தஞ்சாவூர்: அரசியல் நாகரிகம் இதுதான் என்பதை உறுதிப்படுத்தும் வகையில் வெற்றி வாய்ப்பை உறுதி செய்த திமுக வேட்பாளர் முரசொலிக்கு பாஜக வேட்பாளர் கருப்பு முருகானந்தம் வாழ்த்துக்கள் தெரிவித்தார்.


தஞ்சாவூர் பாராளுமன்ற தொகுதி வாக்குகள் குந்தவை நாச்சியார் கல்லூரியில் நடைபெற்று வந்தது. 23 சுற்றுகள் கொண்ட வாக்கு எண்ணும் பணியின் போது மாலை 4 மணி அளவில் வாக்கு எண்ணும் மையத்திற்கு  திமுக வேட்பாளர் முரசொலி மற்றும் பாஜக வேட்பாளர் கருப்பு முருகானந்தம் ஆகியோர் வருகை தந்தனர்.


இவர்கள் அனைவரும் வாக்கு இன்னும் மையம் பகுதியில் வரிசையாக அமர்ந்திருந்தனர். அப்போது 21 சுற்றுகள் நிறைவடைந்து இருந்த நிலையில் திமுக வேட்பாளர் முரசொலியின் வெற்றி உறுதியான நிலையில் இருந்தது. இதனால் திமுக தொண்டர்கள் வாக்கு மையத்தின் வெளிப்புறத்தில் வெடி வெடித்து வெற்றியை உற்சாகமாக கொண்டாட தொடங்கினர்.


அப்போது பாஜக வேட்பாளர் கருப்பு முருகானந்தம் திமுக வேட்பாளர் முரசொலிக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தார். இதேபோல் தேமுதிக வேட்பாளர் சிவனேசனும் வாழ்த்துக்கள் தெரிவித்து மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார். இந்த தேர்தலில் தேமுதிக வேட்பாளர் சிவனேசன் இரண்டாம் இடம் பிடித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


தஞ்சாவூர் நாடாளுமன்ற தொகுதியில் எண்ணப்பட்ட  தபால் ஓட்டுக்களின் விபரம் வருமாறு: 


திமுக வேட்பாளர் முரசொலி 3423,  தேமுதிக வேட்பாளர் சிவனேசன் 490,  பாஜ வேட்பாளர்  முருகானந்தம் 1026, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஹிமாயூன் கபீர் 610வாக்குகள் பெற்றிருந்தனர். தபால் வாக்குகளிலும் நோட்டாவிற்கு 159 வாக்குகள் கிடைத்துள்ளது. இதில் சுயேச்சை வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் என மொத்தம் 5910 வாக்குகள்.  பதிவான 6454 வாக்குகளில் 544 வாக்குகள் செல்லாதவை என அறிவிக்கப்பட்டது.