தஞ்சாவூரில் பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதி 8வது சுற்றின் போது வாக்கு எண்ணிக்கை எந்திரத்தில் பேட்டரி பழுதானதால் அந்த இயந்திரம் தனியாக ஒதுக்கி வைக்கப்பட்டது.


தஞ்சாவூர் நாடாளுமன்ற தொகுதி வாக்கு எண்ணிக்கை பணி தஞ்சை குந்தவை நாச்சியார் கல்லூரியில் நடந்து வந்தது. ஆரம்பத்தில் இருந்து எவ்வித பிரச்சனையும் இன்றி வாக்கு எண்ணிக்கை நடந்து வந்தது. 


இந்நிலையில் பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் எட்டாவது சுற்று வாக்குகள் எண்ணும் பணியின் போது ஒரு வாக்கு இயந்திரத்தில் பேட்டரி பழுதானது. இதனால் அதில் பதிவான வாக்குகள் எண்ண முடியாத நிலை ஏற்பட்டது.


இந்த இயந்திரத்தை தனியாக ஒதுக்கி வைத்து விட்டு மற்ற இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி தொடர்ந்தது. இறுதியில் அதில் பதிவான வாக்குகள் எண்ணப்படும் என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவித்தனர். பழுதான வாக்கு இயந்திரத்தில் 754 வாக்குகள் பதிவாகியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.




தஞ்சாவூர் மக்களவைத் தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை மையத்துக்கு விவசாயிகள் சங்கத்தினர் துண்டு அணிந்து வந்ததால் சலசலப்பு ஏற்பட்டது.


வாக்கு எண்ணிக்கை மையத்திற்குள் வேட்பாளர்கள், வேட்பாளர்களின் முகவர்கள் துண்டு அணிந்து வருவதற்கு அனுமதி மறுக்கப்பட்டது.


இந்நிலையில் தமிழ்நாடு காவிரி விவசாய சங்கம் சார்பாக செந்தில்குமாரின் முகவர்களாக விவசாயிகள் சங்கத்தினர் கழுத்தில் பச்சை நிற துண்டு அணிந்து வந்தனர். இவர்களுக்கு துண்டு அணிந்து வர மைய நுழைவாயிலில் போலீசார். அனுமதி மறுத்தனர். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. 


அப்பகுதியில் சலசலப்பானதைத் தொடர்ந்து, விவசாயிகள் சங்கத்தினர் மட்டும் துண்டு அணிந்து கொண்டு உள்ளே செல்ல அனுமதிக்கப்பட்டனர்.


இதேபோல் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் எம்.ஐ. ஹூமாயூன் கபீர் செல்போனுடன் வாக்கு எண்ணிக்கை மையத்திற்குள் வந்தார். அவரிடம் செல்போன் எடுத்துச் செல்ல அனுமதி இல்லை என்று போலீசார் தெரிவித்தனர். இதை எடுத்து வேட்பாளர் ஹூமாயூன் கபீர் வெளியில் போலீசாரிடம் செல்போனை கொடுத்து டோக்கன் வாங்கிச் சென்றார். நான் விதியை மதித்து செல்வேன் என்பது போல் நடந்து கொண்ட அவரது செயல் பாராட்டுகளை பெற்றது.