உலகம் பல கோடி உயிர்கள் வசிக்கும் ஒரு வசிப்பிடம். இந்த வசிப்பிடத்தில் வசிக்கும் ஒரு சாதாரண உயிரே மனிதர்களாகிய நாம். இந்த சிறு துகளான மனிதர்கள் வசிக்கும், தாங்கள் சிறு காலத்தில் கோபம், வன்மம், பிரிவு, பொறாமை, சாதி, மதம் என நம்மை நாமே பிளவுபடுத்திக்கொண்டு வசிக்கிறோம். ஆனால், அன்புதான் இந்த உலகில் வசிக்கும் உயிர்களிடத்தில் நாம் செலுத்த வேண்டியது என்றும், அன்பை போலவே நாம் அனைவரும் சமம் என்பதையே நாம் மனதில் ஆழமாக நினைக்க வேண்டும் என்பதே அறநூல்கள் போதிப்பது ஆகும்.


அந்த அறத்தை ஆதரவற்றோர், மாற்றுத்திறனாளிகளின் வலியுடன் நமக்கு கடத்தியிருப்பார் காலத்தை கடந்த கவிஞர் வாலி. இளையராஜா இசையில் அன்புள்ள ரஜினிகாந்த் படத்தில் இடம்பெற்ற கடவுள் உள்ளமே பாடலை எப்போது கேட்டாலும் நமது மனதில் இனம்புரியாத உணர்வு உண்டாகும்.


அன்பு என்னும் நூலில் ஆக்கிய மாலை:


கடவுள் உள்ளமே கருணை இல்லமே எனத் தொடங்கும் இந்த பாடலின் முதல் சரணத்தில்,


"சின்ன சின்ன பூக்கள் சிந்திய வேலை


அன்பு என்னும் நூலில் ஆக்கிய மாலை


பாதம் செல்லும் பாதை காட்டிடும் தலைவா என் தலைவா..


ஊனம் உள்ள பேரை காத்திடும் இறைவா என் இறைவா.."


என்று வாலி எழுதியிருப்பார்.


அன்பு எனும் நூலில் சேர்ந்த மாலைகள் நாம் என்றும், நமக்கு பாதையை காட்டிடும் இறைவன் எனும் தலைவனே மாற்றுத்திறனாளிகளை காப்பாற்றுகிறார் என்ற அர்த்தத்தில் வாலி எழுதியிருப்பார்.


ஜீவன் யாவும் ஒன்றே:


அதே சரணத்தில்,


"ஜீவன் யாவும் ஒன்று..


இங்கு யாரும் சொந்தமே..


இதுதான் இயற்கை தந்த பாச பந்தமே.."


என்று எழுதியிருப்பார்.


உலகில் தோன்றிய உயிர்களாகிய நாம் அனைவரும் ஒன்றுதான் என்றும், இந்த பூமியில் உள்ள மனிதர்கள் அனைவருமே சொந்தங்கள் என்றும், யாருமே ஆதரவற்றோர் இல்லை என்றும், இதுதான் இயற்கையின் நியதி என்று மிக மிக அற்புதமாக வாலி எழுதியிருப்பார்.


ஊருக்கொரு வானம் இல்லையே:


இரண்டாவது சரணத்தில் சாதி, பேதம், மனிதநேயமின்மை ஆகியவற்றை தனது வரிகளால் வாலி விளாசியிருப்பார். அதாவது,


"கண்ணிழந்த பிள்ளை காணும் உண்மை..


கண்ணிருக்கும் பேர்கள் கண்டது இல்லை..


ஊருக்கொரு வானம் இல்லையே… இறைவா உன் படைப்பில்..


ஆளுக்கொரு ஜாதி இல்லையே.. அதுபோல் உயிர் பிறப்பில்.."


என்று மிக அற்புதமாக எழுதியிருப்பார்.


அதாவது, பார்வையற்றவர்கள் கூட நடந்துகொள்ளும் மனிதத்தன்மையுடன், நன்றாக பார்வையுள்ளவர்கள் கூட நடந்து கொள்ளாததை விமர்சித்து வாலி எழுதியிருப்பதற்கு போலவே, படத்திலும் அந்த காட்சி எடுக்கப்பட்டிருக்கும். அதற்கு அடுத்த வரியில் சாதி, மத பேதத்தை வாலி விமர்சித்திருப்பார். ஊருக்கொரு வானம் இல்லையே என்ற அந்த ஒற்றை வார்த்தையில், இந்த உலகமே ஒரு வானத்தின் கீழ் வரும்போது, உயிர்களில் மட்டும் ஏன் வேறு, வேறு சாதி வேறுபாடு என்று எழுதியிருப்பார்.


இறைவனுக்கு நன்றி:


அதே சரணத்தில்,


"உண்ணும் உணவும் நீரூம் தினம் தந்த தெய்வமே..


என்றும் உமக்கே நாம் நன்றி சொல்வோமே.."


என்று மனிதன் உயிர் வாழ அடிப்படைத் தேவையான உணவு, நீரைத் தந்த இறைவனுக்கு நன்றி என்று முடித்திருப்பார்.


பல்லவி, சரணம் என இந்த பாடலின் ஒவ்வொரு இடத்திலும் அன்பையும், சமத்துவத்தையும் வாலி தனது வரிகளால் எழுதியிருப்பார். காட்சி ரீதியாக பார்க்கும்போது இது கர்த்தரை நோக்கி பாடப்பட்ட பாடலைப்போல தோன்றினாலும், அனைத்து மதத்தினருக்கும் அன்பையும், சமத்துவத்தையும் போற்றும் மகத்தான பாடலே கடவுள் உள்ளமே ஓர் கருணை இல்லமே.


அடுத்த தொடரில் வேறு ஒரு பாடல் வரிகளுடன் சந்திக்கலாம்.


மேலும் படிக்க: ஆஹா என்ன வரிகள் 6: "ஆசை காதல் கைகளில் சேர்ந்தால்" : ஒரு தலை காதலன் பாடும் கல்யாண ராகம்!


மேலும் படிக்க: ஆஹா என்ன வரிகள் 5: தனிமைக்கும், இளமைக்கும் நடக்கும் போராட்டத்தை சொன்ன "அழகு மலராட!"