Rohit sharma MI Journey: மும்பை இந்தியன்ஸ் அணியுடனான 14 வருட பயணத்தை, நடப்பு தொடருடன் ரோகித் சர்மா முடித்துக் கொள்வார் என பல்வேறு தகவல்கள் வெளியான வண்ணம் உள்ளன.
மும்பை அணியில் ரோகித் சர்மா:
ஐபிஎல் தொடரில் கோலோச்சியதன் மூலம் இந்திய அணிக்கே கேப்டனாக உருவெடுத்தவர் ரோகித் சர்மா. சச்சினுக்கான மும்பை அணியின் ரசிகர்களாக இருந்தவர்களை அப்படியே தன்பக்கம் ஈர்த்ததோடு, மும்பை அணியை பல தகர்க்க முடியாத சாதனைகளை வழிநடத்திய பெருமையும் ரோகித் சர்மாவையே சேரும். வெறும் 22 வயது இளைஞராக மும்பை அணிக்குள் வந்தவர், தற்போது தனது பெயரையே ஒரு பிராண்டாக மாற்றியுள்ளார். இந்நிலையில் தன், 11 ஆண்டுகளாக வகித்து வந்த மும்பை அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து ரோகித் சர்மா நடப்பாண்டு நீக்கப்பட்டார். இதனால், அடுத்த ஐபிஎல் தொடரில் மும்பை அணிக்காக ரோகித் சர்மா விளையாடமட்டார் என பல தகவல்கள் வெளியான வண்ணம் உள்ளன. இந்த சூழலில் இதுவரை மும்பை அணியுடனான ரோகித் சர்மாவின் பயணம் தொடர்பான முக்கிய நிகழ்வுகள் கீழே விவரிக்கப்பட்டுள்ளன.
மும்பை அணியில் ரோகித் சர்மா பயணம்:
- 2011 - டெக்கான் சார்ஜர்ஸ் அணியில் இருந்து நீங்கிய பிறகு மும்பையில் அணியில் இணைந்த ரோகித் சர்மா, 2011ம் ஆண்டு ஏப்ரல் 10ம் தேதி அந்த அணிக்காக தனது முதல் போட்டியில் விளையாடினார்.
2012: 17 போட்டிகளில் 30.92 சராசரியுடன் 433 ரன்கள் எடுத்தார். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக ஐபிஎல்லில் தனது அதிவேக அரைசதத்தை அடித்தார். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக ஐபிஎல்லில் தனது அதிகபட்ச ஸ்கோரான 109* ரன்கள் எடுத்தார்.
- 2013 -அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி 19 போட்டிகளில் 538 ரன்கள் குவித்தார். அதோடு, ரிக்கி பாண்டிங் கேப்டன் பதவியில் இருந்து விலகியதும், நிர்வாகம் ரோஹித்தை கேப்டனாக நியமித்தது. அந்த பொறுப்பை ஏற்ற முதல் வருடத்திலேயே, மும்பை அணி அவரது தலைமையில் தனது ஐபிஎல் பட்டத்தை வென்றது.
- 2015 - பேட்டிங்கில் தனது ஃபார்மைத் தொடர்ந்த ரோகித் சர்மா 16 போட்டிகளில் 482 ரன்கள் குவித்தார். அதோடு, மும்பை அணி இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டம் வெல்ல செய்தார்.
- 2017 - ரோகித் சர்மா தனது 100வது ஐபிஎல் போட்டியில் ஈஸ்டர்ன் டெர்பி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக விளையாடினார். விறுவிறுப்பான மோதலில், 1 ரன் வித்தியாசத்தில் ரைசிங் புனே சூப்பர்ஜெயன்ட் அணியை வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் மூன்றாவது முறையாக ஐபிஎல் பட்டத்தை வென்றது.
- 2019 - 15 போட்டிகளில் 405 ரன்கள் எடுத்த ரோகித் சர்மா, தனது 150வது ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக விளையாடினார். தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸை தோற்கடித்து, ஐபிஎல் வரலாற்றில் மிக வெற்றிகரமான அணியாக மும்பை இந்தியன்ஸ் தனது நான்காவது ஐபிஎல் பட்டத்தை உறுதி செய்தது.
- 2020 - தனது 200வது ஐபிஎல் போட்டியில் விளையாடினார். அந்த ஆண்டில் கோப்பையை வென்றதோடு ஐபிஎல் வரலாற்ற்ல் ஐந்துமுறை கோப்பையை வென்ற முதல் அணி, தொடர்ந்து இரண்டு முறை கோப்பையை வென்ற இரண்டாவது அணி என்ற சாதனையை நிகழ்த்த வழிவகை செய்தார்.
- 2021 - ஐபிஎல் தொடரில் 4,000 ரன்களை பூர்த்தி செய்தார்
- 2022 - ஐபிஎல் வரலாற்றில் ஒரு சீசனின் முதல் ஏழு போட்டிகளில் தோல்வியடைந்த முதல் அணி என்ற, மோசமான சாதனையையும் ரோகித் சர்மா எதிர்கொண்டார்.
- 2023 - 5000 ரன்களை கடந்த முதல் மும்பை இந்தியன்ஸ் வீரர் ஆனார்.
- 2024: மும்பை இந்தியன்ஸ் தலைவர் பதவியில் இருந்து விலகி, ஹர்திக் பாண்டியாவிடம் கேப்டன் பொறுப்பை ஒப்படைத்தார்.
ஐபிஎல் வரலாற்றில் ரோகித் சர்மா:
36 வயதான ரோஹித் சர்மா ஐபிஎல் வரலாற்றில் தோனிக்குப் பிறகு 250 போட்டிகளில் விளையாடிய இரண்டாவது வீரர் என்ற பெருமையைப் பெற்றார். இதுவரை 257 போட்டிகளில் விளையாடி 43 அரைசதங்கள் மற்றும் 2 சதங்கள் உட்பட 6 ஆயிரத்து 628 ரன்களை குவித்துள்ளார். அதிகபட்சமாக கொல்கத்தா அணிக்கு எதிராக 109 ரன்களை சேர்த்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். 32 இன்னிங்ஸ்களில் பந்துவீசி ஒரு ஹாட்ரிக் உட்பட 15 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். ஒரு வீரராகவும், கேப்டனாகவும் ஐபிஎல் இறுதிப்போட்டியில் தோற்றதே இல்லை என்ற பெருமை ரோகித் சர்மாவிற்கு உண்டு. அதிகமுறை ஐபிஎல் கோப்பையை வென்ற வீரர் என்ற பட்டியலிலும் ரோகித் சர்மா முதலிடத்தில் உள்ளார்.