ஆஹா என்ன வரிகள் தொடரில் காலத்தை கடந்து மக்கள் மனதில் நிற்கும் பாடல் வரிகள் பற்றி பார்த்து வருகிறோம். ஆணோ, பெண்ணோ தன் துணையை இழந்து அவர்கள் தவிக்கும் தவிப்பையையும், வலியையும் வார்த்தைகளால் விளக்கவிட முடியாது. அதுவும் திருமணத்திற்கு பிறகு இளம் வயதில் கணவனின் துணையை இழந்த பெண்ணின் வலியும், தனிமையும் மிகவும் கொடுமையானது ஆகும்.


இளம் விதவையின் போராட்டம்:


இன்றைய காலத்தில் மறுமணம் பற்றிய புரிதல் பெரும்பாலான குடும்பங்களுக்கு வந்துள்ளது. ஆனால், 1984 போன்ற காலகட்டத்தில் கணவனை இழந்த பெண்ணிற்கு மறுமணம் செய்து வைக்கும் எண்ணமே இல்லாத காலகட்டம் அது. அதுபோன்ற காலத்தில் இளம் வயதிலே விதவையானாலும் அந்த பெண்ணை காலம் முழுவதும் வெள்ளை புடவையிலே மறுமணம் செய்து வைக்காமல் வீட்டிலே முடக்கி வைத்திருந்த மோசமான காலம் அது.


அந்த காலத்தில் கணவனை இழந்த ஒரு இளம் விதவையின் வலியை, தனிமையின் தவிப்பை அவளது விரகதாப வேதனையை உணர்த்தும் பாடலாக அமைந்திருக்கும் பாடல் அழகு மலராட. இசைஞானி இளையராஜாவின் இசையில், வாலியின் அதியற்புதமான வரிகளால் இந்த பாடல் உருவாகியிருக்கும்.


தாளத்தில் சேராத தனி பாடல்:


அழகு மலராட எனத் தொடங்கும் இந்த பாடலில், திருமணமான அன்றே கணவனை இழந்த பெண்ணின் ஏக்கத்தை உணர்த்தும் விதமாக,


“ விரல் கொண்டு மீட்டாமல்


வாழ்கின்ற வீணை..


குளிர்வாடை கொஞ்சாமல்


கொதிக்கின்ற சோலை..”


என்று எழுதியிருப்பார். ஒரு பெண்ணின் விரகதாபத்தை விரல் கொண்டு மீட்டாமல் வாழ்கின்ற வீணை என்ற வரிகள் மூலம் மிக அழகாக விரசமில்லாமல் கூறியிருப்பார் வாலி.


துணையை இழந்து அன்பிற்காகவும், அரவணைப்பிற்காகவும் ஏங்கும் தவிப்பை


“ஆகாயம் இல்லாமலே..


ஒரு நிலவு தரை மீது தள்ளாடுது..


ஆதாரம் இல்லாமலே..


ஒரு கொடியும் ஆடாமல் தலை சாயுது..


தாளத்தில் சேராத தனி பாடல் ஒன்று..


சங்கீதம் காணாமல் தவிக்கின்றது”


என்று எழுதியிருப்பார். ஆகாயம் இல்லாத நிலவு, தென்றல் காற்று தீண்டாமலே கீழே விழும் கொடி, எந்த தாளத்திலும் சேராத பாடல் என்று ஒரு பெண்ணின் தனிமை வேதனையை நமக்கு கடத்தியிருப்பார் வாலி.


வசந்தம் இனி வருமா?


தன் வாழ்க்கை மாறிவிடாதா? மற்ற பெண்களை போல நாமும் வாழ்ந்துவிட மாட்டோமா? அன்பு, பாசம், கணவன் என முழு குடும்ப வாழ்க்கையை வாழ்ந்துவிட மாட்டோமா? என்று ஏங்கும்  ஒரு பெண்ணின் வலியை, வாலி தன்னுடைய


“ வசந்தம் இனி வருமா.?


வாழ்வினிமை பெறுமா..?


ஒரு பொழுது மயக்கம்..?


ஒரு பொழுது கலக்கம்..?"


என்று அற்புதமாக எழுதியிருப்பார்.


தனிமையின் கொடுமை:


இளம் வயதிலே கணவனை இழந்து தவிக்கும் அந்த பெண்ணின் மனதிற்கும், தனிமைக்கும், இளமைக்கும் நடக்கும் போராட்டத்தை அடுத்தடுத்த வரிகளில் வாலி எழுதியிருப்பார்.


இதுவரை யாரும் வாசிக்காத புல்லாங்குழலாகவும், யாரும் சூடாத பூவாகவும், தேய்ந்து கொண்டிருக்கும் மஞ்சள் நிலாவாகவும், துணை இல்லாத வெள்ளை புறா என்றும் வர்ணித்து,


“ பூங்காற்று மெதுவாக பட்டாலும் போதும்..


பொன்மேனி நெருப்பாக கொதிக்கின்றதே..


நீரூற்று பாயாத நிலம்போல நாளும்..


என் மேனி தரிசாக கிடக்கின்றதே..


தனிமையிலும் தனிமை..


கொடுமையிலும் கொடுமை..


இனிமை இல்லை வாழ்வில்..


எதற்கு இந்த இளமை?”


என்று எழுதியிருப்பார்.


இளமையில் அனுபவிக்க வேண்டிய எந்த மகிழ்ச்சியையும் அனுபவிக்காமல் இளமை அழிந்து போவதால் ஒரு பெண் எந்தளவு மன வேதனை அடைகிறாள் என்பதை இந்த வரிகள் மூலம் மிக மிக அழகாக வாலி எழுதியிருப்பார்.


இந்த பாடல் வரிகள் துணையை இழந்து தவிக்கும் இளம் விதவைகள், குறிப்பிட்ட வயதை கடந்தும் திருமணமாகாதவர்கள், துணையை பிரிந்து தவிப்பவர்கள் என அனைவரின் வலியையும் உணர்த்தும் விதமாக எழுதியிருக்கும். 1984ம் ஆண்டு வந்த வைதேகி காத்திருந்தாள் படத்தில் இளம் விதவையாக நடித்திருந்த ரேவதியின் வலியை உணர்த்தும் விதமாக இந்த பாடல் அமைந்திருக்கும். வாலியின் அற்புதமான வரிகளுக்கு இளையராஜா இசையமைத்திருப்பார். இன்று வரை பெண்ணின் இளமை தவிப்பை உணர்த்தும் பாடல்களில் இந்த பாடல் முதன்மையானதாக இருக்கிறது.


மேலும் படிக்க: ஆஹா என்ன வரிகள் 4: "மரத்தை வச்சவன் தண்ணி ஊத்துவான்" பாரம் குறைக்கும் இளையராஜா வரிகள்!


மேலும் படிக்க: ஆஹா என்ன வரிகள் 3: "யாரோடு இங்கு எனக்கென்ன பேச்சு" காதல் துணையை இழந்த ஆணின் வலி!