இந்த காலத்தில் ஹாரர் படங்களை பார்த்தால் பயமாக இருக்கிறதோ இல்லையோ சிரிப்பு சிரிப்பாக வருகிறது. திகில் என்ற வார்த்தைக்கு அர்த்தமே புரியாமல் ஆகும் அளவுக்கு தான் பேய் படங்கள் வருகின்றன. ஆனால் அந்த காலகட்டத்தில் வெளியான பேய் படங்கள் எல்லாம் தனியாக உட்கார்ந்து பார்க்க வேண்டும் என்றால் தனி தில் இருக்க வேண்டும். படம் பார்த்த பல நாட்களுக்கு தூக்கமே வராத அளவுக்கு ஏராளமான பேய் படங்கள் வெளிவந்தன. பெரியவர்களுக்கே இந்த நிலை என்றால் கிட்ஸ்களின் நிலையை கொஞ்சம் யோசிச்சு பாருங்க.
'தி ஓமன்' ரீமேக் :
அப்படி 90ஸ் கிட்ஸ்களை எல்லாம் பயமுறுத்திய ஒரு பேய் படம் என்றால் அது 1991ம் ஆண்டு வெளியான 'ஜென்ம நட்சத்திரம்' திரைப்படம். இப்படம் வெளியாகி இன்றுடன் 32 ஆண்டுகளை நிறைவு செய்கிறது. ஹாலிவுட்டில் 1976ம் ஆண்டு வெளியான 'தி ஓமன்' படத்தின் ரீமேக் படம் தான் 'ஜென்ம நட்சத்திரம்'. தக்காளி ஸ்ரீனிவாசன் இயக்கத்தில் பிரமோத், ஜி. ஆனந்தராம், சிந்துஜா மற்றும் பேபி விசித்ரா, நாசர், விவேக் நடித்திருந்த இப்படத்தின் பெயரை இன்று கேட்டாலும் 90ஸ் கிட்ஸ் முகத்தில் ஒரு பீதி தெரியும்.
சாத்தானின் குழந்தை :
கடவுளின் குழந்தையாக இயேசு இவ்வுலகில் பிறந்து மக்களை இரட்சித்தது போல சாத்தானின் குழந்தையாக இந்த பூமியில் பிறந்த ஒரு குழந்தை செய்யும் திகில் விஷயங்கள் தான் இப்படத்தின் மைய கதை.
மகப்பேறு ஆஸ்பத்திரியில் ஒரே நேரத்தில் இரு கர்பிணிகளுக்கு குழந்தை பிறக்கிறது. அதில் ஒரு கர்ப்பிணி குழந்தை பிறந்ததும் இறந்து விடுகிறாள் மற்றுமொரு கர்ப்பிணியின் குழந்தை பிறந்ததும் இறந்துவிடுகிறது. அந்த சமயத்தில் இறந்து போன குழந்தைக்கு பதிலாக உயிருள்ள குழந்தையை மாற்றி வைத்து அதை தனது சொந்த குழந்தை போல பாராட்டி சீராட்டி வளர்த்து வருகிறார்கள்.
வளர வளர அந்த குழந்தை பேய் குழந்தையாக மாறுகிறது. உண்மையை கண்டறியும் ஒவ்வொருவரையும் கொலை செய்கிறது. படம் முழுக்க திகில் காட்சிகளால் கதிகலங்க வைத்த ஒரு திரைப்படம்.
அழியாத நினைவுகள் :
எத்தனையோ பேய் படங்கள் வந்தாலும் இன்றும் பசுமரத்து ஆணி எப்படி மரத்தை புண்ணாகி அப்படியே வடுவாக இருக்குமோ அதே போல இன்றளவும் அதன் நினைவுகள் ஒரு பீதியை ஏற்படுத்துகிறது என்றால் அது மிகையல்ல. பேய் படம் பார்ப்பதில் மிகுந்த ஆர்வம் உள்ளவர்கள் ஒருமுறையேனும் இப்படத்தை பார்த்து அந்த திகில் உணர்வை அனுபவிக்க வேண்டும். 32 ஆண்டுகளை கடந்து பின்பு அந்த ஃபீல் கொடுப்பது தான் உண்மையான திரில்லர் திரைப்படம்.