டோவினோ தாமஸ் நடிப்பில் மலையாளத்தில் கடந்த மே 5ம் தேதி வெளியான திரைப்படம் ’2018 - Everyone Is A Hero’. கேரள சினிமா தாண்டி பெரும் கவனம் ஈர்த்து வரும் இந்தத் திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் வசூல் சாதனைகளைப் படைத்து வருகிறது.
2018:
'2018 Everyone Is A Hero' திரைப்படம் உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் அதிக வசூல் பெற்று பிளாக்பஸ்டர் சாதனை பெற்றுள்ளது. இப்படம் கேரளாவில் மட்டும் 9வது நாளில் சுமார் 5.18 கோடி வசூல் செய்து மலையாளத் திரையுலக வரலாற்றில் சாதனை படைத்துள்ளது. மேலும் இந்தியாவில் மட்டும் ரூபாய் 43.20 கோடிகளை இப்படம் வசூலித்துள்ளதாக பாக்ஸ் ஆஃபிஸ் தரவுகளை வெளியிடும் sacnilk தளம் தகவல் வெளியிட்டுள்ளது.
மேலும் கேரளா தாண்டி, பிற மாநிலங்கள், வெளிநாடுகளிலும் இப்படம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. உலக அளவில் முதல் 9 நாட்களில் 80 கோடி வசூல் செய்து 100 கோடி ரூபாய் வசூலை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.
கேரள வெள்ளம்:
2018ஆம் ஆண்டு கேரள பெரு வெள்ளத்தை மையப்படுத்தி இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ள நிலையில், இந்த வெள்ளத்தில் கிட்டதட்ட 450 பேர் உயிரிழந்தார்கள் எனவும் 15 நபர்கள் காணாமல் போயினர் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கேரள மாநிலம் பெரும் பொருளாதார நெருக்கடிக்கு உள்ளான நிலையில் ஒட்டுமொத்த கேரள மக்களும் ஒற்றுமையாக செயல்பட்டு இந்த வெள்ள பாதிப்புகளில் இருந்து மீண்டு வந்தனர். மேலும் உலகம் முழுவதுமிருந்து அவர்களுக்கு உதவிகள் குவிந்தன. இந்நிலையில், இந்தச் சம்பவங்களை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட 2018 படத்தைப் பாராட்டி, இது தான் உண்மையான கேரளா ஸ்டோரி என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
உணர்வுப்பூர்வமான படம்:
இந்தப் படத்தில் டோவினோ தாமஸ் உடன் ஆசிப் அலி, குஞ்சாகோ போபன், லால், நரேன், வினீத் ஸ்ரீனிவாசன், அபர்ணா பாலமுரளி, தன்வி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இயக்குநர் ஜூட் கேரளா வெள்ளத்தின் போது நேர்ந்த துயரங்களை மையமாக வைத்து பார்வையாளர்களுக்கு உணர்வுப்பூர்வமான தருணங்களை நினைவுபடுத்தி வெற்றி பெற்றுள்ளார். இந்தப் படத்தின் கதை தத்ரூபமாக இருக்க கலை இயக்குநர் பெரிதும் உதவியுள்ளார்.
காவ்யா பிலிம் கம்பெனி மற்றும் பிகே பிரைம் புரொடக்ஷன்ஸ் ஆகியவற்றின் கீழ் வேணு குன்னப்பிள்ளி, சி கே பத்மகுமார் மற்றும் ஆண்டோ ஜோசப் ஆகியோர் இப்படத்தை தயாரித்துள்ளனர்.
மேலும் படிக்க: Manobala: "வெளிய சொல்ல முடியாத சேட்டை.. அழாமல் பேசுவது ரொம்ப சிரமம்.." மனோபாலா நினைவால் உருகிய மன்சூர், டெல்லி கணேஷ்..!