கர்நாடகா சட்டமன்ற தேர்தல் இன்னும் சில தினங்களில் நடக்க உள்ள நிலையில் அங்குள்ள மத்திய கர்நாடகா, கடற்கரையோர பகுதிகளில் யார் வெற்றி பெறுவார் என்பதை காணலாம்.
கர்நாடகா சட்டமன்ற தேர்தல்
கர்நாடகா சட்டமன்ற தேர்தல் வரும் மே 10 ஆம் தேதி நடைபெறுகிறது. அடுத்தாண்டு மக்களவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அதற்கு முன்னோட்டமாக இந்தாண்டு நடைபெறும் பல்வேறு மாநிலங்களின் சட்டமன்ற தேர்தல்கள் கருதப்படுகிறது. அதில் மிக முக்கியமானது கர்நாடகா சட்டமன்ற தேர்தல். அதற்கு காரணம் தென்னிந்தியாவை பொறுத்தவரையில் பாஜக ஆளும் ஒரே மாநிலம் கர்நாடகம் என்பதால் இந்த தேர்தல் பா.ஜ.க.வை பொறுத்தவரை மிக முக்கியமான தேர்தலாக கருதப்படுகிறது.
வாக்குப்பதிவுக்கு இன்னும் 4 நாள்களே உள்ள நிலையில், தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மே 13 ஆம் தேதி எண்ணப்படுகிறது. கடந்த மாதம் கர்நாடகா தேர்தல் குறித்த அறிவிப்பு வெளியான நாளில் இருந்தே அம்மாநிலம் களைக்கட்டியுள்ளது. பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள், முக்கிய தலைவர்கள் என பாஜக ஒருபுறமும், தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் காங்கிரஸ் சார்பில் மறுபுறமும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கருத்துக்கணிப்பு
இப்படியான நிலையில் கர்நாடகாவில் அடுத்து ஆட்சி அமைக்க போவது யார் என்ற கேள்வி இந்தியா முழுமைக்கும் எழுந்துள்ளது. இப்படியான நிலையில் சமூக பொருளாதாரம் தொடர்பான ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வரும் சி வோட்டர் நிறுவனமும், நமது ஏபிபி செய்தி நிறுவனமும் இணைந்து தேர்தலுக்கு முந்தைய கருத்துகணிப்பை நடத்தியுள்ளது. அதன் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளது.
இந்த கருத்துக்கணிப்பு ஏப்ரல் 29 ஆம் தேதி முதல் மே 5 ஆம் தேதி வரை ஒரு வாரம் எடுக்கப்பட்டுள்ளது. மொத்தமுள்ள 224 தொகுதிகளில் 6420 பேரிடம் நடத்தப்பட்ட கருத்துகணிப்பு எடுக்கப்பட்டுள்ளது. அதில் இந்த தேர்தலில் 40.2 சதவிகித வாக்குகளை பெற்று எதிர்க்கட்சியான காங்கிரஸ் ஆட்சி அமைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
மத்திய கர்நாடகா
ஏபிபி சி வோட்டர் கருத்துக்கணிப்பில், மத்திய கர்நாடகாவில் காங்கிரஸ் கூட்டணி 41.7 சதவிகித வாக்குகளை பெறும் என்றும், பாஜக 36.7 சதவிகித வாக்குகளுடன் 2வது இடத்தையும், மதச்சார்பற்ற ஜனதா தளம் 12.3 சதவிகித வாக்குகளை பெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது காங்கிரஸ் கூட்டணி 20 முதல் 24 சீட்டுகளும்,பாஜக 10 முதல் 14 இடங்களிலும், மதச்சார்பற்ற ஜனதா தளம் 2 சீட்டுகள் வரை பெறலாம் என கணிக்கப்பட்டுள்ளது. இங்கு மொத்தம் 35 இடங்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது.
கடற்கரையோர கர்நாடகா
கடற்கரையோர பகுதிகளைப் பொறுத்தவரை காங்கிரஸ் 37 சதவிகித வாக்குகளுடன் 4 முதல் 8 சீட்டுகளையும், பாஜக 46.1 சதவிகித வாக்குகளுடன் 13 முதல் 17 சதவிகித வாக்குகளுடன் 13 முதல் 17 சீட்டுகள் வரை பெறலாம் என கணிப்புகளின் முடிவுகள் தெரிவித்துள்ளது.