திரையுலகில் பல்வேறு புதுமைகளை புகுத்தியும், முயற்சித்தும் பார்க்கும் கலைஞன் கமல்ஹாசன். இவரின் கனவுப் படமான ‘மருதநாயகம்’ 85 கோடி ரூபாய் பட்ஜெட்டில் கடந்த 1997-ம் ஆண்டு அக்டோபர் 16-ம் தேதி துவங்கப்பட்டு, ஒரு பகுதி வரை படமாக்கப்பட்டது. எம்.ஜி.ஆர். பிலிம் சிட்டியில் நடந்த இதன் துவக்க விழாவில் தலைமை விருந்தினராக கமல்ஹாசன் கேட்டுக்கொண்டதற்கு இணங்க பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத் கலந்துகொண்டார். அப்போது அவருக்கு சுமார் ஒன்றரைக் கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட அந்த திரைப்படத்தின் படத்தின் சண்டைக் காட்சிகள் காட்சியிடப்பட்டதாகவும் கூறப்பட்டது. இப்படி மருதநாயகம் கமல்ஹாசன் மிகவும் விரும்பிய ஒரு கனவு திரைப்படம். இன்றுவரை பெரும் பொருட்செலவு காரணமாக அதனை முடிக்காமல் வைத்திருக்கிறார் கமல்ஹாசன். ஆனால் இன்றும் சினிமா ரசிகர்களிடையே அந்த திரைப்படத்தை எப்படியாவது அவர் எடுத்து முடித்துவிட மாட்டாரா என்ற ஏக்கம் உண்டு.



வெளியாகியிருந்த பாடல்


இத்திரைப்படத்தில் இருந்து ஒரு பாடலை வெளியிட்டிருப்பார்கள். இளையராஜா இசையமைத்து, பாடிய 'பொறந்தது பனையூரு மன்னு…' அந்த பாடலில் சில காட்சிகள் இருக்கும். அவற்றை பார்த்தே பூரிப்படைந்தது இந்திய சினிமா. அவ்வளவு மெனக்கெடல்களுடன் உருவான அந்த திரைப்படம் பெரிய பெரிய தொகையை கேட்டதால் அதனை முற்றிலுமாக ட்ராப் செய்துள்ளார் கமல்ஹாசன். மீண்டும் விக்ரம், சூர்யாவை வைத்து எடுப்பதாக பல தகவல்கள் வந்தாலும், அப்போதைய தொழில்நுட்பத்திற்கு ஏற்றவாறு இவ்வளவு பெரிய படத்தில் வேலை செய்த அனுபவத்தை கமல் என்றுமே மறக்க மாட்டார். அப்படி அதில் சில மிருகங்கள் பயன்படுத்தப்பட்டிருக்கும். அது எவ்வளவு சவாலாக இருந்தது என்று ஒரு நேர்காணலில் பகிர்ந்துள்ளார். 


தொடர்புடைய செய்திகள்: Chhavi Mittal : குழந்தைகளுக்கு உதட்டில் முத்தம்... பாலியல் அத்துமீறல் என விமர்சித்த நெட்டிசன்கள்.. புகைப்படங்களுடன் பதிலடி தந்த நடிகை!


கழுகு கொத்தும் காட்சி


அந்த கழுகை ஆக்ராவில் இருந்து கொண்டு வந்ததாக கூறிய அவர், "சுற்றுசூழல் பாதிப்புகளால பல பறவை இனங்களை இழந்துவிட்டோம். அதனால் இந்த கழுகுக்கு 5 நட்சத்திர பாதுகாப்பெல்லாம் வைத்துதான் கொண்டு வந்தோம். அதே போல போகும்போதும் மிக பத்திரமாக எடுத்து சென்றார்கள். அந்த கழுகு வந்து என் காலை கொத்தனும். இதற்கெல்லாம் ஒரு மாத காலம் பயிற்சி வேறு கொடுத்தோம். சிஜி எல்லாம் பெரிதாக வளராத காலம். யாருமே நம்பல அதை", என்று கூறினார்.



காளை மாட்டின்மீது ஏறி அமர்ந்து ஓட்டும் காட்சி


மேலும் காளை மாட்டின் மீது அமர்ந்து ஓட்டும் காட்சியை குறித்து பேசிய அவர், "காளை மாட்டின் மீது ஏறி ஓட்டுவேன் என்றும் யாரும் நம்பவில்லை. அதில் நெறைய ஐரோப்பிய, அமெரிக்க தொழில்நுட்ப கலைஞர்கள் வேலை செய்தனர். அவர்கள் எல்லாம், "என்ன சொல்றாரு இவரு, ஒரு ஜல்லிக்கட்டு மாட்டு மேல ஏறி உக்காந்து ஓட்றேன்னு சொல்றாரே. ஒரு கோடி ரூபாய் இருந்தா அதை நாங்க சிஜி பண்ணி கொடுத்திடுவோம் என்றார்கள். ஒரு கோடி இல்லை எங்களிடம். அந்த ஒரு கோடியை வைத்து படத்தை இன்னும் கொஞ்ச தூரம் நகர்த்தி இருப்போம். அதனால் தான் அதனை ஒரிஜினலாக செய்தோம்", என்று கூறினார்.