தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே உள்ள ராயப்பன்பட்டியை சேர்ந்தவர் அதிசயம் (68). இவர் மாவட்டம் முழுவதும் கோழி இறைச்சி மற்றும் முட்டை மொத்த வியாபாரம் செய்து வருகிறார். மேலும் வாழை மற்றும் திராட்சை விவசாயத்திலும் ஈடுபட்டு வருகிறார்.
தினந்தோறும் இவர், ராயப்பன்பட்டியில் இருந்து ஆனைமலையன்பட்டியில் உள்ள திராட்சை தோட்டத்திற்கு இரண்டு சக்கர வாகனத்தில் செல்வது வழக்கம். கடந்த ஒரு வாரமாக அவர் தோட்டத்திற்கு செல்லவில்லை. இந்நிலையில் நேற்று காலை 9 மணி அளவில் தோட்டத்திற்கு சென்றார். பின்னர் அங்கிருந்து இரண்டு சக்கர வாகனத்தில் ராயப்பன்பட்டிக்கு வந்து கொண்டிருந்தார். அவரது திராட்சை தோட்டம் அருகே உள்ள சண்முகா நதி கால்வாய் பகுதியில் வந்தபோது, கார் ஒன்று நின்றது.
அப்போது திடீரென காரில் இருந்து இறங்கிய மர்மநபர்கள் மோட்டார்சைக்கிளை உதைத்து கீழே தள்ளினர். பின்னர் அதிசயத்தை காரில் குண்டுக்கட்டாக தூக்கிபோட்டு கடத்தி சென்றனர். அப்போது அவர் காப்பாற்றுங்கள் என்று அலறியுள்ளார். இந்த சத்தம் கேட்டதும் அங்கு வேலை பார்த்து கொண்டிருந்த தோட்டதொழிலாளி பாலமுருகன் என்பவர் காரின் பின்னால் சிறிது தூரம் ஓடினார். ஆனால் அந்த கார் மின்னல் வேகத்தில் சென்றது. இதையடுத்து அவர், அதிசயம் உறவினர்களுக்கு தகவல் கொடுத்தார். பின்னர் அதிசயத்தின் உறவினர்கள் தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் கொடுத்தனர். அதன்பேரில் அவரது உத்தரவின்படி, உத்தமபாளையம் உதவி காவல் துணை கண்காணிப்பாளர் மதுக்குமாரி, ஆய்வாளர் சரவணன் தலைமையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு அதிசயத்தை தேடும் பணியில் ஈடுபட்டனர். மேலும் மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து சோதனை சாவடிகளும் உஷாா்படுத்தப்பட்டது. போலீசாரும் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
போலீசார் வாகனம் பின் தொடர்ந்து வருவதை அறிந்த மர்மகும்பல் என்னை ஓடும் காரில் இருந்து கீழே தள்ளிவிட்டனர். இதனால் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறேன் என்றார். இதற்கிடையே அதிசயம் தோட்டத்தில் தொழிலாளியாக வேலை பார்த்த சங்கரலிங்கம் (50) என்பவர் நேற்று மாலை தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனால் இந்த கடத்தல் சம்பவத்தில் அவருக்கும் தொடர்பு இருக்கிறதா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.