தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகின்ற 19 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனையடுத்து தமிழ்நாடு முழுவதும் தேர்தல் திருவிழா சூடுபிடித்துள்ளது. தேர்தலை தொடர்ந்து அனைத்து கட்சிகளும், சுயேச்சை வேட்பாளர்களும் வேட்புமனு தாக்கல் செய்ய இறுதி நாளான நேற்று வேட்பு மனுக்களை தாக்கல் செய்தது தங்கள் பிரச்சாரத்தை துவங்கி உள்ளனர். சீர்காழி நகராட்சி 24 வார்டுகள் உள்ள நிலையில் அனைத்து கட்சி ஏற்பாடுகளையும் சேர்த்து மொத்தமாக 150 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.
இந்நிலையில் சீர்காழி நகராட்சிக்கு உட்பட்ட 5 வது வார்டில் அதிமுக சார்பில் போட்டியிடும் அஞ்சலிதேவி நெடுஞ்செழியன் என்பவர் நகராட்சியில் உதவி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார். முன்னதாக தனது வார்டுக்கு உட்பட்ட பகுதிகளை சேர்ந்த வாக்காளர்கள் சுமார் 200 க்கும் மேற்பட்டவர்களுடன் வேட்பாளர் அஞ்சலிதேவி நெடுஞ்செழியன் முக்கிய வீதி வழியாக ஊர்வலமாக வந்தார். அப்போது சீர்காழி பழைய பேருந்து நிலையம் பகுதியில் அமைந்துள்ள இரட்டை காளியம்மன் கோயிலில் தனது பகுதி வாக்காளர்கள் உடன் வந்த வேட்பாளர் அஞ்சலிதேவி சுவாமி தரிசனம் செய்தார்.
தொடர்ந்து சாமி தரிசனத்திற்கு பின்னர் இரட்டை காளியம்மன் கோயில் நின்று இத்தேர்தலில் வெற்றி பெற்ற ஒரு மாதத்தில் ஈசானிய தெருவில் உள்ள அரசு டாஸ்மாக் கடையை அப்புறப்படுத்த தீவிர நடவடிக்கை எடுப்பேன் என்றும், தனது வார்டில் மக்களுக்கு கணினி மையம் அமைத்து இலவசமாக இ -சேவை பதிவுகள் செய்யப்படும் என்று இது கடவுள் முன்னிலையில் தனது வாக்குறுதி என தெரிவித்தார்.
Local Body Election: மயிலாடுதுறையில் நாம் தமிழர் கட்சி சார்பில் களம் காணும் 75 வயது பாட்டி
தேர்தலில் போட்டியிடுபவர்கள் இன் வாக்குறுதி பெருமளவு நிறைவேற்றப்படாமல் மக்கள் மத்தியில் அதிருப்தி ஏற்படும் இந்த காலகட்டத்தில் தனது வார்டு மக்களிடம், தனது தேர்தல் வாக்குறுதி 100 சதவீதம் நிறைவேற்றப்படும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தும் விதமாக அதிமுக வேட்பாளர் வாக்காளர்களை கோயிலுக்கு அழைத்துவந்து வாக்குறுதி அளித்த நிகழ்வு, அவரை எதிர்த்து போட்டியிடும் வேட்பாளர்களை சற்று கலங்கடிக்க செய்துள்ளது என அரசியல் விமர்சகர் கருத்து தெரிவித்துள்ளனர்.