இளையராஜாவிற்கு பிறகு தமிழ் சினிமாவின் இசையை வேறு ஒரு வடிவத்திற்கு எடுத்துச் சென்றவர் ஏ.ஆர்.ரஹ்மான். ரஹ்மானின் ஆரம்ப கால பாடல்கள் அனைத்துமே எப்போதுமே மனதிற்கு இதமானது ஆகும். தமிழ் சினிமாவின் பல எவர்கிரீன் பாடல்களை எழுதிய வைரமுத்து, இசைப்புயலின் இசைக்கு எழுதிய வரிகள் பலவும் மனதிற்கு நெருக்கமானது. இவர்கள் இருவர் கூட்டணியிலும் உருவான காதல் பாடல்கள் தனித்துவமானதாக அமைந்துள்ளது.
என்ன சொல்ல போகிறாய்?
அதில் அஜித்குமார் நடிப்பில் உருவான கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் படத்தில் இடம்பெற்ற என்ன சொல்ல போகிறாய் பாடல் 24 ஆண்டுகளை கடந்தும் இன்றும் ரசிகர்களின் காதல் கீதங்களில் ஒன்றாக உள்ளது. வைரமுத்து எழுதிய இந்த பாடல் முழுவதும் காதலன் தனது காதலியின் சம்மதத்திற்காக காத்திருக்கும் காத்திருப்பையும், தவிப்பையையும் உணர்வுப்பூர்வமாக- நமக்கு கடத்தியிருப்பார்.
பாடலின் முதல் வரியிலே,
"இல்லை.. இல்லை.. என்று சொல்ல ஒரு கணம் போதும்..
இல்லை என்ற சொல்லைத் தாங்குவதென்றால்..
இன்னும் இன்னும் எனக்கோர் ஜென்மம் வேண்டும்..
என்ன சொல்ல போகிறாய்?"
என்று வைரமுத்து எழுதியிருப்பார்.
காதலியே நான் வேண்டாம் என்று சொல்வதற்கு உனக்கு ஒரு நொடி போதும். ஆனால், நீ என் வாழ்வில் இல்லை என்பதை என்னால் இந்த ஜென்மம் அல்ல, அடுத்த ஜென்மத்தில் கூட தாங்க இயலாது என்பதையும், அதனால் என்ன பதில் சொல்கிறாய்? என்று காதலன் தவிப்பையும் உணர்வுகளாக நமக்கு வைரமுத்து கடத்தியிருப்பார்.
கண்களின் பதில் என்ன?
அடுத்த வரிகளில்,
"சந்தன தென்றலை ஜன்னல்கள் தண்டித்தல்
நியாயமா..? நியாயமா..?
காதலின் கேள்விக்கு கண்களின் பதிலென்ன
மௌனமா..? மௌனமா..?"
என்று எழுதியிருப்பார்.
ஜன்னல் இருப்பதன் காரணமே, அந்த ஜன்னலின் வழி தென்றல் காற்று உள்ளே வர வேண்டும் என்பதற்காகவே, ஆனால் அந்த தென்றலை வேண்டாம் என்று ஜன்னலே ஒதுக்குவது சரியா? என்றும், மனிதனின் கண்கள் அவனது உணர்வுகளை அப்படியே வெளிப்படுத்தும் குணம் கொண்டது. அதுவும் ஒருவரின் காதல் உணர்வுகளை அவரது கண்களே காட்டிக் கொடுத்துவிடும். அந்த கண்களே காதலின் கேள்விக்கு ஆம், இல்லை என்று பதில் சொல்லாமல் மௌனமாக இருப்பது சரியா? என்று காதலன் கேள்வி எழுப்புவது போல கவிஞர் எழுதியிருப்பார்.
ஒரு ஆயுள் வேண்டுமடி:
"அன்பே எந்தன் காதல் சொல்ல
நொடி ஒன்று போதுமே..
அதை நானும் மெய்பிக்கத்தானே
ஒரு ஆயுள் வேண்டுமே.."
என்று அடுத்த வரிகளில் எழுதியிருப்பார்.
ஒரு நொடியில் நான் என் காதலை சொல்லிவிடுவேன், உன் மேல் கொண்ட அந்த அன்பை வெளிப்படுத்தவும், விவரிக்கவும் இந்த ஆயுள் முழுவதும் தேவைப்படும் என்பதை வைரமுத்து மிக அழகாக எழுதியிருப்பார்.
அடுத்த வரிகளில் இதயத்தை கண்ணாடியுடன் ஒப்பிட்டு, அந்த கண்ணாடியில் காதலியே உன் பிம்பம் மட்டுமே தெரிகிறது என்று காதலனின் காதலை சொல்லும் கவிஞர், அந்த பிம்பத்தை கயிறு கொண்டு கட்டிவிட முடியாது என்றும், காதலியே நீதான் என் நெஞ்சில் கயிறே இல்லாமல் ஊஞ்சல் ஆடுகிறாய் என்றும் வர்ணித்திருப்பார்.
என்னைத் துரத்தாதே:
அடுத்த வரிகளில்,
"நீ ஒன்று சொல்லடி பெண்ணே..
இல்லை நின்று கொல்லடி கண்ணே..
எந்தன் வாழ்க்கையே உந்தன் விழி விளிம்பில்..
என்னைத் துரத்தாதே.. உயிர் கரையேறாதே.."
என்று வைரமுத்து எழுதியிருப்பார்.
நீ ஆம் என்று காதலுக்கு சம்மதம் சொல்லிவிடு, இல்லாவிட்டால் இல்லை என்று என்னை கொன்றுவிடு என்று காதலனின் தவிப்பை சொன்ன வைரமுத்து, இனி என் எஞ்சிய வாழ்வே உன் பார்வை ஓரத்தில்தான் என்றும், தயவு செய்து என்னை துரத்தாதே இந்த உயிர் தாங்காது என்று காதலனின் ஏக்கத்தை வைரமுத்து வலியுடன் சொல்லியிருப்பார்.
கூந்தலும், கண்களும்:
கருமை நிறமான கூந்தல் என்றுமே பெண்ணுக்கு தனி அழகு. சூரியன் வந்த பிறகும் இன்னும் விடியாத இரவு என்று தன் காதலியின் கூந்தலின் கருமையை வர்ணிக்கும் காதலன், இந்த பூமியே சூரியன் மறைந்த பிறகு இருள் சூழ்ந்த நிலையில் உன் கண் பார்வையின் ஒளி மட்டும் எனக்கு சூரிய கதிர் போல உள்ளது என்று கவிஞர் எதிரெதிராக இரவையும், பகலையும் வர்ணித்திருப்பார்.
இதையே,
"விடியல் வந்த பின்னாலும்..
விடியாத இரவு எது..?
பூவாசம் வீசும் உந்தன் கூந்தலடி..
இவ்வுலகம் இருண்ட பின்னும்..
இருளாத பாகம் எது..?
கதிர் வந்து பாயும் உந்தன் கண்களடி.."
என்று மிக அழகாக இரவையும், பகலையும் காதலியின் கூந்தலுடனும், கண்களுடனும் வர்ணித்திருப்பார் வைரமுத்து.
ஏன் தயக்கம்?
அடுத்த வரிகளில்,
"பல உலக அழகிகள் கூடி..
உன் பாதம் கழுவலாம் வாடி..
என் தளிர் மலரே இன்னும் தயக்கமென்ன..
என்னைப் புரியாதா? இது வாழ்வா..? சாவா..?"
என்று எழுதியிருப்பார்.
ஒவ்வொரு ஆணுக்கும் அவன் காதலி பேரழகியே. மற்றவரின் கண் கொண்டு உங்கள் காதல் துணையை பார்க்காமல், உங்கள் மனக்கண் வழி பார்க்கும்போது இதை உணர முடியும். ஒரு பெண்ணின் புற அழகை பார்க்காமல் எப்போது ஆண் அக அழகை கண்டு நேசிக்கத் தொடங்குகிறானோ, அப்போதுதான் அந்த காதல் முழுமையடையும்.
அப்படி அந்த அக அழகு கொண்ட பேரழகியின் பாதத்தை மற்ற அழகிகள் கொண்டு நான் கழுவுகிறேன் என்று காதலன் கூறுவது போலவும், என் காதலியே இத்தனை சொல்லியும் உனக்கு ஏன் இன்னும் தயக்கம் என்று காதலன் கேட்டு, அவளிடம் என்னைப் புரிந்து கொள்ளவே மாட்டியா? இது வாழ்வா? சாவா? போராட்டமாக உள்ளது என்று காதலுடனும், தவிப்புடனும் காதலன் சம்மதித்திற்காக காத்திருப்பது போலவே அந்த பாடல் வரிகளை முடித்திருப்பார் வைரமுத்து.
அஜித் – தபு நடிப்பில் இந்த பாடல் காட்சிப்படுத்தப்பட்ட விதம் மிக தனித்துவமாக நம் கண்களுக்கு விருந்தாக அமைந்திருக்கும். இதே பி.ஜி.எம்.யை ஏ.ஆர்.ரஹ்மான் படத்தின் கிளைமேக்சிலும் பயன்படுத்தி நம்மை கட்டிப்போட்டிருப்பார். இன்றும் இந்த பாடலை யூ டியூபில் பலரும் கேட்டு ரசித்து வருகின்றனர்.
மீண்டும் அடுத்த தொடரில் வேறு ஒரு பாடலுடன் சந்திக்கலாம்.
மேலும் படிக்க: ஆஹா என்ன வரிகள் 9: "நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால்.." கவலைக்கு மருந்தாகும் கண்ணதாசனின் வரிகள்!
மேலும் படிக்க: ஆஹா என்ன வரிகள் 8: "புத்தியுள்ள மனிதரெல்லாம் வெற்றி காண்பதில்லை" கண்ணதாசன் சொன்ன உலக தத்துவம்!