Jaishankar Certificate: இந்தியாவை அடுத்த 5 ஆண்டுகளுக்கு ஆளப்போவது யார் என்பதை தீர்மானிக்கும் நாடாளுமன்ற மக்களவை தேர்தல் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடந்து வருகிறது. கடந்த ஏப்ரல் மாதம் 19ஆம் தேதி தொடங்கிய தேர்தல் 7 கட்டங்களாக நடந்து வருகிறது.


6ஆம் கட்ட தேர்தல்: வரும் ஜூன் 1ஆம் தேதி, கடைசிக்கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதுவரை நடந்த 5 கட்ட வாக்குப்பதிவில் நாடு முழுவதும் உள்ள 428 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.


தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா, ராஜஸ்தான், அஸ்ஸாம் உள்ளிட்ட மாநிலங்களில் தேர்தல் நடந்து முடிந்துள்ளது. இந்த நிலையில், 6ஆம் கட்டமாக 58 தொகுதிகளுக்கு இன்று தேர்தல் நடந்து வருகிறது. தேசிய தலைநகரான டெல்லியில் உள்ள 7 தொகுதிகளுக்கும் இன்று வாக்குப்பதிவு நடக்கிறது.


குடியரசு தலைவர் திரௌபதி முர்மு உள்பட நாட்டின் முக்கிய தலைவர்கள் இன்று ஜனநாயக கடமையை ஆற்றினர். அந்த வகையில், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரும் இன்று டெல்லியில் வாக்களித்தார். இதற்காக அவருக்கு இந்திய தேர்தல் ஆணையத்தால் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.


ஜெய்சங்கருக்கு சான்றிதழ் வழங்கியது ஏன்? வாக்கு செலுத்துவது என்பது அனைவரின் ஜனநாயக கடமை. இப்படியிருக்க, ஜெய்சங்கருக்கு மட்டும் இந்திய தேர்தல் ஆணையம் சான்றிதழ் வழங்கி கெளரவித்தது ஏன் என்பது கேள்வியாக எழுந்துள்ளது. அதற்கான பதிலை இந்த தொகுப்பில் தெரிந்து கொள்ளலாம்.


ஜெய்சங்கர் வாக்கு செலுத்திய வாக்குப்பதிவு மையத்தில் அவரே முதல் ஆண் வாக்காளர் என்பதால் ஊக்கப்படுத்தும் விதமாக சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பேசிய ஜெய்சங்கர், "இந்த வாக்குச் சாவடியில் நான்தான் முதல் ஆண் வாக்காளர்" என்றார்.






தொடர்ந்து பேசிய அவர், "நாட்டுக்கு இது ஒரு தீர்க்கமான தருணம் என்பதால் மக்கள் வெளியே வந்து வாக்களிக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். தேர்தலில் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வரும் என்று உறுதியாக நம்புகிறேன்" என்றார்.


தேர்தல் ஆணையம் கொடுத்த சான்றிதழுடன் எடுக்கப்பட்ட புகைப்படத்தை எக்ஸ் தளத்தில் ஜெய்சங்கர் முன்னதாக பகிர்ந்தார். டெல்லியை பொறுத்தவரையில் பாஜக தனித்து களமிறங்கியுள்ளது. காங்கிரஸ் கட்சியும் ஆம் ஆத்மியும் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது.


பீகார், மேற்குவங்கத்தில் தலா 8 தொகுதிகளுக்கு இன்று தேர்தல் நடக்கிறது. டெல்லியில் 7 தொகுதிகளுக்கும் ஹரியானாவில் 10 தொகுதிகளுக்கும் இன்று தேர்தல் நடந்து வருகிறது. ஜார்க்கண்டில் 4 தொகுதிகளுக்கும் உத்தர பிரதேசத்தில் 14 தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடந்து வருகிறது.