சக்தி இசைக்குழு கிராமி விருது வென்றதற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர் ரஹ்மான் வாழ்த்து தெரிவித்துள்ளார்.


66 ஆவது கிராமி விருது


இசைக்கலைஞர்களுக்கு வழங்கப்படும் உயரிய விருதான  கிராமி விருதுகளின் 66 ஆவது ஆண்டு விழா அமெரிக்காவில் நடைபெற்றது. பல்வேறு பிரிவுகளின் கீழ் பரிந்துரைக்கப்பட்ட இசைக்கலைஞர்கள் இந்த விழாவில் கலந்துகொண்டார்கள்.  அந்த வகையில் சிறந்த ஆல்பம் பிரிவில் இந்தியாவின் இசைக்குழு விருது வென்றது. சுசானா பாக்கா, பொகாண்டே, பர்னா பாய் மற்றும் டேவிடோ போன்ற கலைஞர்களிடமிருந்து நிலவிய கடும் போட்டிக்கு மத்தியில் சக்தி குழு விருதை தனதாக்கியுள்ளது.


ஒரு குழுவின் முதல் ஆல்பமே கிராமி விருது வென்றது, கடந்த 45 ஆண்டுகளில் இதுவே முதல்முறை என கூறப்படுகிறது. இந்தியாவைச் சேர்ந்த புல்லாங்குழல் கலைஞர் ராகேஷ் சவுராசியாவை தொடர்ந்து, மூன்று முறை கிராமி விருது வென்ற இந்தியர் என்ற பெருமையை தபேலா கலைஞர் உஸ்தாத் ஜாகிர் உசேன் பெற்றுள்ளார்.


கிராமி விருது வென்ற சக்தி இசைக்குழு


சிறந்த குளோபல் மியூசிக் ஆல்பம் பிரிவில் இந்தியாவைச் சேர்ந்த, சக்தி இசைக்குழு கிராமி விருதை வென்றுள்ளது. சிறந்த ஆல்பம் பிரிவில் சக்தி இசைக்குழுவின் "THIS MOMENT" எனும் ஆல்பம் தேர்வாகி விருது வென்றுள்ளது.  இசைத்துறையில் வழங்கப்படும் உயரிய விருது கிராமி ஆகும். கிட்டார் கலைஞர் ஜான் மெக்லாலின், தபேலா கலைஞர் உஸ்தாத் ஜாகிர் உசேன், பாடகர் சங்கர் மகாதேவன், இசையமைப்பாளர் வி செல்வகணேஷ் மற்றும் வயலின் கலைஞர் கணேஷ் ராஜகோபாலன் ஆகியோர் இந்த குழுவின் இடம்பெற்றுள்ளனர்.  


தமிழில் வெண்ணிலா கபடி குழு, துரோகி மற்றும் குள்ளநரி கூட்டம் போன்ற படங்களுக்கு செல்வகணேஷ் இசையமைத்துள்ளார். இவரது தந்தை பிரபல கடம் வித்வான் விக்கு விநாயக்ராமின் பெயரும் கிராமி விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.


வாழ்த்து தெரிவித்த ஆஸ்கர் நாயகன்






சக்தி இசைக்குழு கிராமி விருது வென்றதை பாராட்டி இசையமைப்பாளர் ஏ.ஆர் ரஹ்மான் ட்வீட் செய்துள்ளார்.  ‘இந்தியாவில் கிராமி மழை பொழிகிறது என்று அவர் கூறி விருது வென்ற கலைஞர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். ஏ. ஆர் ரஹ்மான் இரண்டு முறை ஆஸ்கர் , இரண்டு முறை கோல்டன் க்ளோப் விருது மற்றும் இரண்டு முறை கிராமி விருதை வென்றவர் என்பது குறிப்பிடத் தக்கது.




மேலும் படிக்க :  Grammy Award sakti: இசைத்துறையின் பெரும் அந்தஸ்து, கிராமி விருதை வென்ற சங்கர் மகாதேவனின் சக்தி இசைக்குழு


Sridevi Death Case: நடிகை ஸ்ரீதேவி மரணத்தில் தொடரும் மர்மம்.. பிரதமரின் போலி கடிதங்கள்.. யூடியூபரால் பரபரப்பு