பேக் மூவி.
மங்காத்தா திரைப்படத்திற்கு பிறகு இயக்குநர் வெங்கட்பிரபு எடுத்த பிரியாணி, மாஸ் படங்கள் சொல்லிக்கொள்ளும் அளவு ஹிட்டடிக்கவில்லை. ஆனால், இப்போது அவர் இயக்கியிருக்கும் மாநாடு(Maanaadu), வெங்கட்பிரவிற்கும் ஒரு சூப்பர் கம்பேக் திரைப்படமாக அமைந்திருக்கிறது.
தனது நண்பரான பிரேம்ஜி கல்யாணத்திற்காக துபாயிலிருந்து விமானத்தில் கோவை வரும் சிம்புக்கு, நடக்கப்போகும் நிகழ்வு கனவாக வருகிறது. அதில் சிம்பு முதல்வரான எஸ்.ஏ. சந்திரசேகரை சுட்டுக்கொல்கிறார். இந்த சம்பத்தில் இருந்து சிம்பு முதல்வரான எஸ்.ஏ சந்திரசேகரை எப்படி காப்பாறுகிறார் என்பதுதான் கதையின் கரு. படத்தின் தொடக்கத்தில் வரும் காட்சிகளே முதல் பாதி முழுவதும் ரீப்பீட்டு ஆனாலும், எந்த இடத்திலும் அவை சலிப்புத் தட்டிவிடாமல் ரசிகர்கள் கைத்தட்டி சிலாகிக்கும் படி காட்சிகளை அமைத்திருக்கிறார் இயக்குநரான வெங்கட்பிரபு.
தனது அட்டாகசமான நடிப்பால் ரசிகர்களின் கைத்தட்டல்களையும் விசில் சத்தங்களையும் தனக்கே உரிய பாணியில் தன் வசப்படுத்தி, அசத்தியிருக்கிறார் எஸ்.ஜே.சூர்யா. படத்தின் பரபரப்புக்கு யுவனின் இசை பலம் கூட்டித் தந்திருக்கிறது. நாயகி கல்யாணி பிரியதர்ஷன் தனது எதார்த்தமான நடிப்பால் ரசிக்க வைக்கிறார். சிம்பு, YG மகேந்திரன், எஸ்.ஜே.சூர்யா என மூவரும் இடம்பெறும் ஒரு சீரியசான காட்சியில், திரையரங்கையே சிரிப்பு மழையில் நனைய வைத்திருக்கிறார் வெங்கட்பிரபு.
ஒரே காட்சிகள் ஒரு முறை, இரண்டு முறை வரலாம் ஆனால், பத்து முறை, இருபது முறை வந்தால் பார்ப்பவர்களுக்கு சலிப்புத் தட்டதானே செய்யும். ஆனால், அப்படி எந்த சலிப்புமே தட்டிவிடாதபடி, பார்ப்பவர் ரசித்து, சிரித்து, கைத்தட்டும்படி காட்சிகளை கட்சிதமாக அமைத்த வெங்கட்பிரபு, இந்த படத்தின் மூலம் மீண்டும் வெற்றிபிரபுவாக உருவகம் எடுத்திருக்கிறார்.
நாட்டில் எங்கே என்ன பிரச்னை நடந்தாலும், அதற்கு இசுலாமியர்கள்தான் காரணம் என்ற பிம்பத்தை உருவாக்கும் அரசியல் சதுரங்கத்தையும், மத கலவரத்தையும் தொட்டு பேசியுள்ளது மாநாடு. அதற்கு தோதாக கோவை மாநகரத்தையும் தேர்ந்தெடுத்து இசுலாமியர்களின் வலிகளையும் வசனங்கள் மூலம் வெளிப்படுத்தி, தனது படைப்பை படைத்திருக்கிறார் இயக்குநர் வெங்கட் பிரபு.
அரியும் சிவனும் ஒன்னு, அத அரியாதவன் வாயில மண்ணு என்கிற மாதிரி அல்லாவும், சிவனும் ஒன்னு அத புரிஞ்சுக்காதவங்க மனசுல புண்ணு என்பதை தன் பாணியில் புட்டு புட்டு வைத்திருக்கிறது மாநாடு திரைப்படம். மொத்தத்தில் மாநாட்டிற்கு கூட்டம் சேர்க்க வேண்டியதில்லை, இந்த மாநாட்டிற்கு தானாக சேரும் கூட்டம்..!