கர்நாடகா சட்டமன்ற தேர்தல் வரும் மே 10 ஆம் தேதி நடைபெறும் நிலையில் தேர்தல் பிரச்சாரங்கள் சூடு பிடித்து வருகின்றன. நாளையுடன் பிரச்சாரங்கள் ஓயும் நிலையில் தொடர்ந்து கடந்த சில வாரங்களாக கர்நாடக மாநிலம் பரபரப்பான சூழலை எட்டியுள்ளது. தாமதிக்காமல் 13 ஆம் தேதியே வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுகிறது. அடுத்த ஆண்டு மக்களவை தேர்தல் நடைபெற உள்ளதால், அதற்கு முன்னோட்டமாக இந்தாண்டு நடைபெறும் பல மாநிலங்களின் சட்டமன்ற தேர்தல்கள் கருதப்படுகின்றன. இதில் மிக முக்கியமானது கர்நாடகா சட்டமன்ற தேர்தல். ஏனெனில் தென்னிந்தியாவை பொறுத்தவரையில் பாஜக ஆளும் ஒரே மாநிலம் கர்நாடகம் என்பதால் இந்த தேர்தல் பா.ஜ.க.வை பொறுத்தவரை மிகவும் முக்கியமான தேர்தலாக கருதப்படுகிறது. முக்கிய பாஜக தலைவர்கள், பிரதமர் மோடி, அமித் ஷா, யோகி என எல்லோரும் குவிய, காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் காங்கிரஸ் சார்பில் மறுபுறமும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், இறுதிகட்டமாக பிரதமர் மோடி 3 நாள் ரோட் ஷோவில் கலந்து கொண்டு வருகிறார். 






பிரதமர் மோடி சூறாவளி பிரசாரம்


இதனையொட்டி ஏற்கனவே கடந்த ஏப்ரல் மாதம் 30 ஆம் தேதி முதல் சூறாவளி பிரச்சாரத்தில் பிரதமர் மோடி ஈடுபட்டிருந்தார். தற்போது மீண்டும் 3 நாள் சூறாவளி பிரச்சாரமாக வேனில் ரோட் ஷோ வாக சென்று கொண்டிருக்கிறார். பிரச்சாரங்கள் நாளையோடு நிறைவடையும் நிலையில், மோடியும் நாளை ரோட்-ஷோ வோடு முடிக்கிறார். இந்த நிலையில் அவரோடு பெங்களூரு தெற்கு நாடாளுமன்ற தொகுதியின் மக்களவை உறுப்பினரான தேஜஸ்வி சூர்யா பெங்களூரு ரோட் ஷோவில் கலந்து கொண்டுள்ளார். அப்போது எடுத்த வீடியோவை அவர் வெளியிட்டுள்ளார். அதில் பிரதமர் மோடியின் வாகனம் நடுவில் செல்ல, சாலையின் இருபுறமும் மக்கள் நின்று கொண்டிருக்கிறார்கள்.


தொடர்புடைய செய்திகள்: Karnataka Opinion Poll: கர்நாடகாவில் எந்த மண்டலத்தில் "கை" ஓங்கும்? "தாமரை" மலரும்? ஏபிபி சி வோட்டர் கருத்துக்கணிப்பு..!


தேஜஸ்வி சூர்யா ட்வீட் 


"இன்று மாண்புமிகு பிரதமர் நரேந்திரமோடி வரலாற்று சிறப்புமிக்க பெங்களூரு ரோட் ஷோவில் கலந்து கொண்டது நல்ல ஆன்மீக அனுபவமாக இருந்தது," என்று தனது ட்வீட்டில் குறிப்பிட்ட தேஜஸ்வி சூர்யா அவரோடு வேனில் செல்லும்போது எடுத்த வீடியோவையும் பகிர்ந்துள்ளார். மேலும் அந்த பதிவில், "பிரதமர் சம்பாதித்த அன்பும் மரியாதையும் ஈடு இணையற்றது. அதை வார்த்தைகளால் வெளிப்படுத்த முடியாது. இது 70 வருட தவத்தின் பலன். மக்கள் அவரிடம் ஒரு தெய்வீக சக்தியைப் பார்க்கிறார்கள் & உணர்கிறார்கள். ரோட்ஷோவின் சில காட்சிகள் என் நினைவில் என்றும் நிலைத்திருக்கும்," என்று எழுதினார்.






தெய்வமாக மாறியவர் மோடி


மேலும் அங்கு மக்கள் செய்த விஷயங்களை விவரித்த அவர், "ஒரு இளம் தாய் தனது 1 மாதக் குழந்தையுடன் நின்று, பிரதமரின் ஆசிர்வாதத்தைப் பெற அதைத் தூக்குகிறார். பிரதமரின் கவனத்தை ஈர்க்கும் முயற்சியின் ஓவியத்துடன் சிறு குழந்தைகள் நிற்கின்றனர். சக்கர நாற்காலியில் முதியவர்கள் அமர்ந்திருக்கிறார்கள், அவரைப் பார்த்ததும் மிகுந்த ஆற்றலுடன் திடீரென எழுகின்றனர். ஆரத்தி தட்டுக்களுடன் இளம்பெண்கள் அவருக்காக பிரார்த்தனை செய்கிறார்கள். ஏழை மற்றும் பணக்காரர், இளைஞர்கள் மற்றும் பலவீனமானவர்கள், திறமையானவர்கள் மற்றும் திவ்யவான்கள் என அனைவரும் வந்திருந்தனர். அவர்களுக்கு அளவற்ற மகிழ்ச்சியைத் தந்தார் நம் பிரதமர். அவரில் தங்கள் கடவுளைக் கண்டார்கள். நமது புனித நூல்கள் அனைத்தும் அங்கீகரித்த, பகவான் ராமர் உருவகப்படுத்திய, பல்லாயிரம் ஆண்டுகால 'பாரதத் தத்துவ'த்தை நினைவுபடுத்தும் ஒரு மனிதர் இங்கே இருக்கிறார். அந்த மனிதர் தெய்வமனார், அதையே ஸ்ரீ நரேந்திர மோடியிடமும் பார்க்கிறோம். தெய்வங்கள் அவரை எப்போதும் காக்கட்டும்," என்று எழுதியுள்ளார்.