தமிழ் சினிமாவில் மனிதனின் எத்தனையோ உணர்வுகளை வெளிப்படுத்தும் பாடல்கள் இருந்தாலும், காதல் உணர்வுகளை வெளிப்படுத்தும் பாடல்களே அதிகம். ஒரு தலை காதல், சேர்ந்த காதல், சேராத காதல், சொல்லாத காதல், பார்க்காத காதல் என காதலின் ஒவ்வொரு வடிவத்தையும் உயிருடன் சொன்ன பாடல்கள் எண்ணிலடங்காதவை.
ஒரு தலை காதலின் ராகம்:
தன் காதலி அவளுக்கு பிடித்த வாழ்க்கையை வாழ வேண்டும், அவள் எங்கிருந்தாலும் மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்று எண்ணுவதே உண்மையான காதல் என்று சொல்லிய பாடல்கள் மிக அதிகம். அதுவும் தான் நேசித்த பெண் தனக்கானவள் இல்லை என்றபோதும், அவளது ஆசைகள் அனைத்தும் நிறைவேற வேண்டும் என்பதும், ஒரு தலை காதலாக இருந்தாலும் அவளது ஆசையை நிறைவேற்றிய காதலன் பாடும் கல்யாண ராகமாகவும், அவனது காதலை சொன்ன பாடலாகவும் அமைந்ததுதான் “ஆனந்தம் ஆனந்தம் பாடும்” பாடல்.
நடிகர் விஜய்யின் திரை வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்திய பூவே உனக்காக படத்தில், எஸ்.ஏ.ராஜ்குமார் இசையில் இந்த பாடலை பழனிபாரதி எழுதியிருப்பார். உன்னிகிருஷ்ணன் இந்த பாடலை பாடியிருப்பார்.
நான்கு வரி காவியம்:
காற்றோடு சேர்ந்து நம் மேல் விழும் சாரல் மழையாக தன் காதலை வாழ்த்திய காதலன், அவள் வரும் பாதையில் பூக்களை தூவுவதாக வர்ணித்திருக்கும் பழனி பாரதி, தனது அடுத்த வரிகளில் ஒட்டுமொத்த காதலர்களின் ஆசைகளையும் நான்கே வரிகளில் காவியமாக்கியிருப்பார்.
“ மனதில் நின்ற காதலியே..
மனைவியாக வரும்போது..
சோகம் கூட சுகமாகும்..
வாழ்க்கை இன்ப வரமாகும்..”
இவ்வாறு எழுதியிருப்பார்.
சேராவிட்டாலும் வாழ்த்துங்கள்:
தான் நேசித்த பெண்ணையே திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்பதே ஒவ்வொரு ஆணின் ஆசையாக இருக்கும். அப்படி நேசித்த பெண்ணே மனைவியாக வந்தால் எந்த பிரச்னையாக இருந்தாலும் தைரியமாக எதிர்கொள்ளலாம் என்பதையும், வாழ்க்கை மிகுந்த மகிழ்ச்சியாக அமையும் என்பதையும் தனது கவிபாடும் வரிகளால் எழுதி பழனிபாரதி நம் மனதை தொட்டிருப்பார்.
அடுத்த வரிகளில் தான் நேசித்த பெண் தனக்கானவள் இல்லை என்றாலும், அவளுடன் திருமணம் நடக்காவிட்டாலும் அவள் மகிழ்ச்சியுடனும், மனநிறைவுடனும், முகத்தில் எப்போதும் சிரிப்புடன் வாழ வேண்டும் என்று வாழ்த்தும் காதலனாக இருக்க வேண்டும் என்பதை
“ உன் வாழ்வில் செல்வங்கள் எல்லாம்..
ஒன்றாக சேர்ந்திட வேண்டும்..
பூவே உன் புன்னகை என்றும்..
சந்தோஷம் தந்திட வேண்டும்..”
என்று எழுதியிருப்பார்.
ஆசை காதல் கைகளில் சேர்ந்தால்:
மேலும், மற்றொரு வரிகளில், தன் காதல் கைகூடினால் கிடைக்கும் மகிழ்ச்சியை இரண்டே வரிகளில் மிக அழகாக வர்ணித்திருப்பார். அதாவது,
“ ஆசை காதல் கைகளில் சேர்ந்தால்..
வாழ்வே சொர்க்கம் ஆகுமே..”
என்று எழுதியிருப்பார்.
ஒரு தலை காதலன் தனது காதலியின் ஆசையை நிறைவேற்றும் திரைக்கதையுடன் வெளிவந்த பூவே உனக்காக திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்ற படம் ஆகும்.
திருமணத்தில் கைகூடாமல் காதல் பிரிவைச் சந்திக்க நேரிட்டால் தனது காதலியையோ, காதலனையோ இழிவுபடுத்தும் விதமாக மோசமாக நடந்து கொள்ளாமல், பிரிந்தாலும் நமது காதலனோ/காதலியோ மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்று எண்ண வேண்டும் என்ற உயர்ந்த எண்ணமே நம் காதலுக்கு நாம் செய்யும் சிறப்பு என்று உணர்த்தும் விதமாக எழுதப்பட்ட இந்த பாடல் இன்றும் பலருக்கு ஒரு காதல் தேசிய கீதமே ஆகும்.
மேலும் படிக்க: ஆஹா என்ன வரிகள் 5: தனிமைக்கும், இளமைக்கும் நடக்கும் போராட்டத்தை சொன்ன "அழகு மலராட!"
மேலும் படிக்க: ஆஹா என்ன வரிகள் 4: "மரத்தை வச்சவன் தண்ணி ஊத்துவான்" பாரம் குறைக்கும் இளையராஜா வரிகள்!