நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வரும் சூழலில், இன்று 6வது கட்டமாக மக்களவைத் தேர்தல் நடைபெற்றது. நாட்டின் முக்கியமான மாநிலங்களில் ஒன்றான மேற்கு வங்காளத்தின் பல தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.


விரட்டி, விரட்டி அடிக்கப்பட்ட பா.ஜ.க. வேட்பாளர்:


மேற்கு வங்காளத்தில் பா.ஜ.க. பலம் வாய்ந்த தொகுதிகளில் ஒன்று ஜார்க்ரம். இந்த தொகுதியில் பா.ஜ.க. வேட்பாளராக பிரனாத் துது போட்டியிடுகிறார். பொதுவாக, ஒரு தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் தாங்கள் போட்டியிடும் தொகுதியில் நடக்கும் வாக்குப்பதிவை நேரில் சென்று பார்வையிடுவார்கள்.


அதுபோல, துது ஜார்க்ரம் தொகுதிக்குட்பட்ட மேற்கு மிட்னாபூர் மாவட்டத்தில் உள்ள கார்பெட்டா பகுதியில் உள்ள மங்கலபோடா பகுதிக்குச் சென்றார். அப்போது, அங்கே ஏற்பட்ட வாக்குவாதத்திற்கு பிறகு அப்பகுதியில் உள்ள ஆண்கள், பெண்கள் என கிராமத்தினர் அனைவரும் ஒன்று சேர்ந்து வேட்பாளர் துதுவையும், அவரது ஆதரவாளர்கள் விரட்டி, விரட்டி அடித்தனர்.






வேட்பாளர் மீதும், அவரது பாதுகாவலர்கள் மீதும் கற்களை சரமாரியாக வீசித் தாக்கினர். இதில், அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. பின்னர், வேட்பாளரை அங்கு பாதுகாப்பு பணியில் இருந்தவர்கள் அவரை பத்திரமாக மீட்டுக் கொண்டு வந்தனர்.


பா.ஜ.க. - திரிணாமுல் காங்கிரஸ் சொல்வது என்ன?


இந்த சம்பவத்திற்கு பிறகு, தலையில் காயத்துடன் நிருபர்களுக்கு பேட்டி அளித்த துது குறிப்பிட்ட பகுதியில் பா.ஜ.க.வினரை வாக்களிக்கவிடாமல் தடுத்ததாக தகவல் கிடைத்தது. இதையடுத்து, அங்கு சென்று பார்த்தபோது 200க்கும் மேற்பட்டோர் கற்கள், கம்புகள் கொண்டு துரத்தி, துரத்தி தாக்கினர் என்று கூறியுள்ளார். இந்த விவகாரத்தில் மாநில போலீசார் தங்களுக்கு பாதுகாப்பு அளிக்கவில்லை என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.


ஆளுங்கட்சியான திரிணாமுல் காங்கிரஸ் கட்சி இந்த விவகாரம் தொடர்பாக, பா.ஜ.க. வேட்பாளர் துதுவின் பாதுகாவலரில் ஒருவர் வாக்குச்சாவடிக்கு முன்பு வாக்களிக்க நின்ற பெண்ணை தாக்கினர். இதனால், அங்கு வாக்களிக்க வந்த கிராமத்தினர் ஆத்திரம் அடைந்தனர். இதையடுத்தே, கிராமத்தினர் பா.ஜ.க. வேட்பாளரையும், அவரது பாதுகாவலரையும் துரத்தி, துரத்தி அடித்தனர் என்று தெரிவித்துள்ளது.


மேற்கு வங்காளத்தில் பா.ஜ.க. வேட்பாளரை ஒட்டுமொத்த கிராமமே துரத்தி, துரத்தி அடித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. கடந்த மக்களவைத் தேர்தலில் மேற்கு வங்காளத்தில் பா.ஜ.க. வெற்றி பெற்ற 18 தொகுதிகளில் ஜார்க்ரம் தொகுதியும் ஒன்றாகும். இந்த தொகுதியில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி சார்பாக கலிபடா சோரனும், மார்க்சிஸ்ட் கட்சி சார்பாக சோனமமு முர்முவும் போட்டியிடுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.  


மேலும் படிக்க: வாக்கு செலுத்திய ஜெய்சங்கர்.. சான்றிதழ் வழங்கி கெளரவித்த தேர்தல் ஆணையம்.. அப்படி என்ன ஸ்பெஷல்?


மேலும் படிக்க: "மாடு இன்னும் பாலே தரல.. ஆனா, நெய்க்கு சண்டை போடுறாங்க" INDIA கூட்டணி மீது பிரதமர் மோடி தாக்கு!