மயிலாடுதுறை நாடாளுமன்ற தொகுதிக்கான பாபநாசம் சட்டமன்ற தொகுதி வாக்கு எந்திரம் வைக்கப்பட்டிருந்த பாதுகாப்பு அறையின் பூட்டு சாவி தொலைந்தால் பூட்டை உடைந்து கதவை திறந்து எந்திரங்களை அலுவலர்கள் எடுத்துள்ளனர்.


நாடாளுமன்ற தேர்தல் 


இந்திய தேர்தல் ஆணையம் பாராளுமன்ற பொதுத்தேர்தலுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதி தேர்தல் ஏப்ரல் 19 -ம் தேதி தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்றது. அதனை தொடர்ந்து ஜுன் 4 -ம் தேதியான இன்று பதிவான வாக்குகள் எண்ணப்பட உள்ளது. இந்நிலையில் வேட்பு மனுதாக்கல் கடந்த மாதம் மார்ச் 27 அன்று வரை நடைபெற்றதில் 30 வேட்பு மனுக்கள் பெறப்பட்டது. அதில் வேட்பு மனுக்கள் பரிசீலனை மார்ச் 28 -ம் தேதி அன்று நடைபெற்றது. அதன்படி 17 வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டது, மீதம் உள்ள 13 வேட்பு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து களத்தில் 17 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.




தொகுதி விபரம்


மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதியில் மயிலாடுதுறை மாவட்டத்தில் அடங்கியுள்ள 160-சீர்காழி (தனி) , 161 - மயிலாடுதுறை , 162- பூம்புகார் மற்றும் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள 170- திருவிடைமருதூர் (தனி), 171 - கும்பகோணம் மற்றும்  172-பாபநாசம் ஆகிய ஆறு சட்டமன்ற தொகுதிகள் அடங்கி உள்ளது. மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதியில் சீர்காழி சட்டமன்ற தொகுதியில் 1,22,727 ஆண் வாக்காளர்களும், 1,25,660 பெண் வாக்காளர்களும், 11 மூன்றாம் பாலினத்தவர்களும், மயிலாடுதுறை சட்டமன்ற தொகுதியில் 1,16,611 ஆண் வாக்காளர்களும், 1,18,948 பெண் வாக்காளர்களும், 10 மூன்றாம் பாலினத்தவர்களும், பூம்புகார் சட்டமன்ற தொகுதியில் 1,33,264 ஆண் வாக்காளர்களும், 1,37,454 பெண் வாக்காளர்களும், 3 மூன்றாம் பாலினத்தவர்களும், திருவிடைமருதூர் சட்டமன்ற தொகுதியில் 1,29,763 ஆண் வாக்காளர்களும், 1,32,931 பெண் வாக்காளர்களும் , 12 மூன்றாம் பாலினத்தவர்களும், கும்பகோணம் சட்டமன்ற தொகுதியில் 1,30,162 ஆண் வாக்காளர்களும், 1,37,298 பெண் வாக்காளர்களும் , 15 மூன்றாம் பாலினத்தவர்களும், பாபநாசம் சட்டமன்ற தொகுதியில் 1,27,410 ஆண் வாக்காளர்களும், 1,33,268 பெண் வாக்காளர்களும், 21 மூன்றாம் பாலினத்தவர்களும் ஆக மொத்தம் 15,45,568 வாக்காளர்கள் உள்ளனர்.




பதிவான வாக்குகள்


160. சீர்காழி சட்டமன்ற தொகுதியில் 86,100 ஆண் வாக்காளர்களும், 91,815 பெண் வாக்காளர்களும், மூன்றாம் பாலினத்தவர்கள் 4 பேரும் என மொத்தம் 1,77,919 வாக்குகள் பதிவாகின.


161. மயிலாடுதுறை சட்டமன்ற தொகுதியில் 80,308 ஆண் வாக்காளர்களும், 82,542 பெண் வாக்காளர்களும், மூன்றாம் பாலினத்தவர்கள் 2 பேரும் என மொத்தம் 1,62,852 வாக்குகள் பதிவாகின. 


162. பூம்புகார் சட்டமன்ற தொகுதியில் 93,162 ஆண் வாக்காளர்களும், 1,00,872 பெண் வாக்காளர்களும், மூன்றாம் பாலினத்தவர்கள் 1 பேரும் என மொத்தம் 1,94,035 வாக்குகள் பதிவாகின. 



170. திருவிடைமருதூர் சட்டமன்ற தொகுதியில் 89,873 ஆண் வாக்காளர்களும், 94,858 பெண் வாக்காளர்களும், மூன்றாம் பாலினத்தவர்கள் 3 பேரும் என மொத்தம் 1,84,734 வாக்குகள் பதிவாகின. 



171. கும்பகோணம் சட்டமன்ற தொகுதியில் 89,058 ஆண் வாக்காளர்களும், 92,808 பெண் வாக்காளர்களும், மூன்றாம் பாலினத்தவர்கள் 2 பேரும் என மொத்தம் 1,81,868 வாக்குகள் பதிவாகின. 



172. பாபநாசம் சட்டமன்ற தொகுதியில் 87,028 ஆண் வாக்காளர்களும், 94,798 பெண் வாக்காளர்களும், மூன்றாம் பாலினத்தவர்கள் 9 பேரும் என மொத்தம் 1,81,835 வாக்குகள் பதிவாகின. 
  




வாக்குசாவடிகள் விபரம்


மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதியில் சீர்காழி சட்டமன்ற தொகுதியில் 288 வாக்குசாவடிகளும், மயிலாடுதுறை சட்டமன்ற தொகுதியில் 266 வாக்குசாவடிகளும், பூம்புகார் சட்டமன்ற தொகுதியில் 306 வாக்குசாவடிகளும், திருவிடைமருதூர் சட்டமன்ற தொகுதியில் 293 வாக்குசாவடிகளும், கும்பகோணம் சட்டமன்ற தொகுதியில் 289 வாக்குசாவடிகளும், பாபநாசம் சட்டமன்ற தொகுதியில் 301 வாக்குசாவடிகளும் என மொத்தம் 1743 வாக்குசாவடிகளில் வாக்குபதிவு நடைபெற்றது.


 


வாக்கு எண்ணும் பணி அலுவலர்கள் விபரம் 


வாக்கு எண்ணிக்கை அலுவலர்கள் 706 பேரும், 111 நுண் பார்வையாளர்களும், பாதுகாப்பு பணியில் 593 காவலர்களும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.



வாக்கு எண்ணும் மேசைகள் விவபரம் மற்றும் சுற்றுகள்


ஒரு சட்டமன்ற தொகுதிக்கு 14 மேசைகள் வீதம் 84 மேசைகளும், தபால் வாக்கு எண்ணும் அறையில் 7 மேசைகள் அமைக்கப்பட்டுள்ளது. சீர்காழி சட்டமன்ற தொகுதிக்கு 21 சுற்றுக்களும், மயிலாடுதுறை சட்டமன்ற தொகுதிக்கு 19 சுற்றுக்களும், பூம்புகார் சட்டமன்ற தொகுதிக்கு 22 சுற்றுக்களும், திருவிடைமருதூர் சட்டமன்ற தொகுதிக்கு 21 சுற்றுக்களும், கும்பகோணம் சட்டமன்றத் தொகுதிக்கு 21 சுற்றுக்களும், பாபநாசம் சட்டமன்ற தொகுதிக்கு 22 சுற்றுக்கள், தபால் வாக்குகளுக்கு 2 சுற்றுக்கள் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.


இந்நிலையில் ஆறு சட்டமன்ற தொகுதிகளை ஒருங்கிணைத்த மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதிக்கான வாக்குகள் மன்னம்பந்தல் பகுதியில் உள்ள ஏவிசி பொறியியல் கல்லூரியில்  எண்ணப்படுகிறது. இதனை முன்னிட்டு ஏவிசி தனியார் கல்லூரியில் வாக்கு பெட்டிகள்  பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டு இருந்தது. இதனிடையே இன்று காலை மாவட்ட ஆட்சியரும் , தேர்தல் அலுவலருமான மகாபாரதி முன்னிலையில் பாதுகாப்பு அறைகள் திறக்கப்பட்டு வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது.




பூட்டை உடைத்து வாக்கு பெட்டி எடுப்பு


மயிலாடுதுறை தொகுதிக்குட்பட்ட மயிலாடுதுறை, பூம்புகார், சீர்காழி, திருவிடைமருதூர், பாபநாசம், கும்பகோணம் ஆகிய 6 தொகுதிகளில் வாக்குகள் பதிவான வாக்குப் பதிவு இயந்திரங்கள் கல்லூரியில் தனித்தனி பாதுகாப்பு அறைகளில் வைக்கப்பட்டு பூட்டி சீலிடப்பட்டிருந்தன. இன்று வாக்கு எண்ணும் பணிக்காக தேர்தல் பார்வையாளர், தேர்தல் நடத்தும் அலுவலர்கள், கட்சிகளின் முகவர்கள் முன்னிலையில் சீல் அகற்றப்பட்டு, பூட்டு திறக்கப்பட்டு அறையில் இருந்து வாக்குப் பதிவு இயந்திரங்கள் வாக்கு எண்ணும் அறைக்கு எடுத்துச் செல்லப்பட்டன. அவ்வாறு பாபநாசம் சட்டப்பேரவை தொகுதியில் பதிவான வாக்குகள் அடங்கிய வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டிருந்த பாதுகாப்பு அறையின் ஒரு பூட்டின் சாவியை அலுவலர் தொலைத்துவிட்டதால், மாவட்ட ஆட்சியரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான ஏ.பி.மகாபாரதி, தேர்தல் பார்வையாளர்(பொது) கன்ஹூராஜ் ஹச் பகதே ஆகியோர் முன்னிலையில் பூட்டு உடைக்கப்பட்டு, பின்னர் வாக்குப் பதிவு இயந்திரங்கள் எடுத்துச் செல்லப்பட்டன. இதுகுறித்து ஆட்சியர் கூறுகையில், பூட்டு சரிவர வேலை செய்யவில்லை என தெரிவித்துள்ளார்.