கடலூரில் ‘கருடன்’ படம் பார்க்க நரிக்குறவர்கள் அனுமதிக்கப்படாத நிலையில், கோட்டாட்சியரிடம் புகார் தெரிவித்ததை அடுத்து வட்டாட்சியர் டிக்கெட் வாங்கி கொடுத்து தியேட்டருக்குள் அனுப்பி வைத்தார்.
ராணிப்பேட்டை மாவட்டத்தை சேர்ந்த 30க்கும் மேற்பட்ட நரிக்குறவர் குடும்பத்தினர் கடலூர் மாவட்டத்தில் இரண்டு சக்கர வாகனத்தில் வந்து பாத்திரங்கள் விற்பனை செய்து வருகின்றனர். இவர்கள் கடந்த ஒரு வார காலமாக கடலூரில் தங்கி பாத்திர விற்பனையில் ஈடுபட்டு வந்த நிலையில் இன்று கடலூர் அண்ணா பாலம் அருகே உள்ள சினிமா தியேட்டரில் நடிகர் சூரி நடித்த கருடன் படம் பார்ப்பதற்காக 30 பேர் வந்திருந்தனர். திரைப்படம் பார்ப்பதற்கு வந்தவர்களை திரையரங்கு நிர்வாகம் டிக்கெட் கொடுக்க மறுத்ததாக கூறப்படுகின்றது. டிக்கெட் வழங்குவார்கள் என காத்திருந்து அவர்கள் நிர்வாகத்திடம் கேட்டபோது டிக்கெட் வழங்க முடியாது என கூறிவிட்டதாக தெரிய வருகிறது.
இந்த நிலையில், இச்சம்பவம் தொடர்பாக சினிமா பார்க்க வந்த நரிக்குறவர் அனைவரும் கடலூர் புதுநகர் காவல் நிலையத்திற்கு வந்து முறையிட்டனர். அங்கு இருந்த காவலர்கள் வருவாய் கோட்டாட்சியரிடம் மனு அளிக்க அவர்களை அனுப்பி வைத்தனர். இதனைத் தொடர்ந்து நரிக்குறவர்கள் அனைவரும் தங்களது இரண்டு சக்கர வாகனத்தில் கடலூர் கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு வந்தனர். கோட்டாட்சியர் அலுவலகத்தில் அதிகாரிகள் இல்லாததால் நரிக்குறவர்கள் இனத்தை சேர்ந்தவர்கள் நீண்ட நேரம் மனு அளிக்க காத்திருந்த நிலையில் கோட்டாட்சியர் வட்டாட்சியர் தலைமையில் விசாரணைக்கு உத்தரவிட்டார்.
அதனை தொடர்ந்து கடலூர் வட்டாட்சியர் பலராமன் சம்பவ இடத்திற்கு வந்து நரிக்குறவர்களிடம் பேசி பின்னர் அவர்கள் அனைவரையும் தியேட்டருக்கு அழைத்துச் சென்றார். அங்கு சென்று அவர்கள் அனைவருக்கும் டிக்கெட் வாங்கி கொடுத்து படம் பார்க்க அனுப்பி வைத்தார். அதன்பிறகு அவர்கள் டிக்கெட்டைப் பெற்றுக் கொண்டு தியேட்டரில் உட்கார்ந்து ஆனந்தமாக கருடன் திரைப்படத்தை ரசித்தனர். கடலூரில் நரிக்குறவர்கள் தியேட்டருக்குள் அனுமதிக்கப்படாத சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.