இன்று பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கும் நிலையில் பெகாசஸ் விவகாரத்தை கையில் எடுக்க எதிர்க்கட்சிகள் முடிவெடுத்துள்ளன. மத்திய அரசு இருந்து அதிநவீன ஆயுதங்கள் மற்றும் பெகாசஸ் ஸ்பைவேர் மென்பொருள் ஆகியவற்றை வாங்குவதற்கு பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய் ஒப்பந்தத்தில் இஸ்ரேல் அரசிடம் ஒப்பந்தம் செய்ததாக தி நியூ யார்க் டைம்ஸ் நிறுவனம் செய்தி வெளியிட்டது.
முன்னதாக, தி பெகாசஸ் ஸ்பைவேர் ப்ராஜெக்ட் என்ற கூட்டமைப்புக்கு 50,000 தொலைபேசி எண்களுடன் கூடிய தரவுதளத்துக்கான (Database access) அணுகல் கிடைத்தது. இதில், இந்தியாவைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்ட நபர்களின் (முன்னாள், இன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி, எதிர்க்கட்சித் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள், மனித உரிமை ஆர்வலர்கள்) தொலைபேசி எண்கள் இடம் பெற்றிருந்தன. இந்த தொலைப்பேசி எண்களுடன் தொடர்புடைய நபர்கள் உளவு பார்க்கப்பட்டார்கள் என்று குற்றச்சாட்டை இந்த கூட்டமைப்பு முன்வைத்தது.
2021 அக்டோபர் 21 அன்று, பெகாசஸ் ஸ்பைவேரை பயன்படுத்தி இந்திய பிரஜைகளின் தொலைபேசிகள் வேவு பார்க்கப்பட்டதா என்பதைக் கண்டறிய நீதிபதி ரவிச்சந்திரன் தலைமையில் 3 பேர் கொண்ட நிபுணர்கள் குழுவை இந்திய உச்சநீதிமன்றம் அமைத்தது. குஜராத் காந்திநகரில் உள்ள தேசிய தடய அறிவியல் பல்கலைக்கழகத்தின் டீன் டாக்டர் நவீன் குமார் சவுத்ரி, கேரளா அமிர்தா பல்கலைக்கழக பேராசரியர் டாக்டர் பிரபாகரன் பி, ஐஐடி மும்பை பேராசரியர் டாக்டர் அஷ்வின் அனில் ஆகியோர் இந்த குழுவின் உறுப்பினர்களாக உள்ளனர்.
இதற்கிடையே, இரண்டு சைபர் தொழில்நுட்ப வல்லுநர்கள் தனிப்பட்ட முறையில் நடத்திய சோதனையில், சில இந்திய பிரஜைகளின் தொலைப்பேசி பெகாசஸ்ஸால் உளவு பார்க்கப்பட்டதற்கான ஆதாரங்களை கண்டறிந்தனர். இதுதொடர்பாக, தங்களது அறிக்கையை நீதிபதி ரவிச்சந்திரன் தலைமையிலான நிபுணர்கள் குழுவிடம் சமர்பித்துள்ளதாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் தெரிவித்துள்ளது.
முதலாவது அராய்ச்சியாளர், தரவுதளத்தில் இடம்பெற்றுள்ள ஏழு பேரின் ஐபோன் தொலைப்பேசியை தொழில்நுட்ப ஆய்வுக்கு உட்படுத்தி உள்ளார். இதில், இரண்டு தொலைபேசி பெகாசஸ்ஸால் பாதிக்கப்பட்டுள்ளதைக் கண்டறிந்தார். கடந்த 2018ம் ஆண்டு, முதல் தொலைபேசியில் பெகாசஸ் மூலம் ஹேக் செய்வதற்கான முயற்சி மேற்கொள்ளப்பட்டதாகவும், இரண்டாவது தொலைபேசியில், 2021 ஜூன் முதல் ஜூலை வரையிலான காலகட்டங்களில், பலமுறை பெகாசஸ் ஸ்பைவேரை பயன்படுத்தி ஹேக் செய்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் கண்டறிந்துள்ளார்.
இரண்டாவது ஆரய்ச்சியாளர், தரவுதளத்தில் இடம்பெற்றுள்ள ஆறு பேரின் ஆண்ட்ராய்டு போன்களை ஆய்வு செய்துள்ளார். நான்கு போன்களில் வெவ்வேறு வகையான மால்வேர் பதிப்புகளைக் கண்டறிந்தார். மீதமுள்ள இரண்டு சாதனங்களில் ஒரிஜினல் பெகாசஸின் மாறுபாட்டுடன் கூடிய ஸ்பைவேர் இருந்ததாக தெரிவித்துள்ளார். இந்த, இரண்டு ஆராய்ச்சியாளர்களும் தங்களது பரிந்துரையை நிபுணர்கள் குழுவிடம் சமர்பித்துள்ளனர்.
இதற்கிடையே,மக்களவை காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, பெகாசஸ் விவாகாரத்தில் அவையின் வேண்டுமென்றே தவறாக வழிநடத்தியதாக மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் மீது பகிரங்கமாக குற்றஞ்சாட்டியுள்ளார். இது,தொடர்பாக மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு எழுதி கடிதத்தில், பாராளுமன்றத்தினதும் அதன் உறுப்பினர்களதும் சிறப்புரிமைகளையும் மீறியதற்காக, தகவல் தொழில்நுட்ப அமைச்சர் மீது பாராளுமன்றச் சிறப்புரிமை மீறல்களுக்கான தீர்மானத்தை (Privilege Motion )கொண்டு வர வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்.
ஜூலை 22 அன்று, பெகாசஸ் விவகாரம் தொடர்பாக அறிக்கைத் தாக்கல் செய்த தொழில்நுட்ப அமைச்சர், பெகாசஸ் உளவு மென்பொருள் மூலம் போன் ஒட்டு கேட்பு புகாருக்கு ஆதாரம் இல்லை என்று தெரிவித்தார். மேலும், பட்டியலில் உள்ள எண்கள் வேவுபார்க்கப்பட்டனவா என்பது கூற இயலாது என்று செய்தியை வெளியிட்டவர் கூறுகிறார். வேவு பார்க்க பயன்படுத்தப்பட்டதாக கூறப்படும் தொழில்நுட்பத்தின் உரிமையாளர் நிறுவனம் குற்றச்சாட்டுகளை முற்றிலும் மறுத்துள்ளது. சட்டப்பூர்வமில்லா வேவுபார்த்தல் நடைபெறாமல் இருப்பதை நமது நாட்டின் நன்கு நிறுவப்பட்ட செயல்முறைகள் உறுதி செய்கின்றன. இந்த விஷயத்தை தர்க்க கண்ணோட்டத்தோடு நாம் அணுகினால், இந்த பரபரப்புக்கு ஆதாரம் இல்லை என்பது நன்கு புலப்படும் என்றும் தெரிவித்தார். மேலும், பெகாசஸ்-ஐ தயாரிக்கும் என்எஸ்ஓ குழுமத்துடன் இந்தியாவிற்கு வர்த்தக ரீதியான எந்தவித தொடர்பும் கிடையாது என பாதுகாப்புத் துறை இணையமைச்சர் அஜய் பட் தெரிவித்திருந்தார்.
எனவே, இன்று தொடங்க இருக்கும் பட்ஜெட் கூட்டத் தொடரில் பெகாசஸ் விவாகரத்தை முக்கிய பிரச்சனையாக எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டு வருவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. நாடாளுமன்ற இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகள் பெகாசஸ் தொலைபேசி ஒட்டுக் கேட்பு பிரச்சினையை எழுப்பி, தொடர் அமளியில் ஈடுபடலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.