திருச்சி மாவட்டம், திருவானைக்காவல் தல வரலாறு..


சிவன் கட்டளைக்காக அம்பிகை, பூலோகத்தில் மானிடப்பெண்ணாக பிறந்தாள். இங்கு காவிரி நீரில் லிங்கம் பிடித்து வழிபட்டாள். சிவன் அந்த லிங்கத்தில் எழுந்தருளி அவளுக்குக் காட்சி தந்தார். அம்பிகையால் நீரில் லிங்கம் உருவாக்கப்பட்ட தலம் என்பதால் இது, பஞ்ச பூத தலங்களில் "நீர்' தலமானது. பிற்காலத்தில் ஜம்பு என்னும் முனிவர் சிவனை வேண்டி இங்கு தவமிருந்தார்.


சிவன் அவருக்கு காட்சி கொடுத்து, நாவல் பழ பிரசாதம் கொடுத்தார். பழத்தை உண்ட முனிவர், அதன் புனிதம் கருதி விதையையும் விழுங்கி விட்டார். அவர் விழுங்கிய விதை வயிற்றுக்குள் முளைத்து, தலைக்கு மேலாக மரமாக வளர்ந்தது. அவர் சிரசு வெடித்து முக்தி பெற்றார்.


நாவல் மரத்துக்கு "ஜம்பு' என்றும் பெயருண்டு. அம்பிகையால் அமைக்கப்பட்ட நீர் லிங்கம் இந்த மரத்தின் கீழ் அமைந்தது. பக்தராகிய ஜம்புவுக்கு முக்தி தந்ததால், சுவாமி "ஜம்புகேஸ்வரர்' என பெயர் பெற்றார்.




யானை அகிலாவிற்கு 22வது பிறந்தநாள் விழா கொண்டாட்டம் 


மேலும், இத்தல இறைவன் சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார். பஞ்சபூத தலங்களில் இத்தலம் நீர் (அப்பு) தலம். இக்கோயில் சோழர்களால் கட்டப்பட்டது. சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 60 வது தேவாரத்தலம் ஆகும். அம்மனின் 51 சக்தி பீடங்களில் இது ஞான சக்தி பீடம் ஆகும்.


இத்தகைய சிறப்பு வாய்ந்த இத்திருத்தலத்தில் யானை முக்கிய பங்காற்றுகிறது, ஒவ்வொரு கால பூஜையிலும் கோயில் யானை அகிலா மூலம் புனிதநீர் எடுத்து வரப்பட்டு அபிஷேகம் செய்யப்படுவது மற்றும் யானை அகிலாவும் முக்கிய பங்காற்றுகிறது. 


அந்த வகையில் கடந்த 2002ல் பிறந்த அகிலா யானையானது கடந்த 2011ம் ஆண்டு ஜெயலலிதா அவர்களின் ஆட்சியின்போது திருக்கோவில் பூஜைகள் மற்றும் திருப்பணிக்காக திருவாணைக்காவல் கோயிலுக்கு கொண்டு வரப்பட்டது. அகிலாவிற்கு இன்று 22-வது வயதை எட்டும் நிலையில் திருக்கோயில் சார்பில் யானைக்கு பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.




கோயில் யானை அகிலாவுக்கு புத்தாடை அணிவித்து அலங்கரிக்கப்பட்டு அழைத்து வரப்பட்டு பின்னர் திருக்கோயில் வளாகத்தில் உள்ள நந்தவனத்தில் யானைக்கு பூஜைகள் நடத்தப்பட்டு யானை பாகன்கள், அர்ச்சகர்கள், திருக்கோவில் பணியாளர்கள் மற்றும் பக்தர்கள் பலரும் பங்கேற்ற யானை அகிலாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துப் பாடி மலர் தூவி பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர்.


பின்னர் பழங்கள், காய்கறிகள், கடலை மிட்டாய், கொழுக்கட்டை உள்ளிட்ட பல்வேறு பொருட்களை வழங்கி யானையை மகிழ்வித்தனர். பக்தர்கள் ஒருசேர பிறந்தநாள் வாழ்த்துக் கூறினர். அதனை ஏற்றுக் கொண்டு தும்பிக்கையை ஆட்டி தனது நன்றியைத் தெரிவித்தது. அதனைப் பார்க்க வந்த அனைவரையும் மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தியது. அதனைத் தொடர்ந்து கோயில் வளாகத்தில் உள்ள நீச்சல் குளத்தில் யானை அகிலா உற்சாக குளியல் போட்டது.