திமுக வேட்பாளர் முரசொலி 5,02,245 வாக்குகளுடன் வெற்றி பெற்றுள்ளார்.


இயல், இசை, நாடகம் என முத்தமிழின் அடையாளமாக உள்ள ஒரு தொகுதி என்றால் அது தஞ்சாவூர் மக்களவை தொகுதி என்றுதான் சொல்ல வேண்டும். தமிழ்நாட்டின் வளமான கலாச்சாரத்தைத் தாங்கி நிற்கும் தஞ்சையில் கலைக்கு என தனித்த முக்கியத்துவம் உள்ளது.


தஞ்சாவூர் அரசியல் வரலாறு: அரசியலை பொறுத்தவரையில், தஞ்சாவூர், திருவையாறு, ஒரத்தநாடு, மன்னார்குடி, பட்டுக்கோட்டை மற்றும் பேராவூரணி என 6 சட்டசபை தொகுதிகளை உள்ளடக்கியதுதான் தஞ்சாவூர் மக்களவை தொகுதி. 1952ம் ஆண்டு முதல் 2019ம் ஆண்டு வரை இந்த தொகுதியில் 19 முறை தேர்தல் நடந்துள்ளது.


ஆரம்பத்தில் காங்கிரஸ் ஆதிக்கம் செலுத்திய தொகுதிகளில் ஒன்றாக இருந்த போதிலும், பிற்காலத்தில் திராவிட கட்சிகளின் குறிப்பாக திமுகவின் கோட்டையாக மாறியது. தஞ்சாவூர் தொகுதியில் 9 முறை காங்கிரஸ் கட்சியும், இரண்டு முறை அதிமுகவும், எட்டு முறை திமுகவும் வெற்றி பெற்றுள்ளன.


காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களான சிங்காரவடிவேல், துளசி அய்யா வாண்டையார் போன்றவர்கள் எம்.பியாக இருந்த தொகுதி தஞ்சை. கடந்த 1991ஆம் ஆண்டுக்கு பிறகு, 2019ஆம் ஆண்டு வரையில், இந்த தொகுதியில் திமுக ஒரு முறை மட்டுமே தோல்வி அடைந்துள்ளது.


திமுகவின் கோட்டை: அந்தளவிற்கு தஞ்சையை கோட்டையாக திமுகவினர் தங்கள் வசம் வைத்துள்ளனர். தி.மு.க., சார்பில், ஒன்பது முறை போட்டியிட்ட பழனி மாணிக்கம், ஆறு முறை வெற்றி பெற்று எம்.பி.,யானார்.  கடந்த 2014ஆம் ஆண்டு மட்டும் அதிமுகவின் பரசுராமன் வெற்றிபெற்றார்.


தஞ்சாவூர் தொகுதி மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை: 14,94,216
• ஆண் வாக்காளர்கள்: 7,23,787
• பெண் வாக்காளர்கள்: 7,70,300
• மூன்றாம் பாலின வாக்காளர்கள்: 129


செல்வாக்கு மிக்க பழனி மாணிக்கத்திற்கு இந்த முறை வாய்ப்பு மறுக்கப்பட்டு புது முகத்திற்கு திமுக வாய்ப்பு வழங்கியுள்ளது. ச.முரசொலி என்பவர் திமுக சார்பில் களமிறக்கப்பட்டுள்ளார். சட்டப் படிப்பு படித்துள்ள முரசொலி, தஞ்சாவூர் திமுக ஒன்றியக் குழு உறுப்பினராக பதவி வகித்தார்.


கட்சியில் பொதுக் குழு உறுப்பினராகவும் தற்போது தஞ்சாவூர் வடக்கு ஒன்றிய செயலாளராகவும் உள்ளார். அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள தேமுதிக சார்பில் சிவநேசன் போட்டியிடுகிறார். அதேபோல, பாஜக கூட்டணியில் பாஜகவே தன்னுடைய வேட்பாளரை களத்தில் இறக்கியுள்ளது. அந்த வகையில், இங்கு கருப்பு முருகானந்தம் போட்டியிடுகிறார்.


பாஜக கூட்டணி கட்சிகளான அமமுக,  தமாகா, ஓபிஎஸ் அணி தஞ்சை தொகுதியை கேட்டு பிடிவாதம் பிடித்து வந்தது. ஆனால், கடைசியில், பாஜகவே இந்த தொகுதியில் போட்டியிடுகிறது. இந்த தொகுதியில், திமுக, தேமுதிக, பாஜக ஆகிய கட்சிகளுக்கு இடையே மும்முனை போட்டி நிலவி வருகிறது.