குழந்தை நட்சத்திரங்களாக அறிமுகமாகி பின்னர் நட்சத்திர நடிகர்கள் என்ற அந்தஸ்திற்கு உயர்ந்தவர்கள் பலரை இந்த திரையுலகம் கண்டுள்ளது. அந்த பட்டியலில் இடம்பெற்ற ஒரு நடிகை தான் ஹன்சிகா மோத்வானி. குட்டி குஷ்பூ என செல்லமாக அழைக்கப்படும் ஹன்சிகாவின் 32வது பிறந்தநாள் இன்று.
குழந்தை நட்சத்திரம் :
மும்பையில் பிறந்து வளர்ந்த ஹன்சிகா ஹிந்தி திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். 2003ம் ஆண்டு வெளியான 'ஹவா' படத்தின் மூலம் அறிமுகமானார். அவர் நடித்த குழந்தைகளுக்கான தொலைக்காட்சி தொடர் ஒன்று தமிழில் 'ஷகலக பூம் பூம்' என்ற பெயரில் டப்பிங் செய்யப்பட்டு ஒளிபரப்பானது. அதன் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் அறிமுகமானார். தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னட திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.
ஹீரோயினாக அறிமுகம் :
2007ம் ஆண்டு பூரி ஜெகந்நாத் இயக்கத்தில் தெலுங்கில் வெளியான 'தேசமுத்ருடு' என்ற படத்தின் மூலம் அல்லு அர்ஜுன் ஜோடியாக தென்னிந்திய சினிமாவில் ஹீரோயினாக அடியெடுத்து வைத்தார். முதல் படமே அவருக்கு ஃபிலிம்ஃபேர் விருதைப் பெற்று தந்தது. அதற்கு பின் வரிசையாக பட வாய்ப்புகள் அமைய தெலுங்கில் மிகவும் பிஸியான ஒரு நடிகையானார்.
தமிழில் வாய்ப்பு :
தெலுங்கில் வெளியான 'அத்தக்கு யமுடு அம்மாயிக்கு மொகுடு' என்ற படத்தின் தமிழ் ரீ மேக் தான் 'மாப்பிள்ளை' திரைப்படம். இப்படத்தில் தனுஷ் ஜோடியாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார் ஹன்சிகா. அடுத்ததாக ஜெயம் ரவி ஜோடியாக அவர் நடித்த 'எங்கேயும் காதல்' திரைப்படம் மூலம் ஹன்சிகா அனைவரின் கவனம் பெற்று கனவு கன்னியானார். அடுத்தடுத்து பல படங்களில் கமிட்டாகி முன்னணி நடிகைகளின் வரிசையில் இடம் பெற்றார். உதயநிதி ஸ்டாலின் ஜோடியாக நடித்த 'ஒரு கல் ஒரு கண்ணாடி' திரைப்படம் மிக பெரிய வெற்றி படமாக அமைந்து நட்சத்திர அந்தஸ்தை பெற்று தந்தது.
விஜய், சூர்யா, தனுஷ், சிம்பு, ஜெயம் ரவி, சித்தார்த், உதயநிதி ஸ்டாலின், சிவகார்த்திகேயன், பிரபுதேவா என அனைத்து முன்னணி நடிகர்களின் ஜோடியாக நடித்துள்ளார். குஷ்பூவின் முக சாயல், துறுதுறுப்பு, குழந்தை தனமான சிரிப்பு இவை அனைத்தும் ஹன்சிகாவை குட்டி குஷ்பூ என ரசிகர்களை கொண்டாட வைத்தது.
ஹன்சிகாவின் திருமணம் :
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் காதலர் சோஹேல் கதுரியாவுடன் ஹன்சிகாவுக்கு, ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள முந்தோடா கோட்டையில் மிகவும் பிரம்மாண்டமாக திருமணம் நடைபெற்றது. அவரின் உணர்வுபூர்வமான திருமண நிகழ்வு ‘ஹன்சிகாவின் லவ், ஷாதி, டிராமா’ என்ற பெயரில் டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பப்பட்டது.
நிதி உதவி :
ரசிகர்களின் பேவரட் நடிகையாக இருப்பதன் மூலம் மக்களின் அன்பை பெற்றாலும் குழந்தைகளின் கல்விக்கு நிதி, மருத்துவ செலவுகள் உள்ளிட்ட பல நிதி உதவிகளை செய்வதன் மூலம் மக்கள் மத்தியில் ஹன்சிகாவுக்கு நன்மதிப்பும் அன்பும் நிறைவாகவே உள்ளது.
தற்போது கைவசம் பல தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார். கணவருடன் தனது முதல் பிறந்தநாளை கொண்டாடும் ஹன்சிகாவுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.