மதுரை மாநகராட்சி மாமன்றத்தில் உள்ள பெரியார் கூட்டரங்கில் நடைபெற்ற பதவியேற்பு விழாவுக்கு ஆணையர் மரு.கார்த்திகேயன் தலைமை வகித்தார். பகல் 12  மணியளவில்  இந்திராணி உறுதிமொழியேற்றார். பின்னர், அவருக்கு பதவிப் பிரமாணம் செய்துவைத்து, மேயருக்கான வெள்ளிச் செங்கோலை ஆணையர் வழங்கினார். முன்னதாக, மேயர் அணியும் கருப்பு அங்கியும், தங்கச் சங்கிலியும் அணிந்து வருகை தந்த    இந்திராணிக்கு,  நிதி மற்றும் மனித வள மேலாண்மை துறை அமைச்சர்  பழனிவேல் தியாகராஜன் மற்றும் திமுக மாமன்ற உறுப்பினர்கள் வரவேற்பு அளித்தனர். 
 
இவ்விழாவில் பாராளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன், சட்டமன்ற உறுப்பினர் பூமிநாதன், துணை ஆணையாளர் சங்கீத உட்பட பொதுமக்கள் கலந்து கொண்டனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், ஆறு வருடம் தாமதமாக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றுள்ளது. கடந்த ஏழு ஆண்டுகளில் இருந்த  நிதிநிலை மேலாண்மை உள்ளிட்டவற்றை  9 மாதத்தில் சீர்திருத்தம் செய்துள்ள  நம்பிக்கையின் அடிப்படையில் மக்கள் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தி.மு.கவிற்கு வாய்ப்பு வழங்கி உள்ளார்கள். மக்களின் அடிப்படை கட்டமைப்பு வசதிகள் இன்னும் மேம்படவில்லை. கட்டமைப்புகளை மேம்படுத்துவதே முதல் இலக்கு கொண்டு செயல்படுவோம்.
 
 
மதுரை மாநகராட்சியின் வரலாற்றில் புதிய ஆரம்பம் இன்று. வரும் 5 ஆண்டு காலம் இதுவரை அடையாத வளர்ச்சியை கொண்டு வர புதிய மேயர் நடவடிக்கை எடுப்பார்.  தவறான  திசையில் சென்ற தி.மு.க.,வின் பிம்பம் இன்று தெளிவடைந்துள்ளது. எந்தவித காரசரமும் குழப்பமும் இல்லாமல் தேர்தல் நடைபெற்று பதவிகள் வழங்கப்பட்டுள்ளது" என்றார்.