திருப்பூர் தொகுதியில் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சுப்பராயன் 4,72,739 வாக்குகளுடன் வெற்றி பெற்றுள்ளார்.
மக்களவை தேர்தல்
இந்தியாவில் மக்களவை தேர்தல் திருவிழா ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கியது. 7 கட்டங்களாக நடைபெற்ற வாக்குப்பதிவு கடந்த ஜூன் 1 ஆம் தேதி முடிவடைந்தது. இந்த 7 கட்டங்களில் முதல் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்ற ஏப்ரல் 19 ஆம் தேதியே தமிழ்நாட்டுக்கும் தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் திமுக, அதிமுக, பாஜக, நாம் தமிழர் கட்சிகள் இடையே 4 முனை போட்டியானது நிலவியது. 2019 ஆம் ஆண்டு மக்களவை தேர்தல் நிலவரத்தை விட 2024ல் மாற்றம் இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளதால் பெரும் எதிர்பார்ப்பு நிலவியது.
வாக்கு எண்ணிக்கை நிலவரம்
திருப்பூர் தொகுதியில் தொடக்கம் முதலே கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சுப்பராயன் முன்னிலை வகித்து வருகிறார். திருப்பூர் தொகுதியில் 4 மணி நிலவரப்படி சுப்பராயன் (இந்திய கம்யூனிஸ்ட்) 2,94,801 வாக்குகளும், அருணாச்சலம் (அதிமுக) 2,16,646 வாக்குகளும், சீதா லட்சுமி (நாம் தமிழர் கட்சி) 58,596 வாக்குகளும், முருகானந்தம் (பாஜக) 1,12,145 வாக்குகளும் பெற்றுள்ளனர்.
திருப்பூர் மக்களவை தொகுதி
இந்த மக்களவை தேர்தலில் கொங்கு மண்டலத்தில் அமைந்துள்ள திருப்பூர் தொகுதியில் எந்த வேட்பாளருக்கு வெற்றி வாய்ப்பு என்பது கணிக்க முடியாத ஒன்றாக உள்ளது. தமிழ்நாட்டில் தொழில் வளர்ச்சி அதிகம் உள்ள மாவட்டங்களில் திருப்பூரும் ஒன்று. மற்ற மாவட்ட மக்கள் அதிகளவில் இங்கு வசிக்கின்றனர். திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு, பவானி, அந்தியூர், கோபிசெட்டிபாளையம், பெருந்துறை ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகள் திருப்பூர் மக்களவை தொகுதியாக கணக்கிடப்படுகிறது.
கோபிச்செட்டிப்பாளையம் மக்களவைத் தொகுதி மறுசீரமைக்கப்பட்டு திருப்பூர் மக்களவை தொகுதியாக மாற்றம் செய்யப்பட்டு 2009 ஆம் ஆண்டு முதல் தேர்தலை சந்தித்தது. 2014 மற்றும் 2019 ஆகிய 3 தேர்தல்களில் அதிமுக 2 முறையும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளது.
வாக்களித்தவர்கள் எண்ணிக்கை
திருப்பூர் தொகுதியில் 7,91,027 ஆண் வாக்காளர்களும், 8,17,239 பெண் வாக்காளர்களும், 255 மூன்றாம் பாலின வாக்காளர்களும் உள்ளனர். இவர்களில் 5,67,433 ஆண் வாக்காளர்களும், 5,68,470 பெண் வாக்களர்களும், 95 மூன்றாம் பாலினத்தவர்களும் தங்கள் வாக்கினை செலுத்தியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
தொகுதியின் முக்கிய வேட்பாளர்கள்
2024 ஆம் ஆண்டு தேர்தலில் திருப்பூரில் திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் 2019ல் வெற்றி பெற்ற சுப்பராயன், அதிமுக சார்பில் அருணாச்சலம், பாஜக சார்பில் முருகானந்தம், நாம் தமிழர் கட்சி சார்பில் மா.கி.சீதாலட்சுமி ஆகியோர் களம் கண்டனர்.