தமிழ் சினிமாவில் காதல் பாடல்கள் ஏராளமாக வந்திருந்தாலும் முக்கோண காதலைச் சொன்ன பாடல்கள் மிக குறைவு. அந்த வரிசையில் முக்கோண காதலைச் சொன்ன பாடல்களில் மயங்கினேன் சொல்லத் தயங்கினேன் பாடலுக்கு என்று தனியான இடம் உண்டு.


மயங்கினேன் சொல்லத் தயங்கினேன்:


விஜயகாந்த் நடிப்பில் உருவான நானே ராஜா நானே மந்திரி படத்தில் இளையராஜா இசையில் உருவான இந்த பாடலை வாலி எழுதியிருப்பார். பாடல் வரிகளை மட்டும் கேட்கும்போது காதலன், காதலியை நோக்கி பாடுவது போல இந்த பாடல் எழுதப்பட்டிருக்கும். ஆனால், காட்சி வடிவத்தில் ராதிகா விஜயகாந்தை நினைத்தும், விஜயகாந்த் மற்றொரு நாயகி ஜீவிதாவை நினைத்தும் பாடுவது போலவும் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும்.


பாடலின் தொடக்கமே,


"மயங்கினேன் சொல்லத் தயங்கினேன்..


உன்னை விரும்பினேன் உயிரே..


தினம் தினம் உந்தன் தரிசனம்


பெறத் தவிக்குதே மனமே!


இங்கு நீயில்லாமல் வாழும் வாழ்வுதான் ஏனோ?"


என்று வாலி எழுதியிருப்பார்.


உன் நினைவாலும், பிரிவாலும் மயங்கி இருக்கிறேன். அதை உன்னிடம் சொல்ல எண்ணும்போது அதை எவ்வாறு சொல்வது என்று தெரியாமல் நான் தயங்குகிறேன். உன்னை என் உயிராக விரும்பும் என் மனம், உன்னை எப்படியாவது பார்த்துவிட வேண்டும் என்று தினமும் ஏங்கித் தவிக்கிறது. நீ இல்லாமல் வாழும் இந்த வாழ்க்கை எப்படி சாத்தியம்? என்று காதலி மேல் கொண்ட காதலால் தவிக்கும் காதலனின் தவிப்பை மிக அழகாக எழுதியிருப்பார்.


அடுத்த வரிகளில்,


"உறக்கமில்லாமல் அன்பே நான் ஏங்கும் ஏக்கம் போதும்..


இரக்கமில்லாமல் என்னை நீ வாட்டலாமோ நாளும்?


வாடைக்காலமும் நீ வந்தால் வசந்தம் ஆகலாம்..


கொதித்திருக்கும் கோடைக்காலமும்


நீ வந்தால் குளிர்ச்சி காணலாம்.."


என்று எழுதியிருப்பார்.


உன்னை எப்போது சேர்வேன் என்று ஒவ்வொரு இரவும் தூக்கமின்றி நான் தவித்தது எல்லாம் போதும். என்னுடைய இந்த தவிப்பை எல்லாம் நீ அறிந்தும் கொஞ்சம் கூட மனம் இரங்காமல் இப்படி என்னை வாட்டி வதைக்கலாமா? உன் வருகையால் என் நாட்கள் வசந்தம் ஆகும். கோடையைப் போல அனலாக தகிக்கும் என் வாழ் நாட்கள் நீ வந்தால் நிச்சயம் குளிர்ச்சி அடையும் என்று காதலனின் ஏக்கத்தை வாலிகள் தனது வித்தக வரிகளால் அழகாக மாற்றியிருப்பார்.


இதற்கு அடுத்து,


"எந்நாளும் தனிமையே எனது நிலைமையோ..


துன்ப கவிதையோ கதையோ..?


இரு கண்ணும் என் நெஞ்சும்


இரு கண்ணும் என் நெஞ்சும் நீரிலாடுமோ..?"


என்று எழுதியிருப்பார்.


உன்னுடன் சேர்ந்து எப்போது வாழ்வேன் என்று ஏங்கி தனிமையிலே என் வாழ்நாள் முழுவதும் போய் விடுமோ? துன்ப கவிதையாகவே என் காதல் கதையும் முடிந்து விடுமோ? எனது இரண்டு கண்களும், உன்னையே ஏங்கித் தவிக்கும் எனது நெஞ்சும் கண்ணீரிலே நனைந்திடுமோ? என்று எழுதியிருப்பார்.


இதில், காதலன் காதலியை எண்ணி ஏங்குவது போலவும், காதலி தனது காதலனை நினைத்து ஏங்குவது போலவும் பாடல் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும்.


அடுத்த வரிகளில்,


"ஒரு பொழுதேனும் உன்னோடு சேர்ந்து வாழனும்..


உயிர் பிரிந்தாலும் அன்பே உன் மார்பில் சாயனும்..


மாலை மங்கலம் கொண்டாடும் வேளை வாய்க்குமோ..?


மணவறையில் நீயும் நானும் பூச்சுடும் நாளும் தோன்றுமோ?"


என்று  எழுதியிருப்பார்.


அதாவது, இந்த வாழ்நாளில் ஒரு நாளாவது உன்னோடு சேர்ந்து வாழ்ந்துவிட வேண்டும். என்னை விட்டு என் உயிர் பிரிந்து செல்லும் நேரத்தில் கூட, உன் மார்பில் சாய்ந்து கொள்ள வேண்டும். உன் கழுத்தில் மாலையிட்டு திருமணம் செய்து கொள்ளும் அந்த நேரம் வந்துவிடாதோ? நம் திருமணத்தை கொண்டாடும் அந்த மணவறையில் நீயும், நானும் மாலை மாற்றி மணமக்களாகும் நாளும் வந்துவிடாதோ? என்றும் வாலி காதல் துணையை திருமணம் செய்யத் துடிக்கும் மற்றொரு காதல் துணையின் ஏக்கத்தை வரிகளாக மாற்றியிருப்பார். இதை காதலியை எண்ணி காதலனும், காதலனை எண்ணி வாடும் காதலியும் பாடுவதுபோல எழுதியிருப்பார்.


மேலே கூறிய வரிகளுக்கு அடுத்தபடியாக,


"ஒன்றாகும் பொழுதுதான் இனிய பொழுதுதான்


உந்தன் உறவுதான் உறவு..


அந்த நாளை.. எண்ணி நானும்


அந்த நாளை எண்ணி நானும் வாடினேன்.."


என்று வாலி முடித்திருப்பார்.


அதாவது, நாம் இருவரும் ஒன்றாக சேரும் பொழுதுதான் இனிய பொழுது என்றும், அந்த நாளை எண்ணி நான் வாடிக் கொண்டிருக்கிறேன் என்று வாலி முடித்திருப்பார். இந்த பாடலை வரிகளாக மட்டும் கேட்டால் காதலனை எண்ணி காதலியும், காதலியை எண்ணி காதலனும் பாடுவது போலவும் எழுதியிருப்பார்.


ஆனால், படத்தில் ராதிகா விஜயகாந்தை எண்ணியும், விஜயகாந்த் ஜீவிதாவை நினைத்தும் பாடுவது போல அழகாக காட்சிப்படுத்தியிருப்பார்கள். இந்த பாடலுக்கு ஜெயச்சந்திரன், சுசீலா குரல் உயிர் சேர்த்திருக்கும். சுசீலா குரலில் மட்டும் ஒரு சோகம் கலந்த காதல் தனித்துவமாக தெரிந்திருக்கும்.


அடுத்த தொடரில் வேறு ஒரு பாடலுடன் நாம் சந்திக்கலாம்.


மேலும் படிக்க: ஆஹா என்ன வரிகள் 16: "ஞாபகங்கள் தீ மூட்டும்.. ஞாபகங்கள் நீரூற்றும்" நினைவுகளை தாலாட்டும் ஏதோ ஒரு பாட்டு!


மேலும் படிக்க: ஆஹா என்ன வரிகள் 15: துணையற்றவர்களின் மன வேதனையைச் சொல்லும் "நீ வருவாய் என!"