ABP Cvoter Exit Poll 2024 Tamil Nadu: பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நடந்து முடிந்துள்ளது. கிட்டத்தட்ட கடந்த ஒன்றரை மாதங்களாக நடந்த தேர்தல், 141 கோடி இந்தியர்களின் எதிர்காலத்தை தீர்மானிக்க உள்ளது. ஏப்ரல் 19, ஏப்ரல் 26, மே 7, மே 13, மே 20, மே 25, ஜூன் 1 என 7 கட்டங்களாக வாக்குப்பதிவு நடத்தப்பட்டது.


நாட்டின் நாடித்துடிப்பை கணிக்கும் கருத்துக்கணிப்புகள்: குஜராத்தில் உள்ள சூரத் தொகுதியில் பாஜகவை தவிர மற்ற வேட்பாளர்கள் அனைவரும் வேட்பு மனுவை வாபஸ் வாங்கியதால் அங்கு தேர்தல் நடைபெறவில்லை. பாஜக வேட்பாளர் முகேஷ் தலால் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது.


எனவே, சூரத்தை தவிர்த்து இந்தியா முழுவதும் 542 தொகுதிகளுக்கு தேர்தல் நடத்தப்பட்டது. வாக்குப்பதிவை தொடர்ந்து களத்தை ஓரளவுக்கு பிரதிபலிக்கும் தேர்தலுக்கு பிந்தைய கருத்துகணிப்புகளுக்காக அனைவரும் காத்துக்கொண்டிருக்கின்றனர். 


இந்த நிலையில், பல்வேறு செய்தி நிறுவனங்கள் நடத்திய தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியிடப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டின் நிலவரம் என்ன என்பது பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது. இந்தியா கூட்டணி, தனது ஆதிக்கத்தை தொடருமா அல்லது இந்தியா கூட்டணியின் கனவை அதிமுக சிதைக்குமா என பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன. 


மாஸ் காட்டிய இந்தியா கூட்டணி: அந்த வகையில், ABP-Cvoter எடுத்த கருத்துக்கணிப்பு முடிவுகளின், தமிழ்நாட்டில் 37 முதல் 39 தொகுதிகள் வரை இந்தியா கூட்டணி வெல்லும் என கணிக்கப்பட்டுள்ளது. 0 முதல் 1 தொகுதிகளை பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி கைப்பற்றும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதில் கவனிக்க வேண்டியது என்னவென்றால் பிரதான எதிர்க்கட்சியான அதிமுக ஒரு தொகுதியில் மட்டுமே வெற்றி பெறும் என ABP-Cvoter கணித்துள்ளது. கடந்த 2019, 2021 என தொடர்ந்து தேர்தல்களிலும் அதிமுக தலைமையிலான கூட்டணி தோல்வியை சந்தித்தது.


ஓ. பன்னீர்செல்வம், டி.டி.வி தினகரன் ஆகியோர் கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்ட நிலையில், அதிமுக பல சவால்களை சந்தித்து வருகிறது. இப்படிப்பட்ட சூழலில், கடந்த 2 தேர்தல்களில் பாஜக உள்ளிட்ட கட்சிகளுடன் அதிமுக கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தது.


தொடர் தோல்வியில் அதிமுக: 2019 மக்களவை தேர்தலை பொறுத்தவரையில் தேனியில் மட்டும் அதிமுக வெற்றிபெற்றது. 2021 சட்டப்பேரவை தேர்தலில், 66 இடங்களில் மட்டுமே அதிமுக வெற்றிபெற்றது. இதனால், ஆட்சியை பறிகொடுத்தது. இதையடுத்து நடந்த உள்ளாட்சி தேர்தல்களிலும் அதிமுகவுக்கு தோல்வியே மிஞ்சியது. 


இச்சூழலில், 2024 மக்களவை தேர்தலிலும் அதிமுகவுக்கு தோல்வியே மிஞ்சும் என தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் தெரிவித்திருப்பது அக்கட்சிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. இந்த தேர்தலில் தமிழ்நாட்டில் 46.3 சதவிகித வாக்குகளை இந்தியா கூட்டணி பெறும் என்றும் 21 சதவிகித வாக்குகளை அதிமுக கூட்டணி பெறும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.


பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 18.9 சதவிகித வாக்குகளை பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மற்ற கட்சிகளுக்கு 13.8 சதவிகித வாக்குகள் கிடைக்கும் என கூறப்பட்டுள்ளது.


Exit Poll Results 2024 LIVE: பாஜகவா? இந்தியாவா? மக்களின் மனநிலை என்ன? கருத்துக் கணிப்பு என்ன சொல்லுது? உடனுக்குடன் அப்டேட்ஸ்