தமிழ் சினிமாவின் காலத்தைக் கடந்து நிற்கும் பாடல் வரிகளில், அதிக அளவிலான தத்துவப் பாடல்களை எழுதியவராக கண்ணதாசனே இருப்பார். அவர் எழுதிய ஒவ்வொரு தத்துவ பாடல்களும் மிக அருமையாகவும், ஆறுதலாகவும் இருக்கும்.


நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால்:


அதில் மனதிற்கு மிக மிக ஆறுதலாக இருக்கும் பாடல்களில் ஒன்று “நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால்”. 1962ஆம் ஆண்டு வெளியான ‘நெஞ்சில் ஓர் ஆலயம்’ படத்தில் இந்தப் பாடலை கண்ணதாசன் எழுதியிருப்பார். முன்னாள் காதலியின் கணவனுக்கு சிகிச்சை அளிக்கும் முக்கோணக் காதல் கதையில், அந்தப் பெண், அவளது கணவன் மற்றும் முன்னாள் காதலன் ( மருத்துவர்) ஆகிய மூன்று பேருக்குமான மனப் போராட்டத்தை மிக அழகாக ஸ்ரீதர் இயக்கி வெற்றி பெற்றிருப்பார்.


முதல் வரியே வாழ்க்கையின் யதார்த்தத்தை நமக்கு உணர்த்தும் வகையில்,


“நினைப்பதெல்லாம் நடந்து விட்டால் தெய்வம் ஏதும் இல்லை..


நடந்ததையே நினைத்து இருந்தால் அமைதி என்றும் இல்லை.."


என்று எழுதியிருப்பார்.


அதற்கு அடுத்த வரிகளில்,


"முடிந்த கதை தொடர்வதில்லை இறைவன் ஏட்டினிலே..


தொடர்ந்த கதை முடிவதில்லை மனிதன் வீட்டினிலே.."


என்று எழுதியிருப்பார்.


தொலைந்து போகும் நிம்மதி:


அதாவது, நாம் வாழ்வில் எதிர்பார்க்கும் அனைத்து நிகழ்வுகளும் அரங்கேறி விடுவதில்லை என்றும், அவ்வாறு நடந்து விட்டால் தெய்வம் என்ற ஒன்று இருப்பதை நாமும் நினைவில் வைத்துக் கொள்ள மாட்டோம் என்றும் மிக மிக அழகாக சொல்லியிருப்பார். நடந்து முடிந்ததையே நம் மனதில் எண்ணிக் கொண்டே இருந்தால், வாழ்வில் நிம்மதியை தொலைக்க நேரிடும். அது நம் வாழ்க்கையையே மிக மோசமாக அழைத்துச் சென்று விடும். அதனால், நடந்ததை நினைத்து வருந்தாமல் அடுத்தக் கட்டத்தை நோக்கி பயணியுங்கள் என்று ஆறுதல் கூறியிருப்பார்.


அதற்கு அடுத்த வரிகளில், இறைவனின் பார்வையில் சில முடிந்த விஷயங்கள் தொடராது. ஆனால், மனிதனின் மனமோ அது மீண்டும் நிகழ்ந்து விடாதா? என்று ஏங்கும். இந்த மனிதனின் தவிப்பையும், யதார்த்தத்தின் நிகழ்வையும் அவர் மிக அற்புதமாக இரண்டே வரிகளில் எழுதியிருப்பார்.


குழம்பித் தவிக்கும் மனம்:


அடுத்த வரிகளில் மனிதனின் எண்ண ஓட்டத்தை உணர்த்தும் வகையில்,


"ஆயிரம் வாசல் இதயம்...


அதில் ஆயிரம் எண்ணங்கள் உதயம்..


யாரோ வருவார்.. யாரோ இருப்பார்..


வருவதும் போவதும் தெரியாது.."


என்று கண்ணதாசன் எழுதியிருப்பார்.


மனிதனின் மனதில் வரும் சிந்தனைகளுக்கு அளவே இருக்காது. எதை, எதையோ நினைத்து இந்த மனம் குழம்பிக் கொண்டே இருக்கும். தன்னைத் தானே சாந்தப்படுத்திக் கொள்ளும். யாரைப் பற்றி சிந்திப்போம், யாருடைய நினைவுகள் இருக்கும், யாருடைய நினைவுகள் இருக்காது என எதுவுமே நமக்குத் தெரியாது என்பதையே கவியரசர் மேலே சொன்ன வரிகளில் இவ்வாறு எழுதியிருப்பார்.


அடுத்த வரிகளில்,


"ஒருவர் மட்டும் குடியிருந்தால்


துன்பம் ஏதும் இல்லை..


ஒன்று இருக்க ஒன்று வந்தால்..


என்றும் அமைதி இல்லை.."


என்று எழுதியிருப்பார்.


வாழ்வில் எப்போதும் ஒன்றை விட ஒன்று சிறந்ததாகவே இருக்கும். அதற்காக இது, அது என்று மாறிக் கொண்டே இருந்தால் வாழ்வின் நிம்மதியை தொலைக்க நேரிடும் என்பதே இந்த வரிகளின் சாராம்சம். சில விஷயங்களும், சில தேர்வுகளும் வாழ்வில் சரியானதைத் தேர்வு செய்து மாறாமல் இருந்தால் துன்பம் வராது என்றும் கூறியிருப்பார்.


மனம் தெளியும்:


அடுத்த வரிகளில்,


"எங்கே வாழ்க்கை தொடங்கும்..


அது எங்கே எவ்விதம் முடியும்..


இதுதான் பாதை.. இதுதான் பயணம்..


என்பது யாருக்கும் தெரியாது..


பாதையெல்லாம் மாறி வரும்..


பயணம் முடிந்து விடும்..


மாறுவதை புரிந்து கொண்டால்..


மயக்கம் தெளிந்து விடும்.."


இவ்வாறு எழுதியிருப்பார்.


அதாவது, நாம் எப்போது பிறந்தோம் என்பதை நம்மால் சொல்ல முடியும். நம் வாழ்வை மாற்றும் தருணம் எப்போது வரும்? அதன் முடிவு எப்படி இருக்கும்? நம் வாழ்க்கையின் பாதை எது? என்பது நம் யாருக்குமே தெரியாது.


மனிதனின் வாழ்க்கைp பயணத்தின் பாதை எப்போது வேண்டுமானாலும், எந்த திசைக்கு வேண்டுமானாலும் மாறலாம். ஒரு கட்டத்தில் வாழ்வின் பயணமும் முடிந்து விடும். இந்த மாற்றத்தை உணர்ந்து கொண்டாலே சில குழப்பங்களுக்கு தீர்வு கிடைத்து மனம் தெளிவடைந்து விடும் என்பதையே கண்ணதாசன் எழுதியிருப்பார். மனம் மிகக் குழப்பமாக தடுமாறிக் கொண்டிருக்கும் தருணத்தில் இந்தப் பாடல் வரிகள் மிக அருமையாக மனதிற்கு ஆறுதலாக அமையும். அடுத்த தொடரில் வேறு ஒரு பாடலுடன் சந்திக்கலாம்..!


மேலும் படிக்க: ஆஹா என்ன வரிகள் 8: "புத்தியுள்ள மனிதரெல்லாம் வெற்றி காண்பதில்லை" கண்ணதாசன் சொன்ன உலக தத்துவம்!


மேலும் படிக்க: ஆஹா என்ன வரிகள் 7: "ஆளுக்கொரு வானம் இல்லையே" அன்பையும், சமத்துவத்தையும் போதிக்கும் கடவுள் உள்ளமே!