இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டி20 போட்டி இன்று அதாவது ஆகஸ்ட் மாதம் 8ஆம் தேதி வெஸ்ட் இண்டீஸில் உள்ள புரொவிடன்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. அதில் இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.


அதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பேட்டிங் செய்ய முடிவு செய்தது. முதலில் மிகவும் நிதானமாக ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி பவர்ப்ளேவில் தடுமாற்றத்துடனே விளையாடியது. இதனால் பவர்ப்ளேவில் விக்கெட் எதையும் இழக்காமல் 38 ரன்கள் மட்டுமே சேர்த்தது. அதன் பின்னர் வெஸ்ட் இண்டீஸ் அணி கொஞ்சம் கியரை அதிரடிக்கு மாற்ற, அதனால் இந்திய அணிக்கு விக்கெட்டுகள் ஈஸியாக கிடைத்தது. 


வெஸ்ட் இண்டீஸ் அணி தனது முதல் விக்கெட்டை 55 ரன்களில் இருந்தபோது இழந்தது. இந்தபோட்டியின் முதல் விக்கெட்டாக அக்‌ஷ்ர் படேல் வெஸ்ட் இண்டீஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர் கெயில் மேயர்ஸ் விக்கெட்டை கைப்பற்றினார். அதன் பின்னர் இந்திய அணியின் குல்தீப் யாதவ் அடுத்த மூன்று விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். குறிப்பாக போட்டியின் 15வது ஓவரின் முதல் பந்தில் நிக்கோலஸ் பூரனும் ஐந்தாவது பந்தில் பிரண்டன் கிங்கும் குல்தீப் யாதவ் பந்து வீச்சில் தங்களது விக்கெட்டினை இழந்து வெளியேறினர். 


அதன் பின்னர் வெஸ்ட் இண்டீஸ் அணி குல்தீப் பந்தில் விக்கெட்டுகளை இழந்தாலும், மற்ற பந்து வீச்சாளர்களை டார்கெட் செய்து ரன்களை சேகரித்தனர். இறுதியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டை இழந்து 159 ரன்கள் சேர்த்தது. 


இந்திய அணி தரப்பில் குல்தீப் யாதவ் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். வெஸ்ட் இண்டீஸ் அணியின் பாவல் 40 ரன்களும், பிரண்டன் கிங் 42 ரன்களும் அதிகபட்சமாக அடித்திருந்தனர். 


அதன் பின்னர் 160 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணிக்கு தொடக்கத்தில் அதிர்ச்சி காத்திருந்தது. குறிப்பாக தனது முதல் சர்வதேச டி20 போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என எதிர்பார்க்கப்பட்ட யஷ்ஸ்வி ஜெய்ஸ்வால் தனது விக்கெட்டை முதல் ஓவரில் ஒரு ரன் எடுத்த நிலையில் இழந்து வெளியேறினார். 


அதன் பின்னர் வந்த சூர்யகுமார் யாதவ், சுப்மன் கில்லுடன் இணைந்து இந்திய அணிக்கு நம்பிக்கையான ஆட்டத்தினை வெளிப்படுத்தினார். கில் 6 ரன்கள் சேர்த்த நிலையில் தனது விக்கெட்டை இழக்க, சூர்யகுமார் யாதவ் மட்டும் தனது ருத்ர தாண்டவ ஆட்டத்தினை நிறுத்தவில்லை. சூர்யாவுடன் இணைந்த திலக் வர்மா அவருக்கு நன்கு ஒத்துழைப்பு வழங்க இந்திய அணியின் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது. ஒருபுறத்தில் சூர்ய குமார் யாதவ் பவுண்டரிகளை அசால்ட்டாக அடித்து வந்தார். 


44 பந்துகளில் 10 பவுண்டரி 4 சிக்ஸர் என 83 ரன்கள் சேர்த்த நிலையில் தனது விக்கெட்டை இழந்து வெளியேறினார் சூர்ய குமார் யாதவ். அதன் பின்னர் வந்த அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா நிதானமான ஆட்டத்தினை ஆட, திலக் வர்மா மட்டும் கிடைத்த பந்துகளை பவுண்டரிக்கு விரட்ட முயற்சி செய்துவந்தார். 


இறுதியில் இந்திய அணி 17.5 ஓவர்களில் 3 விக்கெட்டை இழந்து 164 ரன்கள் சேர்த்து வெற்றி பெற்றது.  இறுதிவரை களத்தில் இருந்த திலக் வர்மா 49 ரன்களும் ஹர்திக் பாண்டியா ரன்களும் அடித்திருந்தனர். இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி இந்த தொடரை இன்னும் உயிர்ப்பில் வைத்துள்ளது. 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணி 1-2 என்ற கணக்கில் உள்ளது. தொடரை கைப்பற்ற இந்தியாவுக்கு மீதமுள்ள இரண்டு போட்டிகளிலும், வெஸ்ட் இண்டீஸ் ஒரு போட்டியிலும் வெற்றி பெறவேண்டும்.