வேலூர் தொகுதியில்  தி.மு.க-வின் கதிர் ஆனந்த்  5,25,957 வாக்குகளுக்கு மேல் பெற்று வெற்றியை உறுதி செய்தார்.


வேலூர் நாடாளுமன்றத் தொகுதியில் பதிவான வாக்குகள், வேலூரிலுள்ள தந்தை பெரியார் அரசு பொறியியல் கல்லூரியில் எண்ணப்படுகின்றன. அதிகபட்சமாக 21 சுற்றுகள் வரை வாக்குகள் எண்ணப்படுகின்றன.


இந்த நாடாளுமன்றத் தொகுதிக்குள் வேலூர், அணைக்கட்டு, கே.வி.குப்பம், குடியாத்தம், ஆம்பூர், வாணியம்பாடி ஆகிய 6 சட்டமன்றத் தொகுதிகள் வருகின்றன.


வேலூர் சட்டமன்றத் தொகுதியை பொறுத்தமட்டில் 18 சுற்றுகளாகவும், அணைக்கட்டு 20 சுற்றுகளாகவும், கே.வி.குப்பம் 19 சுற்றுகளாகவும், குடியாத்தம் 21 சுற்றுகளாகவும், ஆம்பூர் 18 சுற்றுகளாகவும், வாணியம்பாடி 19 சுற்றுகளாகவும் எண்ணப்பட்டு அறிவிக்கப்படவிருக்கின்றன.


தபால் வாக்குகள், மின்னணு தபால் வாக்குகள் ஆகியவற்றோடு சேர்த்து எண்ணுவதற்காக மொத்தம் 100 மேஜைகள் போடப்பட்டிருக்கின்றன. 


பாதுகாப்பு ஏற்பாடுகள் பொறுத்தமட்டில்...


வேலூர் மாவட்ட எஸ்.பி மணிவண்ணன் தலைமையின்கீழ் தமிழ்நாடு காவல்துறையினர் மற்றும் துணை ராணுவப் படையினர் என 900 காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருக்கின்றனர்.


சுற்றுகள் வாரியாக முடிவுகள் அறிவிக்கப்படவிருக்கின்றன. 


வேலூர் தொகுதியை பொறுத்தவரை தி.மு.க-வின் கதிர் ஆனந்த், பா.ஜ.க-வின் ஏ.சி.சண்முகத்துக்கு இடையேதான் கடும் போட்டி நிலவுகிறது. சிட்டிங் எம்.பி-யான கதிர் ஆனந்த் இரண்டாவது முறையாக வேலூர் கோட்டையை கைப்பற்றப் போகிறாரா அல்லது அவரோட தந்தையும் சீனியர் அமைச்சருமான துரைமுருகனின் நம்பிக்கையை தகர்க்கப் போகிறாரா என்பதும் பிற்பகல் நிலவரப்படி உறுதியாக தெரிந்துடும்.


அதேபோல, கடந்த இரண்டு தேர்தல்களிலும் தொடர் தோல்விகளைச் சந்தித்த பா.ஜ.க வேட்பாளர் ஏ.சி.சண்முகம் இந்த முறையாவது வேலூரை வெல்லப் போகிறாரா அல்லது ஹாட்ரிக் தோல்வியை தழுவப் போகிறாரா என்ற விறுவிறுப்பும் ஏற்பட்டிருக்கிறது.


தொகுதி விவரம்


நடந்து முடிந்த 18ஆவது மக்களவை பொதுத்தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்றது. இதில் தமிழ்நாட்டில் முதல் கட்டத் தேர்தலில் ஏப். 19ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்நிலையில் 7 கட்டங்களிலும் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு இன்று அதாவது ஜூன் 4ஆம் தேதி நாடு முழுவதும் மிகவும் விறுவிறுப்பாக வாக்குகள் எண்ணும் பணி நடைபெறுகிறது. தமிழ்நாட்டினைப் பொறுத்தவரையில் மொத்தம் 39 தொகுதிகள் உள்ளன. 


இந்த 39 தொகுதிகளிலும் வாக்கு எண்ணும் பணிகளை தேர்தல் ஆணையம் தீவிரமாகவும் கவனமாகவும் செய்கின்றது. இந்நிலையில் இந்தத் தொகுப்பில் வேலூர் மக்களவைத் தொகுதி வாக்கு எண்ணிக்கை நிலவரம் குறித்தும், வேலூர் மக்களவைத் தொகுதி தேர்தல் களம் எப்படி இருந்தது என்பது குறித்தும் காணலாம். 


வேலூர் மக்களவைத் தொகுதி 


1951ஆம் ஆண்டு முதல் தேர்தலைச் சந்தித்து வரும் வேலூர் மக்களவைத் தொகுதி அரசியல் முக்கியத்துவம் வாய்ந்தது. சுதந்திரப் போராட்டக் காலத்தின் சிப்பாய் புரட்சி, பாரம்பரியமிக்க வேலூர் கோட்டை, பாலாற்றங்கரை ஆகிய பெருமைகளைத் தாங்கி நிற்பதுடன், அதிக இஸ்லாமியர்கள் வாக்குகள் கொண்ட தொகுதி உள்ளிட்ட சிறப்பம்சங்களையும் கொண்டுள்ளது.


வேலூர் மக்களவைத் தொகுதியைப் பொறுத்தவரையில், அதனுள், வேலூர், அணைக்கட்டு, குடியாத்தம் (தனி), கே.வி. குப்பம் (தனி), வாணியம்பாடி மற்றும் ஆம்பூர் என மொத்தம் 6 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன.  இந்த 6 தொகுதிகளில் 4 தொகுதிகளில் திமுகவும், இரண்டு தொகுதிகளில் அதிமுகவும் கடந்த 2021ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று எம்.எல்.ஏக்களைக் கொண்டுள்ளனர்.


வாக்காளர்கள் விவரம் 2024:


வேலூர் தொகுதியில் ஆண் வாக்காளர்கள் - 7.40.222 பேர்


பெண் வாக்காளர்கள் - 7,87,838 பேர்


மூன்றாம் பாலினத்தவர் - 213 பேர்


என மொத்த வாக்காளர்கள் - 15,28,273 பேர். இவர்களில் நடந்து முடிந்த 2024 வேலூர் மக்களவைத் தேர்தலில் வாக்களித்தவர்கள் மொத்தம் 11,23,715 பேர். அதாவது 73.53 விழுக்காடாகும். 


வெற்றி யாருக்கு?


நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் வேலூர் தொகுதியில் 22 சுயேட்சை வேட்பாளர்களுடன் மொத்தம் 31 வேட்பாளர்கள் தேர்தலைச் சந்தித்தனர். இதில் கடந்த முறை திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற கதிர் ஆனந்த் இம்முறையும் களமிறங்கியுள்ளார். அதிமுக சார்பில் மருத்துவர் எஸ். பசுபதியும், பாஜக சார்பில் ஏ.சி. சண்முகமும், நாம் தமிழர் கட்சி சார்பில் மகேஷ் ஆனந்தும் களமிறங்கியுள்ளனர். இவர்கள் மட்டும் இல்லாமல் சுயேட்சையாக நடிகர் மன்சூர் அலிகான் களமிறங்கியுள்ளார். 


இந்தத் தொகுதியில் மீண்டும் திமுக வெல்வதற்கான வாய்ப்பு இருப்பதாக பேச்சுகள் இருந்தாலும், தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக உள்ள நரேந்திர மோடி வேலூரில் நேரடியாக பிரச்சாரத்தில் ஈடுபட்டதால், பாஜகவின் கரங்களும் ஓங்குவதற்கு வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகின்றது. மாநிலத்தில் ஆட்சியில் உள்ள திமுக, மத்தியில் ஆட்சியில் உள்ள பாஜகவின் அதிருப்தி வாக்குகளை தன்வசம் இழுக்க, அதிமுகவும் தேர்தல் களத்தில் தீவிரமாகப் பணியாற்றியது.


திமுக Vs பாஜக


மேலும் 2019ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் பாஜக -அதிமுக கூட்டணியில் போட்டியிட்ட புதிய நீதிக்கட்சி நிறுவனத் தலைவர் ஏ.சி.சண்முகத்தை 8000 வாக்குகள் வித்தியாசத்தில் கதிர் ஆனந்த் வென்றார். இந்நிலையில், இந்தத் தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட்ட ஏ.சி.சண்முகம் வெற்றி பெறும் முழு முனைப்பில் களமிறங்கினார். இந்நிலையில் தேர்தலுக்கு பிந்தையக் கருத்து கணிப்புகளின்படி வேலூர் தொகுதியில் திமுகவுக்கு இருக்கும் செல்வாக்கு தாண்டி, ஏ.சி.சண்முகத்துக்கு வெற்றி வாய்ப்பு அல்லது வேலூர் தொகுதியில் இழுபறி நிலவுவதற்கு வாய்ப்புள்ளதாகவோ தகவல்கள் தெரிவிக்கின்றன.


இந்நிலையில் இன்று விறுவிறுப்பாக நடைபெற்று வரும் வாக்கு எண்ணிக்கை முடிவில் யார் வெற்றியாளர் என்பது தெரிந்துவிடும்.