இந்த உலகில் உள்ள அனைத்து உயிர்களுக்கும் உன்னதமான உறவு அம்மா மட்டுமே. நாம் எந்த சூழ்நிலையில் இருந்தாலும், நாம் சோர்ந்து போனாலும் நமக்கு உறுதுணையாக இருக்கும் ஒரு உறவு, பெற்ற தாய் மட்டுமே ஆவார். மனிதனுக்கு அவனைப் படைத்த அன்னையைத் தவிர வேறு யாராலும் அவனை மிகச்சிறப்பாக பார்த்துக் கொள்ள முடியாது.


அம்மா என்றழைக்காத உயிரில்லையே:


அந்த அம்மாவின் பெருமையை புகழ்ந்து ஏராளமான பாடல்கள் உள்ளது. அதில், ரஜினிகாந்த் நடிப்பில் உருவான மன்னன் திரைப்படத்தில் இடம்பெற்ற அம்மா என்றழைக்காத பாடல் இன்றும் நம்மை நெஞ்சுருக வைக்கும்.


வாலி எழுதிய இந்த பாடலில், மாற்றுத்திறனாளியாக உள்ள தனது தாயை பராமரித்துக் கொள்ளும் ரஜினிகாந்த் தனது தாயை உயர்த்தி பாடும் பாடலாக கல்யாணி ராகத்தில் இந்த பாடல் அமைந்திருக்கும். மிக எளிய வார்த்தைகளில் நம் அனைவரது மனதிற்கும் நெருக்கமாக அமையும் வகையில் வாலி எழுதியிருப்பார்.


முதல் வரியிலே,


"அம்மா என்றழைக்காத உயிரில்லையே..


அம்மாவை வணங்காது உயர்வில்லையே.."


என்று தொடக்கத்திலே எழுதியிருப்பார்.


மனிதனோ, விலங்கோ அம்மா என்று அழைக்காத எந்த உயிரும் இல்லை என்றும், பெற்ற தாயை மதிக்காமல் வாழ்க்கையில் உயரத்திற்கு செல்ல முடியாது என்றும் எழுதியிருப்பார். தாயை மதிக்காத யாரும் மிக உயர்ந்த இடத்திற்கு சென்றதாக வரலாறும் இல்லை.


நேரில் நின்று பேசும் தெய்வம்:


அதற்கு அடுத்த வரிகளில்,


"நேரில் நின்று பேசும் தெய்வம்..


பெற்ற தாயன்றி வேறொன்று ஏது..


அம்மா என்றழைக்காத உயிரில்லையே..


அம்மாவை வணங்காது உயர்வில்லையே.."


என்று எழுதியிருப்பார்.


எத்தனையோ கோயில்கள் ஏறி, இறங்கியிருப்போம். ஆனால், நேரிலே இருந்து நம்மை பாதுகாக்கும், நம் இடர்பாடான சூழ்நிலையில் நம்மை அரவணைத்து, நம்மை தேற்றி, நம்மை பாதுகாக்கும் ஒரு உண்மையான தெய்வம் அன்னை மட்டுமே என்பதை நேரில் நின்று பேசும் தெய்வம் என்றும், அப்பேற்பட்ட தாயை விட பெரிய தெய்வம் ஏது? என்று வாலி போற்றி எழுதியிருப்பார்.


மகன் தாய்க்கு செய்யும் பணிவிடை:


அதற்கு அடுத்த வரிகளில்,


"அபிராமி சிவகாமி கருமாயி மகமாயி


திருக்கோயில்கள் தெய்வங்கள் நீதானம்மா..


அன்னைக்கு அன்றாடம் அபிஷேகம் அலங்காரம்


புரிகின்ற சிறுதொண்டன் நான்தானம்மா.."


என்று எழுதியிருப்பார்.


நாம் வணங்கும் தெய்வங்களான கோயில்களில் உள்ள  அபிராமி, சிவகாமி, கருமாயி, மகமாயி என அனைத்து தெய்வங்களும் அன்னையே என்றும், கோயில்களில் உள்ள மேலே கூறிய தெய்வங்களுக்கு அபிஷேகமும், அலங்காரமும் செய்கின்ற ஒரு சிறு தொண்டன் போல பெற்ற தாய்க்கு பணிவிடை செய்யும் ஒரு சாதாரண தொண்டன் நான் என்று அம்மாவிற்கு மகன் செய்ய வேண்டிய பணிவிடைகளை ஒப்பிட்டு வாலி எழுதியிருப்பார்.


அடுத்த பிறவியிலும் மகனாக பிறக்க வேண்டும்:


அதற்கு அடுத்த வரிகளில்,


"பொருளோடு புகழ் வேண்டும் மகனல்ல தாயே..


உன் அருள் வேண்டும் எனக்கென்றும்.. அது போதுமே..


அடுத்திங்கு பிறப்பொன்று அமைந்தாலும் நான் உந்தன்


மகனாக பிறக்கின்ற வரம் வேண்டுமே.."


என்று வாலி எழுதியிருப்பார்.


தெய்வத்துடன் தாயை ஒப்பிட்ட கவிஞர், கோயில் செல்லும் பக்தன் தெய்வத்திடம் எனக்கு பெரும் புகழும், பொருளும் தர வேண்டும் என்று வேண்டுவது வழக்கம். ஆனால், எனக்கு அது வேண்டாம். அதை வேண்டும் மகன் நான் கிடையாது. எனக்கு என்றென்றும் உன் அன்பும், ஆசிர்வாதமும் கிடைத்தால் மட்டுமே போதும் என்றும், அடுத்த பிறப்பிலும் நானே உனக்கு மகனாக பிறக்க வேண்டும் என்றும் அன்போடு வேண்டுவது போல எழுதியிருப்பார்.


தாய்க்கு ஈடாகுமா?


என்னதான் பணத்தை கொட்டி வாரி இறைத்தாலும், இந்த உலகில் வாங்க முடியாத சில விஷயங்கள் இருக்கிறது. அதில் பெற்ற தாயின் அன்பும் ஒன்று. அதையே கவிஞர் அடுத்த வரிகளில்,


"பசும் தங்கம் புது வெள்ளி மாணிக்கம் மணி வைரம்


அவையாவும் ஒரு தாய்க்கு ஈடாகுமா..?


விலை மீது விலை வைத்துக் கேட்டாலும் கொடுத்தாலும்


கடைதன்னில் தாயன்பு கிடைக்காதம்மா?"


என்று எழுதியிருப்பார்.


தங்கம், வெள்ளி, மாணிக்கம், வைரம், வைடூரியங்கள் எல்லாம் ஒரு தாய்க்கு நிச்சயம் ஈடாகவே ஈடாகாது என்றும், எவ்வளவு பணத்தை கொட்டிக் கொடுத்தாலும் கடையில் தாயின் அன்பை வாங்க முடியாது என்பதையும் மிக அழகான வரிகளில் எழுதியிருப்பார்.


பட்ட கடன் தீருமா?


ஒரு பெண் குழந்தையை 10 மாதங்கள் சுமந்து அவள் பெற்றெடுக்கும் தருணத்தை மறு பிறவி என்றே கூறுவார்கள். அந்த 10 மாதங்கள் அவள் பாடும் இன்னல்களை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. இதை எந்த கடன் பட்டாலும் எந்த மகனாலும் அந்த தாய்க்கு அடைக்கவே முடியாது. பெண் இல்லாமல் ஆண் இல்லை என்பதையும், தாய் இல்லாமல் யாருமே இல்லை என்பதையுமே கவிஞர் கீழே உள்ள வரிகளாக எழுதியிருப்பார்.


"ஈரைந்து மாதங்கள் கருவோடு எனைத்தாங்கி..


நீ பட்ட பெரும்பாடு அறிவேனம்மா..


ஈரேழு ஜென்மங்கள் எடுத்தாலும் உழைத்தாலும்..


உனக்கிங்கு நான் பட்ட கடன் தீருமா..?


உன்னாலே பிறந்தேனே…"


என்று எழுதியிருப்பார்.


வாலியின் அதியற்புதமான வரிகளுக்கு, இளையராஜாவின் மென்மையான இசைக்கு, கே.எஸ்.யேசுதாஸ் தனது குரலால் உயிர் கொடுத்திருப்பார். 30 வருடங்களை கடந்தும் அம்மா பாடல்களில் இந்த பாடல் முதன்மையானதாக உள்ளது. அடுத்த தொடரில் வேறு ஒரு பாடலுடன் சந்திக்கலாம்.


மேலும் படிக்க: ஆஹா என்ன வரிகள் 11: "இங்கு நீ அங்கு நான் போராட" தேசப்பற்றில் காதலை சொன்ன கப்பலேறி போயாச்சு!


மேலும் படிக்க: ஆஹா என்ன வரிகள் 10: "என்ன சொல்ல போகிறாய்?" அவளின் சம்மதத்திற்காக தவிக்கும் அவனின் காதல்!