நடிகர் ரஜினிகாந்தை பார்க்க சேலத்தில் இருந்து தனியாக வந்த சிறுமியை மீட்டு போலீசார் அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைத்தனர்.


ஸ்டைல் ஐகான் ரஜினி 


தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டாராக கொண்டாடப்படுபவர் ரஜினிகாந்த். அவருக்கு இந்திய திரையுலகம் மட்டுமின்றி வெளிநாடுகளிலும் ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். ரஜினியின் ஸ்டைலுக்கு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். அவரின் படங்கள் வெளியானால் போது அவ்வளவு தான் திருவிழாக்கள் தோற்றுவிடும். அந்த அளவுக்கு பேரன்பு கொண்ட ரசிகர்கள் கொண்டாடி தீர்த்து விடுவார்கள். இப்படியான நிலையில் நாளை (ஆகஸ்ட் 10) ரஜினியின் 169வது படமாக உருவாகியுள்ள ‘ஜெயிலர்’ படம் வெளியாகவுள்ளது. 


பெரும் எதிர்பார்ப்பில் ஜெயிலர்


நெல்சன் திலீப்குமார் இயக்கியுள்ள இந்த படத்தினை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.   ரம்யாகிருஷ்ணன், வசந்த் ரவி, யோகிபாபு, சிவராஜ்குமார், மோகன்லால், தமன்னா, சரவணன், ஜாக்கி ஷெராஃப், விநாயகன், சுனில்  உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ள ஜெயிலர் படத்தின் பாடல்கள், ட்ரெய்லர் ஆகியவை மிகப்பெரிய அளவில் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. இதனால் படத்தின் மீது பெரிய அளவில் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. தியேட்டர்கள் கட் அவுட், பேனர்கள் என களைகட்ட தொடங்கி விட்டது. கோயில்களில் சிறப்பு வழிபாடு, நலத்திட்ட உதவிகள் என நாளைய தினத்தை மறக்க முடியாத நாளாக மாற்ற ரஜினி ரசிகர்கள் தயாராகி விட்டனர். 


இதனிடையே ரஜினிகாந்தை பார்க்க சேலத்தில் இருந்து தனியாக வந்த சிறுமி ஒருவர் நள்ளிரவில் போயஸ் கார்டன் வீட்டுக்கு வந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.10 ஆம் வகுப்பு படிக்கும் சிறுமி ஒருவர் ஆசிரியரை பார்க்க செல்வதாக தெரிவித்து விட்டு, வீட்டில் இருந்து புறப்பட்டு சேலத்தில் இருந்து சென்னை வந்துள்ளார். பின்னர் நள்ளிரவு 1 மணியளவில் போயஸ் கார்டனில் உள்ள ரஜினி வீட்டுக்கு வந்து காவலாளிகளிடம் அவரை பார்க்க வேண்டும் என சிறுமி தெரிவித்துள்ளார்.


சிறுமி பற்றி கேட்டுக் கொண்ட காவலாளிகள் தேனாம்பேட்டை காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு சிறுமியிடம் விசாரணை நடத்தினர். தொடர்ந்து பம்மலில் உள்ள உறவினர்களை வரவழைத்து, ஆலோசனை வழங்கி சிறுமியை போலீசார் ஒப்படைத்தனர். ஏற்கனவே ரஜினியின் போயஸ் கார்டன் வீடு ரசிகர்களின் வருகையால் பகல் நேரத்தில் களைகட்டும். குறிப்பாக விஷேஷ நாட்களில் அவரை காண வேண்டுமென்ற ஆர்வத்தில் பெரும் கூட்டமே கூடும். வீட்டில் இருக்கும் நேரங்களில் ரஜினி ரசிகர்களை சந்தித்து வாழ்த்து தெரிவிப்பது வழக்கம் என்பது குறிப்பிடத்தக்கது. 


மேலும் படிக்க: Thalaiva Day: சீண்டிப் பார்த்த விஜய்.. கோபமான ஜெயலலிதா.. தளபதி 'தலைவா 'ஆன நாள் இன்று..!