வடகிழக்கு மாநிலத்தில் மிகவும் முக்கியமான மாநிலங்களில் ஒன்று சிக்கிம். இந்த மாநிலத்திற்கான சட்டசபை பதவிக்காலம் முடிவடைவதால், நாடு முழுவதும் நடைபெற்ற மக்களவைத் தேர்தலுடன் சிக்கிம் மாநிலத்திற்குமான சட்டசபைத் தேர்தலும் நடைபெற்றது.


சிக்கிமில் விறுவிறுப்பான வாக்கு எண்ணிக்கை:


சிக்கிம் மாநிலத்தில் முழுக்க முழுக்க மாநில கட்சிகளே முக்கிய போட்டியாளர்களாக உள்ளனர். அந்த மாநிலத்தில் ஆட்சியை தக்க வைக்க சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சாவிற்கும், சிக்கிம் ஜனநாயக முன்னணிக்கும் இடையே கடும் போட்டி ஏற்பட்டது.


கடந்த 25 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த சிக்கிம் ஜனநாயக முன்னணி கட்சியை வீழ்த்தி, கடந்த முறை சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா ஆட்சியை பிடித்தது. இதனால், மீண்டும் ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் சிக்கிம் ஜனநாயக முன்னணியும், ஆட்சியை தக்க வைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சாவும் களமிறங்கின.


அசுர பலத்துடன் ஆட்சியமைக்கும் ஆளுங்கட்சி:


மொத்தம் உள்ள 32 தொகுதிகளுக்கும் காலை 6 மணிக்கே வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதலே 32 தொகுதிகளிலும் ஆளுங்கட்சியான கிராந்திகாரி மோர்ச்சாவே முன்னணியில் இருந்து வருகிறது. தற்போதைய நிலவரப்படி, மொத்தம் உள்ள 32 தொகுதிகளில் 31 தொகுதிகளில் கிராந்திகாரி மோர்ச்சா முன்னணியில் உள்ளது.


இதனால், சிக்கிமில் மீண்டும் கிராந்திகாரி மோர்ச்சா ஆட்சி தொடர்வது உறுதியாகியுள்ளது. எதிர்க்கட்சியான சிக்கிம் ஜனநாயக முன்னணி கட்சி 1 இடத்தில் மட்டுமே முன்னணியில் உள்ளது. இதன்மூலம் சிக்கிம் மாநிலத்தின் முதலமைச்சராக மீண்டும் பிரேம் சிங் தமாங் பொறுப்பேற்க உள்ளது உறுதியாகியுள்ளது.


32 தொகுதிகளில் 31ல் முன்னணி:


சிக்கிமில் நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் மொத்தம் 79.88 சதவீத வாக்குகள் பதிவாகியது. கடந்த முறை 17 தொகுதிகள் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றிய சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா இந்த முறை 31 தொகுதிகளில் முன்னணியில் உள்ளது. இதனால், அசுர பலத்துடன் சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா ஆட்சியை அமைக்க உள்ளது.


சிக்கிம் மாநிலத்தின் நட்சத்திர வேட்பாளர்களாக முதலமைச்சர் பிரேம்சிங் தமாங், முன்னாள் முதலமைச்சருமான சிக்கிம் ஜனநாயக முன்னணி தலைவர் பவன்குமார் சாம்லிங், இந்திய கால்பந்தின் முன்னாள் கேப்டன் பாய்சிங் பூட்டியா ஆகியோர் உள்ளனர்.


முதலமைச்சர் தமாங் இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டுள்ளார். காங்க்டங் மாவட்டத்தில் உள்ள ரெனோக் தொகுதியிலும், சாகுங்க் மாவட்டத்தில் உள்ள சோரங்க் தொகுதியிலும் அவர் போட்டியிட்டார். இரண்டு தொகுதியிலும் அவர் முன்னணியில் உள்ளார். அவரது மனைவி கிருஷ்ணகுமாரி நம்சி தொகுதியில் போட்டியிட்டார். அவரும் முன்னணியில் உள்ளார்.


மேலும் படிக்க: Assembly Election Results 2024 LIVE: விறுவிறுப்பான வாக்கு எண்ணிக்கை! அருணாச்சல், சிக்கிமில் தற்போதைய நிலவரம் என்ன?


மேலும் படிக்க: Lok Shaba Exit Poll 2024: மக்களவைத் தொகுதிகள் 543: பல்வேறு கருத்து கணிப்புகள் எப்படி இருக்கு? - ஒரு பார்வை