ஆந்திர சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடுவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். 


இந்தியாவில் கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி முதல் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டங்களாக மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த வாக்குப்பதிவோடு மே 13 ஆம் தேதி ஆந்திர மாநிலத்துக்கும் சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. இதில் தெலுங்கு தேசம் கட்சியும், ஆளும் கட்சியாக இருந்த ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியும் நேருக்கு நேர் மோதின. 175 சட்டமன்ற தொகுதிகளைக் கொண்ட ஆந்திராவில் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி தனித்து போட்டியிட்டது. 






அதேசமயம் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி தலைமையிலான கூட்டணியில் பாஜகவும், பவன் கல்யாணின் ஜனசேனா கட்சியும் இணைந்து தேர்தலை சந்தித்தது.இன்று பதிவான வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில் தெலுங்கு தேசம் கட்சி 133 இடங்களிலும், ஜனசேனா கட்சி 21, பாஜக 8, ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் 13 இடங்களிலும் முன்னிலை பெற்றுள்ளது. இதில் 88 இடங்களை வென்றால் ஆந்திராவில் ஆட்சியமைக்கலாம் என்ற நிலையில் தேவைக்கு அதிகமாக தனிப்பெரும்பான்மையுடன் தெலுங்கு தேசம் கட்சி ஆட்சியமைக்க உள்ளது. ஜூன் 9 ஆம் தேதி ஆந்திர முதலமைச்சராக சந்திரபாபு நாயுடு பதவியேற்க உள்ளதாக கூறப்படுகிறது. 






இதனிடையே பிரதமர் மோடி ஆந்திர சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்றதற்காக தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்தார். அதேபோல் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். சமூக வலைத்தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ள அவர், “ஆந்திர சட்டசபை தேர்தலில் அமோக வெற்றி பெற்ற சந்திரபாபு நாயுடு மற்றும் தெலுங்கு தேசம் கட்சியினருக்கு வாழ்த்துகள்! உங்கள் தலைமை ஆந்திர பிரதேசத்திற்கு செழிப்பையும் முன்னேற்றத்தையும் கொண்டு வரட்டும், அதன் வழியாக மக்களின் நம்பிக்கைகளும் கனவுகளும் நிறைவேறட்டும்” என தெரிவித்துள்ளார்.