AIADMK: அபராதத்துடன் தள்ளுபடி பண்ணுங்க - ஓபிஎஸ் தரப்பு மனுவுக்கு இபிஎஸ் நீதிமன்றத்தில் கோரிக்கை

ஓ.பன்னீர்செல்வம் அணியைச் சேர்ந்த மனோஜ் பாண்டியன் அதிமுக பொதுக்குழு தீர்மானங்களை ரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்தார்.

Continues below advertisement

அதிமுக பொதுக்குழு தீர்மானத்தை எதிர்த்து ஓபிஎஸ் தரப்பில் மனோஜ் பாண்டியன் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டுமென அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

Continues below advertisement

கடந்தாண்டு ஜூலை மாதம் அதிமுக பொதுக்குழு கூட்டம் சென்னை வானகரத்தில் உள்ள திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அதிமுகவின் இடைக்காலப் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். அதுமட்டுமல்லாமல் சில தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வம், அவரது ஆதரவாளர்கள் கட்சியை விட்டு நீக்கப்பட்டனர். 

இதனைத் தொடர்ந்து பொதுக்குழுவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தனி நீதிபதி அளித்த தீர்ப்பு ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாகவும், இரண்டு நீதிபதிகள் அமர்வு அளித்த தீர்ப்பு எடப்பாடி பழனிசாமி ஆதரவாகவும் அமைந்தது. இதனையடுத்து உச்சநீதிமன்றத்தை ஓ.பன்னீர்செல்வம் நாடிய நிலையில், அங்கு தீர்ப்பு அவருக்கு எதிராக அமைந்தது. அதாவது ஜூலை மாதம் நடந்த பொதுக்குழு செல்லும் என தீர்ப்பு வழங்கப்பட்டது.

இதற்கிடையில் ஓ.பன்னீர்செல்வம் அணியைச் சேர்ந்த மனோஜ் பாண்டியன் அதிமுக பொதுக்குழு தீர்மானங்களை ரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்தார். இந்த வழக்கு சமீபத்தில் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி முன்பு விசாரணைக்கு வந்த நிலையில்,  மனோஜ் பாண்டியன் தரப்பில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் கலைக்கப்பட்டு உள்ளதாகவும்,  பொதுச் செயலாளர் பதவி மீண்டும் கொண்டுவரப்பட்டு  அதில் போட்டியிட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது. 

மேலும் இது கட்சி நிறுவனரான எம்ஜிஆரின் கொள்கைக்கு விரோதமானது. எனவே பொதுக்குழு தீர்மானத்தின் அடிப்படையில் செயல்பட தடை விதிக்க வேண்டும் என கூறப்பட்டிருந்தது. இந்த வழக்கில் எடப்பாடி பழனிசாமி தரப்பில் கால அவகாசம் கேட்கப்பட்டது. இதனையடுத்து வழக்கை மார்ச் 17 ஆம் தேதி ஒத்திவைத்த நிலையில், எடப்பாடி பழனிசாமி தரப்பினர் மனுவை தாக்கல் செய்ய வேண்டுமென உத்தரவிட்டது. 

இந்நிலையில் நாளை இந்த மனு விசாரணைக்கு வரவுள்ள நிலையில் எடப்பாடி பழனிசாமி தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் உள்கட்சி விவகாரங்களில் நீதிமன்றங்கள் தலையிடுமாறு மனுதாரர் கோர முடியாது என்றும், கட்சி விதிகளில் திருத்தம் மேற்கொள்ளும் பொதுக்குழுவின் உரிமை குறித்து கேள்வி எழுப்ப முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுக்குழு தீர்மானம் அமலுக்கு வந்த 8 மாதங்களுக்குப் பின் தொடரப்பட்ட வழக்கு செல்லாததாகி விட்டது. எனவே மனோஜ் பாண்டியன் தொடர்ந்த வழக்கை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார்.

Continues below advertisement