சித்திரைத் திருவிழா 2024

 

மதுரை கள்ளழகர் சித்திரைத் திருவிழா கடந்த 19-ம் தேதி தொடங்கிய நிலையில் கடந்த செவ்வாய் அன்று அதிகாலை லட்சக்கணக்கான பக்தர்கள் முன்பாக பச்சை பட்டுடுத்தி தங்க குதிரை வாகனத்தில் கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளினார். இதனைத்தொடர்ந்து மதிச்சியம் பகுதியில் உள்ள ராமராயர் மண்டகப்படியில் தீர்த்தவாரி நிகழ்வு நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து புதன்கிழமை மாலை முதல் இரவு வரை அண்ணாநகர், வண்டியூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மண்டகப்படிகளில் கள்ளழகர் தங்க குதிரை வாகனத்தில் விடிய விடிய எழுந்தருளி வண்டியூர் வீர ராகவபெருமாள் கோவிலுக்கு சென்றடைந்தார்.  

 

இதனையடுத்து வியாழனன்று காலை வண்டியூர் வீர ராகவ பெருமாள் கோவிலில் கள்ளழகருக்கு திருமஞ்சனம் செய்யப்பட்டு பின் சைத்திரயோபசாரம் நடந்தது. பின்னர் ஏகாந்த சேவையில் உலர்திராட்சை மாலை, பாதாம் பருப்பு மாலை மற்றும் தாமரை மாலை ஆகிய மாலைகளை அணிந்தபடி எழுந்தருளிய கள்ளழகர் வீர ராகவ பெருமாள் கோவிலை வலம்வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.  பின்னர் சிறப்பு பூஜைகள் நடைபெற்ற பின்னர் சேஷ வாகனத்தில் சுந்தரராஜப் பெருமாள் திருக்கோலத்தில் புறப்பாடகிய கள்ளழகர் பல்வேறு பகுதிகளில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தபடி வண்டியூர் பகுதியில்  வைகையாற்றின் மையத்தில் உள்ள தேனூர் மக்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் தேனூர் மண்டகபடியில் எழுந்தருளினார்.

 

ஆண்டுதோறும் மண்டகபடியின்  கீழ் பகுதியிலயே சாப விமோசனம் அளிக்கும் நிகழ்வு நடைபெற்று வந்நிலையில் 62ஆண்டுகளுக்கு பின்னர் மூன்றாவது ஆண்டாக தொடர்ச்சியாக தேனூர் மண்டபத்தில்  உள்பகுதியில் கள்ளழகர் எழுந்திருனார்.  பல்வேறு நிகழ்ச்சிகளை முடித்து மதுரையிலிருந்து அழகர் மலைக்கு புறப்படும் முன்பாக தல்லாகுளம் கருப்பண்ண சுவாமி கோவிலில் பூப்பல்லக்கு நிகழ்ச்சியில்  பங்கேற்கும் கள்ளழகர் பூப்பல்லக்கில் அலங்காரமாகி மதுரை மக்களிடமிருந்து விடை பெற்று அழகர் மலை செல்வார்.

 

12 வகை அறுசுவை உணவு

 

இந்த திருவிழாக்கள் முழுவதிலும் தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து பாதுகாப்பிற்காக மதுரைக்கு வருகை தரும் காவல்துறையினர் வேலை களைப்பால் அசந்து போய் உட்காரக் கூட இடம் இன்றி தவித்து வருவார்கள். திருவிழா நடைபெறும் பகுதியில் சாப்பாட்டு கடைகள் எல்லாம் திறந்து இருக்காது. கள்ளழகர் திருவிழா நடைபெறும் இந்த மூன்று நாட்களிலும் பணிபுரிந்து விட்டு வேலை களைப்பில் பணம் கொடுத்தாலும் சாப்பிட இயலாத சூழ்நிலையில் இருக்கும் காவலர்களுக்காக வருடா வருடம் மதுரை தல்லாகுளத்தில் உள்ள, ரெங்கா பிளானர்ஸ் லிமிட்டெட்  நிறுவனத்தின் சேர்மன் இன்ஜினியர் கமலக்கண்ணன் 12 வகை அறுசுவை உணவுடன் காவலர்கள் மற்றும் வெளியூரில் இருந்து வரும் பொதுமக்கள் அமர்ந்து சாப்பிட்டு களைப்பாறி செல்வதற்கான வழிவகைகளை செய்துள்ளார்.

 

அறுசுவை உணவு அன்னதான ஏற்பாடுகளை ரெங்கா பிளானர்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் சேர்மன்  இன்ஜினியர் கமலக்கண்ணன் ரெங்கா பிளானர்ஸ் நிறுவன டைரக்டர் மகாலட்சுமி ரெங்கா பிளானர்ஸ் நிர்வாகிகள் இன்ஜினியர் திருப்பதி ராஜா இன்ஜினியர் வேல் பாண்டியன் கிருபாகரன் உள்ளிட்டோர் செய்திருந்தனர். இது வேலை களைப்பில் இருக்கும் காவலர்கள் மத்தியிலும் வெளியூரிலிருந்து வரும் பொதுமக்கள் மத்தியிலும் சிறந்த வரவேற்பை பெற்றுத் தந்து, அவரை பொதுமக்களும் காவலர்களும் பாராட்டி வருகின்றனர்.