தமிழகம் முழுவதும் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என மொத்தம் 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் வரும் பிப்ரவரி 19ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறும் என மாநிலத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 28 ஆம் தேதி அன்று தொடங்கிய நிலையில் பிப்ரவரி 4 ஆம் தேதி வரை வேட்புமனுத் தாக்கல் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து பிப்ரவரி 05 ஆம் தேதி அன்று வேட்புமனுக்கள் ஆய்வு செய்யப்படும். வேட்புமனுக்களை திரும்பப் பெற பிப்ரவரி 07ஆம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் பிப்ரவரி 22 அன்று வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்றன.
இந்த நிலையில் தமிழகத்தில் திமுக, அதிமுக தலைமையில் செயல்பட்டு வரும் கூட்டணி கட்சிகளுக்குள் இடப்பங்கீட்டு பேச்சுவார்த்தை தீவிரமாக நடந்து வருகிறது. திமுக கூட்டணி சார்பில் அதன் கூட்டணி கட்சிகள் மாவட்ட வாரியாக உள்ள திமுக நிர்வாகிகளிடம் பேசி இடங்களை பங்கீட்டு கொள்ளலாம் என முடிவெடுக்கப்பட்டுள்ளதால் திமுக கூட்டணியில் அங்கம் வகித்து வரும் கட்சிகள் திமுக மாவட்ட நிர்வாகிளை அணுகி பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள மயிலாடுதுறை நகராட்சியில் 36 வார்டுகள் உள்ளன. இதில் தாழ்த்தப்பட்டோருக்கு ஒதுக்கப்பட்டுள்ள 24ஆவது வார்டை தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் திமுக நிர்வாகிகளிடம் வலியுறுத்தி வந்துள்ளனர். இந்த சூழலில் திமுக கூட்டணியில் இடப்பங்கீடு முடிவதற்கு முன்பே 24 ஆவது தனி வார்டில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் போட்டியிட அக்கட்சியின் நகர செயலாளர் பிரபாகர் என்பவரின் மனைவி சுகந்தி பிரபாகரன் மயிலாடுதுறை மாவட்டத்திலேயே முதல் ஆளாக கடந்த வெள்ளிக்கிழமை மயிலாடுதுறை நகராட்சி அலுவலகத்தில் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தார்.
ஆனால், நேற்று நடைபெற்ற வார்டு ஒதுக்கீடு பேச்சுவார்த்தையின் முடிவில் இந்த வார்டு திமுகவுக்கு ஒதுக்கப்பட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் இதனைக் கண்டித்து, மயிலாடுதுறை கிட்டப்பா அங்காடி முன்பு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நகர செயலாளர் தே.பிரபாகரன் தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில், கட்சி உறுப்பினர்கள் கலந்துகொண்டு, மயிலாடுதுறை நகராட்சி தேர்தலில் தனி வார்டான 24 வது வார்டினை விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு ஒதுக்க வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினர்.
Today Headlines : பட்ஜெட் உரை இன்று தொடக்கம்..! காங்கிரஸ் உரிமை மீறல் கடிதம்..! நடால் புதிய சாதனை...! முக்கியச் செய்திகள்
இந்நிலையில் இது குறித்து அக்கட்சி வட்டாரத்தினர் கூறுகையில், கூட்டணி கட்சியினரின் வார்டு ஒதுக்கீடு பேச்சுவார்த்தை நடைபெறும் முன்னதாககவே தன்னிச்சையாக விடுதலை சிறுத்தை கட்சியினர் வேட்புமனு தாக்கல் செய்ததாலேயே, தனி வார்டான 24 வார்டு வார்டை அவர்களுக்கு ஒதுக்கீடு செய்யவில்லை என தெரிவித்தனர்.